Jul 5, 2015

நம்பிக்கையற்று இருக்கும் பொழுது!

உண்மை மனிதனின் கதை - நூல் அறிமுகம்
- பரீஸ் பொலெவோய்

இரண்டாம் உலகப்போர் உலக நாடுகளின் மீது பாசிசப் பேரிருள் சூழ்ந்துகொண்டிருந்த காலம்...உலகையே தனது காலடியின்கீழ் கொண்டுவர பேராசைப்பட்ட ஹிட்லரின் ஆணைக்கினங்க நாஜிப் படைகள் கோரதாண்டவத்தை நடத்திக்கொண்டிருந்தன.

போர்க்களத்தில் ஒவ்வொரு நாடாக ஜெர்மனியிடம் வீழ்ந்து கொண்டிருந்தன. அன்றைய சோவியத் யூனியன் பொதுவுடைமையின் கீழ் தளிர்நடை போட்டுக்கொண்டிருந்த காலமது. புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் முழுவீச்சுடன் ஈடுபட்டிருந்த சோவியத்தின் அதிபர் தோழர் ஸ்டாலின் போரைத் தவிர்க்கும் விதமாக ஹிட்லருடன் சமாதான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்.

போர்வெறி கண்ணை மறைக்க,. அப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்த இளம் சோவியத்தை எளிதில் கைப்பற்றி விடலாம் என்று கணக்கிட்ட ஹிட்லர் ஒப்பந்தத்தை தூக்கியெறிந்துவிட்டு சோவியத்தின்மீது போர்தொடுத்தான். ஆனால் மகத்தான சோவியத்தின் செஞ்சேனை வீரர்கள் நாஜிப் படைகளுக்கு மரண அடிகொடுத்து வீழ்த்தினர்; உலக நாடுகளை பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவித்த அந்த மாபெரும் போரில் பல்லாயிரக்கணக்கான சோவியத் வீரர்கள் தீரத்துடன் ஈடுபட்டனர். தனது இரண்டு கால்களையும் சண்டையில் இழந்துவிட்டபோதிலும் தாய்நாட்டைக்காக்கும் காக்கும் இலட்சியத்துடன் கட்டைக்கால்களைப் பொருத்திக்கொண்டு மீண்டும் விமானப்படையில் சேர்ந்து நாஜி விமானப்படையினைத் துவம்சம் செய்த ஒரு இளம் விமானியின் - உண்மை மனிதனின் - கதைதான் இந்நாவல்.

சோவியத் விமானி அலெக்ஸேய் மாரேஸ்யெவ்-ன் விமானம் எதிரியின் விமானப்படையால் தாக்கப்பட்டு, நிலைகுலைந்து ஆளரவமற்ற காட்டில் விழுந்து நொறுங்குகிறது. விபத்தில் அலெக்ஸேய்-ன் இரண்டு கால்களும் நடக்கமுடியாதவண்ணம் சேதமடைகின்றன. காடு பல கிலோமீட்டர் தூரம் பரந்து விரிந்தது. அது உறைபனிக்காலம். ஆனாலும் தனது அபாரமான மன வலிமையினால், 18 நாட்களாக, காட்டில் கிடைக்கும் பழங்களையும், இலை, தழைகளையும் உணவாகக் கொண்டு, காட்டுக் குச்சிகளின் துணையுடன் நடந்து, கைகளால் தவழ்ந்து நைந்துகிடக்கும் தனது பாதங்களை இழுத்துக்கொண்டு போராடி இறுதியில் ஒரு கிராமத்தை வந்தடைகிறான்.

பின்னர் இராணுவ மருத்துவமனையில் அவனது இரண்டு கால்களிலும் முழங்காலுக்கும் கீழுள்ள பகுதி வெட்டியெடுக்கப்படுகிறது. மனம் சோர்வுற்ற போதிலும் தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காமல் போராடுகிறான், அலெக்ஸேய். கட்டைக்கால்களின் உதவியுடன், தாங்கமுடியாத வலியையும், வேதனையையும் பொருட்படுத்தாமல் நடக்கவும், ஓடவும் நாள்தோறும் கடும் பயிற்சியில் ஈடுபடுகிறான். உடல்நலம் தேறியவுடன், மீண்டும் விமானப் படைத்தளத்திற்குச் செல்கிறான்.

அங்குள்ள படையதிகாரிகளிடம் போராடி மீண்டும் சண்டை விமானத்தை இயக்குவதற்கு அனுமதி பெறுகிறான். பிறகு நடைபெற்ற இறுதிச் சண்டையில் தேர்ச்சிபெற்ற விமானிகளைக்காட்டிலும் சிறப்பாக விமானத்தை இயக்கி நாஜிப் படைகளின் அதிநவீனப் போர்விமானங்கள் பலவற்றைச் சுட்டு வீழ்த்தி தனது தாய்நாட்டுக்கான கடமையைச் செம்மையாகச் செய்துமுடிக்கிறான்.

தனது தாய்நாட்டைக் காக்கும் போரில் தனது மக்கள் உயிரைக்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் தான் வீணே மாண்டுவிடக் கூடாது; எப்பாடு பட்டேனும் உயிர்பிழைத்து, மீண்டுவந்து அந்தப் போரில் தானும் பங்கேற்கவேண்டும் என்கிற இலட்சிய வெறிதான், நாட்டுப்பற்றுதான், வைராக்கியம்தான் சாவின் நுழைவாயிலில் கிடந்தவனை மீண்டும் போர்க்களத்தில் கொண்டுவந்து சேர்த்தது. உன்னதமான நோக்கங்கள் மரணத்தையும் வென்று நிற்பவை என்பதைத் தன் வாழ்க்கை மூலமாக நிரூபிக்கிறான் "உண்மை மனிதன்" அலெக்ஸேய்.

தாங்கள் உண்ணுவதற்கே போதிய உணவு இல்லாத நிலையிலும், காட்டில் குற்றுயிராகக் கிடந்த விமானிக்கு தங்களிடம் சிறிதளவே மீதமிருந்த உணவையும் கொடுத்து, சிகிச்சையளித்த எளிய கிராம மக்களின் மனித நேயம்; தாங்க முடியாத கொடும் வேதனையைத் தான் அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் தனது சக இராணுவ வீரர்களின் வேதனையைத் தணிக்கும் விதத்தில் நகைச்சுவையாகப் பேசி, அவர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் ஊட்டிய இராணுவ அதிகாரி; உடலையல்ல; உள்ளத்தின் உயர்வை நாடுவதே உண்மைக் காதல் என்பதை உணரவைத்த இளம் நங்கையர் . என அன்றைய சோவியத் மக்கள் கொண்டிருந்த உன்னதமான, உயர்ந்த மனித மாண்புகளை பல்வேறு சம்பவங்களினூடாக எடுத்துக் கூறுகிறார் நூலாசிரியர்.

நாம் வாழும் சமூகம்தான் நமது சிந்தனையை, வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஆளும் வர்க்கங்கள் தமது கருத்துக்களை மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கின்றன. இலாப வெறிகொண்ட இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் நோக்கம் என்பதாக நமக்குக் கற்றுத்தரப்படுகிறது. பேராசை, சுயநலம், நுகர்வுவெறி என்பதாக மனித விழுமியங்கள் இன்று மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவல்ல வாழ்க்கை. நாட்டுப்பற்று, சக மனிதர்களின் மீதான நேசம், இயற்கையின், சமூகத்தின் மீது அக்கறை உள்ளிட்ட நற்பண்புகளே வாழ்க்கையை முழுமையாக்குகின்றன. அப்படிப்பட்டதொரு வாழ்க்கை முறையை கொண்டிருந்த சோவியத் மக்களின், உண்மை மனிதனின் வரலாறுதான் இந்நாவல். ஒருமுறை வாசியுங்கள்.. .. நாம் இழந்து நிற்கும் வாழ்வின் உன்னதங்கள் புரியும்; அவற்றை மீட்பதற்கான வழிகளும் தெரியும்.

 - மருதமுத்து

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நூலின் சிறப்பை அறிய முடிந்தது... நன்றி...

வலிப்போக்கன் - said...

நூல் அறிமுகத்துக்கு நன்றி!!!