Jul 31, 2015

சசிபெருமாள் அய்யா மரணம்! டாஸ்மாக்கை மூடும் அவரின் கனவை நனவாக்குவோம்


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை அருகே, மக்கள் கோவில், பள்ளி அருகே அரசின் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தொடர்போராட்டம் நடத்தி வந்தனர். போராடும் மக்களோடு அய்யா சசி பெருமாள் துணை நின்றார்.

கடைகளை மூடும் மக்கள் கோரிக்கையை மதிக்காத அரசை கண்டித்து, இன்று காலையில் 200 அடி செல்போன் டவரில் ஏறி 4 மணி நேரம் போராடினார். இதனால் உடல்நலம் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனை போகிற வழியிலேயே இறந்தார் என செய்தி அறிந்தோம்.

தன் வாழ்நாள் முழுவதும் டாஸ்மாக் கடையை முற்றிலும் மூடவேண்டும் என உறுதியாக போராடிய அய்யா சசிபெருமாளின் போராட்ட குணத்தை வரித்துக்கொள்வோம்!

மக்களை திரட்டி, தொடர் போராட்டங்களை நடத்தி, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடி, அய்யா சசிபெருமாள் அவர்களின் கனவை நனவாக்குவோம்!



Jul 27, 2015

நீதிபதிகள் என்ன… பெரிய கொம்பா?


(சென்னை உயர்நீதி மன்றத்தில் பரவலாக ஒட்டப்பட்ட சுவரொட்டி)

’இவர்கள் எங்கே போவது நியாயமாரே?’ என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் சமஸ் 23, ஜூலை 2015 ‘தமிழ் இந்து’ பத்திரிக்கையில் கட்டுரை எழுதியிருந்தார்.

”1. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள 4.2 லட்சம் சிறைவாசிகளில் 53% பேர் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்கள் என்கிறது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம். நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் சிறைவாசிகளில் 45.8% பேர் தலித்துகள்/ஆதிவாசிகள். குஜராத் சிறைவாசிகளில் 43.6% பேர் தலித்துகள்/ஆதிவாசிகள்.

2. மரண தண்டனைக் கைதிகள் 373 பேரில் நால்வரில் மூவர் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர். பயங்கரவாதக் குற்றங்களுக்காகத் தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்களில் 93.5% பேர் தலித்துகள் /சிறுபான்மையினர். மரண தண்டனைக் கைதிகளில் 75% பேர் பொருளாதாரரீதியாக மிக மோசமான நிலையில் இருப்பவர்கள் என்கிறது டெல்லி தேசியச் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வறிக்கை.”
……
”அன்றைக்கு பெரியார் கேட்டார்: “உண்மையில் விவாதத்துக்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்துகொண்டால், தீர்ப்பு அளித்தால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீர வேண்டுமானால், அது எல்லோருக்கும் சாத்தியப்படும் காரியமாகுமா? எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும் உத்தரவுகளைப் பற்றியும் பொதுக் கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்ய தாராளமாக இடமும் சட்ட அனுமதியும் இருக்கும்போது, இந்த ஜட்ஜுகளைப் பொறுத்து மாத்திரம் அம்மாதிரியான இடமும் அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கிறது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களின் உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?”

கேள்வி கேட்ட பெரியார் இப்போது இல்லை. ஆனால், கேள்வி இன்னமும் அப்படியே நிற்கிறது. இந்திய நீதித் துறை மாற்றத்துக்குத் தயாராக்கிக்கொள்ள வேண்டும்!

- என முடித்திருந்தார்.

கட்டுரை எழுப்பியிருக்கும் நியாயமான கருத்துக்களை எதையும் பரிசீலிக்காமல், பதில் சொல்லாமல், எப்படி நீதிமன்றத்தை கேள்வி எழுப்பலாம் என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோபம் வந்துவிட்டது! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடக்கூடாது என விளக்கம் கேட்டு ‘தமிழ் இந்து’ பத்திரிக்கைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது!

“நீதிமன்ற அவமதிப்பு” என்ற அதிகாரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டும், “மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் இருந்தாலன்றி தங்களைப் பதவி இறக்கம் செய்ய முடியாது” என்ற அரசியல் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டும் பல நீதிபதிகள் கேள்விக்கிடமற்ற முறையில் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளிலும், ஜனநாயக மீறலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை ஒட்டி, நாம் வெளியிட்டுள்ள கீழே உள்ள சுவரொட்டி, இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

Jul 26, 2015

காலாவதியாகிப்போன நீதித்துறையும், புதிய நீதிமுறை அமைப்பும்!



கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் சிந்தனூர் நகரில் உள்ள சிவில் கோர்ட்டில் கல்வி நிறுவன வழக்கு விசாரணைக்கு வந்தது. ” நீதியைவிரும்பிய படி வழங்க, மூத்த நீதிபதி சரணப்பா சஜ்ஜன்  சம்பந்தபட்டவரிடம் 5 லட்சம் பேரம் பேசி, இறுதியில் ஒரு லட்சமாவது வேண்டும் எனகறாராககூறிவிட்டார்.

லஞ்சத்தை தர விரும்பாமல், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் தெரிவிக்க,   பணத்தை தரும் பொழுது கையும் களவுமாக நீதிபதி பிடிப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தவர், பிறகு தலைமறைவாகிவிட்டார்நேற்று அவரை சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். இப்பொழுது 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுரங்க ஊழலில் சிறையில் இருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியிடம் நீதிபதி ரூ. 13 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு ஜாமீன் வழங்க, விசாரித்து லஞ்சம் வாஞ்கியது உறுதியானதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கைதும் செய்யப்பட்டார். நீதிபதி மகன் வங்கி கணக்கில் 4 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி லாக்கரில் 1.5 கோடி வரையும் இருந்தது! இதெல்லாம் ஜூன் 2012ல் நடைபெற்றது!

இப்படி நீதியை 'பெறுவது' என்பது மாவட்ட நீதிமன்றம் துவங்கி உச்சநீதி மன்றம் வரை  இப்படி வழக்கமாகவே நடைபெற்றாலும், எப்பொழுதாவது தான் நீதிபதிகள் மாட்டுகிறார்கள். நீதித்துறையின் மீது நம்பிக்கைப் போய் மக்களுக்கு பலகாலம் ஆகிவிட்டது! புதிய நீதிமுறை அமைப்பு குறித்தும் சிந்திக்க வேண்டிய முறையில் இப்பொழுது இருக்கிறோம்!

Jul 25, 2015

தொடரும் பள்ளி வாகன விபத்துக்களும், அருகமை பள்ளியும்!


(படம் : 1. விபத்துக்குள்ளான செட்டிநாடு பள்ளியின் பேருந்து!
2. இறந்து போன வேலம்மாள் பள்ளி மாணவன் திவாகர்!)

குறிப்பு : பள்ளி வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் வேகமாகவும், குடித்துவிட்டும் பொறுப்பில்லாமல் ஓட்டுகிறார்கள். வாகன ஓட்டிகளை தனியார் பள்ளிகள் பொறுப்போடு தேர்ந்தெடுப்பதில்லை. அதனால், அரசு இதில் அக்கறை செலுத்தவேண்டும் என கீழே உள்ள கட்டுரையில் கோரிக்கை வைக்கிறார்.
கட்டுரையில் வரும் முதல் விபத்தில் திருப்பத்தூர் மானகிரியிலிருந்து கிளம்பிய பள்ளி பேருந்து சிங்கம்புனரிக்கு செல்லும் வழியில் விபத்து நடந்திருக்கிறது. இந்த இரண்டு ஊருக்கும் தொலைவு 50 கி.மீ. இவ்வளவு தூரம் பிள்ளைகள் தினமும் போய் வந்தால், குழந்தையின் உடல்நிலை என்னவாவது?

சில மாதங்களுக்கு முன்பு, நாலாவது படிக்கும் திவாகர் திருவள்ளூர் மாவட்டம் மதனஞ்சேரியிலிருந்து பொன்னேரி வேலம்மாள் பள்ளிக்கு தினமும் 55 கி.மீ தூரம் அதிகாலை 4.30க்கு கிளம்பி, இரவு 7.30 க்கு வீட்டுக்கு திரும்ப வருவான். அசதியில் பேருந்தில் தூங்குவது வழக்கம். அன்றைக்கும் தூங்கிய பொழுது, பள்ளத்தில் வேன் தடுமாறிய பொழுது, திவாகரின் கழுத்து வேனில் இருந்து வெளியே வந்த பொழுது, எதிரே வந்த இன்னொரு வண்டியில் இடித்து இறந்துபோனான். இதை விபத்து என்பீர்களா? தனியார்மய கல்வியால் நடந்த கொலை என்பது தான் சரி!

இன்னும் எத்தனை திவாகர்களை நாம் பலி கொடுக்கப் போகிறோமோ? அருகமை பள்ளி, தரமான பள்ளி, அரசு இலவச கல்வி என்ற கோரிக்கைகள் வலுப்பெறவேண்டும். இந்த திசை வழியில் நமது போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

*******

போதையில் பறக்கும் பள்ளி வாகனங்கள்: பதறி தவிக்கும் குழந்தைகள்!
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று காசை பார்க்காமல் பெற்றோர்கள், பள்ளி வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பள்ளி வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருவது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பள்ளி வாகனங்களுக்காக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் பள்ளி வாகன விசயத்தில் தொடர்ந்து காட்டி வரும் அலட்சியம்தான், இன்று பள்ளி வாகனங்களின் தொடர் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றன. கடந்த வாரம் மட்டும் காரைக்குடியில் பள்ளி வாகன விபத்தும், அதற்கு மறுதினம் பெரம்பலூரில் பள்ளி வாகன விபத்தும் நடந்து இருப்பது பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் செயல்படும் 'செட்டிநாடு இண்டர்நேஷனல் பள்ளி'யில் பயிலும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சிங்கம்புனாரி என்ற ஊருக்கு அந்த பள்ளி வாகனம் சென்று கொண்டு இருந்தது. பள்ளி வாகனத்தை ரத்ன குமார் என்பவர் ஓட்டினார். பள்ளி வாகனத்தில் மொத்தம் முப்பத்தி ஐந்து குழந்தைகள் இருந்துள்ளனர்.
திருபத்துாரில் இருந்து சிங்கம்புனாரி செல்லும் வழியில் காரையூர் என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற பள்ளி வேன், கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகில் இருந்த மரத்தில் மோதி பலத்த சேதம் அடைந்தது. சம்பவ இடத்திலே ஓட்டுனர் ரத்னகுமார் மரணம் அடைந்தார். அந்த சம்பவத்தில் இருபத்தி ஐந்து குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அதில் நான்கு குழந்தைகள் நிலை இன்று வரை பரிதாபமாக உள்ளது. அதேபோல் அதற்கு மறுதினமே பெரம்பலுாரில் தனலெட்சுமி சீனிவாசன் பள்ளி வாகனம் சாலையில் கவிழ்து விபத்திற்குள்ளானது. அதுவும் அதிவேகமாக சென்றாதால்தான் இந்த விபத்து நிகழந்துள்ளது.

அதிவேகமாக பள்ளி வாகனங்களை இயக்கியதுதான் பெரிய தவறு என்று கூறப்பட்டாலும், காரையூர் விபத்தில் பள்ளி வாகன ஒட்டுனர் மது அருந்தி இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளியில் மதிய ஒய்வு நேரத்தில் மது அருந்தி தூங்கியுள்ள ஓட்டுனர், அந்த போதையில்தான் வாகனத்தை இயக்கி, பிஞ்சு குழந்தைகளின் உயிரோடு விளையாடியுள்ளார். அதற்கு பின்தான் பள்ளி வாகன ஓட்டுனர்களை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் உத்தரவிட்டனர்.
இ்ந்நிலையில், காரைக்குடியில் உள்ள லீடர்ஸ் பள்ளியின் வாகனம் ஒன்று நேற்று காரைக்குடி நகர் பகுதியில் அதிவேகமாக சென்றுள்ளது. சிக்னலில் கூட நிற்காமல் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற அந்த வானத்தை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர், அதனை விரட்டி பிடித்து ஓட்டுனரிடம் விசாரணை செய்ததில், அந்த ஓட்டுனர் மது அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது.

ராமு என்ற அந்த ஓட்டுனர் சில நாட்களுக்கு முன்தான் அந்த பள்ளியில் ஓட்டுனராக பணிக்கு சேர்ந்துள்ளார். அதற்கு முன்பு ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். மதியம் ஓய்வாக இருந்த நேரத்தில் பள்ளி வாகனத்திலேயே மது அருந்திவிட்டு, மாலை அந்த வாகனத்தில் மாணவர்களை ஏற்றி வந்துள்ளார். அந்த ஒட்டுனரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் அந்த வாகனத்தை மடக்கி பிடித்த பொழுது, அந்த வாகனத்தில் பத்துக்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் இருந்துள்ளனர்.

பள்ளி வாகனங்களுக்கு ஓட்டுனர்களை நியமிக்கும் பொழுது அந்த ஓட்டுனர்களின் நன்னடத்தையை நிர்வாகம் பார்ப்பது இல்லை. அதோடு இளவயதுடைய ஓட்டுனர்களை நியமித்தால் அவர்கள் வேகத்தை கட்டுப்படுத்த விரும்புவதில்லை.பல பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுபாட்டு கருவியே செயல்படாமல் உள்ளது. அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அதன் விளைவாகத்தான் பள்ளி வாகனங்களின் விபத்து தற்பொழுது அதிகரித்து வர காரணமாகி வருகிறது.
இனிமேலும், அரசு அக்கறை காட்டாவிட்டால் இதனால் ஏற்படும் விபரீதம் காலத்தால் அழியாத சுவட்டை அரசுக்கு ஏற்படுத்திவிடும் என்பது மட்டும் நிதர்சனம்.

 - விகடன் - 21/07/2015

Jul 24, 2015

ஒரு மாவீரனின் வாழ்க்கைப் பயணம்!




வீரம் விளைந்தது - நாவல் அறிமுகம்!

மனித வாழ்வின் வசந்தகாலம் என்று இளமைப்பருவத்தை வருணிப்பதுண்டு. எதிர்காலம் குறித்த கனவுகளும், நம்பிக்கையும், புதுமையின்மீது ஆர்வமும், செயல்துடிப்பும் பொங்கித் ததும்பும் காலம் அது. வாழ்க்கையின் சுக, துக்கங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, மனித வாழ்வின் இந்தப் பொன்னான தருணத்தை தனது தாய்நாட்டு விடுதலைக்காக அர்ப்பணித்து இளமைக்குப் புதுப் பொலிவு சேர்த்த ஒரு மாவீரனின் வாழ்க்கைப் பயணமே இந்த நாவல்.

அன்றைய ரஷ்யாவில் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டுக்கிடந்த ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் கம்யூனிஸ்டுக் கட்சியின் கீழ் அணிதிரண்டு கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். 1917-ல், பூமிப்பந்தின் ஆறில் ஒரு பகுதியில் பொதுவுடைமை ஆட்சி மலர்ந்தது. ஆயினும், நாட்டின் உட்பகுதிகளிலும், கிராமப் புறங்களிலும் நிலப்பிரபுக்களும், பண்ணையார்களும்  அடங்கிய பிற்போக்கு சக்திகள் கொட்டமடித்து வந்தனர். புதிதாக ஆட்சியிலமர்ந்த பாட்டாளிவர்க்கத்தின் செஞ்சேனை வீரர்கள் அவர்களை அடக்கி, ஒடுக்குவதற்கான ஒரு கடுமையான உள்நாட்டுப் போரை நடத்திக்கொண்டிருந்தனர்.

வறிய, ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் பாவெல் கர்ச்சாகின். துடுக்குத்தனமும், பிடிவாதமும் அவனை ஆரம்பப் பள்ளியைத் தாண்டவிடவில்லை. ஆனால் கடின உழைப்பாளி. நேர்மையும், நெஞ்சுரமும் கொண்டவன்; அநீதிகளைக் கண்டு பொங்கி எழும் குணம் படைத்தவன். எனவே, ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து உல்லாசமாக வாழும் ஊதாரிகளான பணக்கார வர்க்கத்தை இயல்பாகவே வெறுத்தான். பணக்கார வர்க்கத்தின் கொள்ளைக்கூட்டப் படைகள் அவனது ஊரையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கியிருந்தன. கொதித்துக் கொண்டிருந்த அவ்விளைஞனை செஞ்சேனை அரவணைத்துக்கொண்டது. தாய்நாட்டைக் கொள்ளையர்களிடமிருந்து விடுவிக்கும் பணியே முதன்மையானது என்பதை உணர்ந்துகொண்டு தனது முழு ஆற்றலையும் மக்களின் எதிரிகளை வீழ்த்தும் போரில் ஈடுபடுத்தினான். துப்பாக்கிக் குண்டுகள் அவனது உடலைத் துளைத்தன; பீரங்கிக் குண்டுத் தாக்குதல் அவனை மரணத்தின் வாயிலில் கொண்டு நிறுத்தியது. ஆனால், இலட்சியத்தில் உறுதியும், போராட்டக் குணமும் கொண்ட அவ்விளைஞனை சாவின் கைகள் தொட மறுத்தன. புத்துயிர் பெற்ற போர்வீரனாக மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பினான்.

ஆயினும், போரில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட உடல் அவனது மனோ வேகத்திற்கு ஈடுகொடுக்க மறுத்தது. கடுமையான உடல்வலியிலும், வேதனையிலும்கூட ஓய்வை நாடுவதை அவன் மனது வெறுத்தது. புதிய சமூகத்தை நிர்மாணிக்கும் வேலையில் கடுமையாக ஈடுபட்டான். ஆனாலும் படிப்படியாக அவனது உடல் செயலிழந்து கொண்டு வந்தது. இறுதியில்  கண்பார்வையையும் இழக்க நேரிட்டது. எத்தகைய அசாதாரண மன உறுதி படைத்த மனிதனையும் வீழ்த்திவிடும் அந்த இக்கட்டான நிலையையும் பாவெல் துணிச்சலுடன் எதிர்கொண்டான். உடல் உறுப்புக்கள் செயலிழந்து கண்பார்வையும் பறிபோன அந்த நிலையில் அவனது இலக்கிய மனம் விழித்துக்கொண்டது. இந்த நாவல் பிறந்தது. ஆம்! இது கதையல்ல; தனது இளமையை, தனது வாழ்வை  தாய்நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்த ஒரு மாவீரனின் வாழ்க்கை.

மண்ணின் ஈரமும், மக்களை நேசிப்பவர்களின் வீரமும்தான் இன்னும் இவ்வுலகில் உயிர்களைக் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த வீர உணர்வுதான் பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் வெள்ளையனுக்கெதிராகப் போராடத் தூண்டியது. இரண்டாம் உலகப் போரில் கொடுங்கோலன் ஹிட்லரை வீழ்த்தி பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து உலகைக் காத்தது பொதுவுடைமைப் போர்வீர்ர்கள் கொண்டிருந்த  மண்ணின், மக்களின் மீதான நேசம். .இன்றைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்களாலும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளாலும் சூறையாடப்பட்டு தமது வாழ்க்கையை இழந்து நிற்கும் மக்களும், தனது வளங்களை இழந்துகொண்டிருக்கும் நம் தேசமும் நம்மிடம் கோரி நிற்பது இந்த உணர்வுகளையன்றி, வேறென்ன?

ஆசிரியர் - நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி

கிடைக்குமிடம்
 
கீழைக்காற்று
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
 044-28412367