Jul 27, 2015

நீதிபதிகள் என்ன… பெரிய கொம்பா?


(சென்னை உயர்நீதி மன்றத்தில் பரவலாக ஒட்டப்பட்ட சுவரொட்டி)

’இவர்கள் எங்கே போவது நியாயமாரே?’ என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் சமஸ் 23, ஜூலை 2015 ‘தமிழ் இந்து’ பத்திரிக்கையில் கட்டுரை எழுதியிருந்தார்.

”1. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள 4.2 லட்சம் சிறைவாசிகளில் 53% பேர் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்கள் என்கிறது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம். நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் சிறைவாசிகளில் 45.8% பேர் தலித்துகள்/ஆதிவாசிகள். குஜராத் சிறைவாசிகளில் 43.6% பேர் தலித்துகள்/ஆதிவாசிகள்.

2. மரண தண்டனைக் கைதிகள் 373 பேரில் நால்வரில் மூவர் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர். பயங்கரவாதக் குற்றங்களுக்காகத் தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்களில் 93.5% பேர் தலித்துகள் /சிறுபான்மையினர். மரண தண்டனைக் கைதிகளில் 75% பேர் பொருளாதாரரீதியாக மிக மோசமான நிலையில் இருப்பவர்கள் என்கிறது டெல்லி தேசியச் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வறிக்கை.”
……
”அன்றைக்கு பெரியார் கேட்டார்: “உண்மையில் விவாதத்துக்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்துகொண்டால், தீர்ப்பு அளித்தால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீர வேண்டுமானால், அது எல்லோருக்கும் சாத்தியப்படும் காரியமாகுமா? எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும் உத்தரவுகளைப் பற்றியும் பொதுக் கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்ய தாராளமாக இடமும் சட்ட அனுமதியும் இருக்கும்போது, இந்த ஜட்ஜுகளைப் பொறுத்து மாத்திரம் அம்மாதிரியான இடமும் அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கிறது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களின் உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?”

கேள்வி கேட்ட பெரியார் இப்போது இல்லை. ஆனால், கேள்வி இன்னமும் அப்படியே நிற்கிறது. இந்திய நீதித் துறை மாற்றத்துக்குத் தயாராக்கிக்கொள்ள வேண்டும்!

- என முடித்திருந்தார்.

கட்டுரை எழுப்பியிருக்கும் நியாயமான கருத்துக்களை எதையும் பரிசீலிக்காமல், பதில் சொல்லாமல், எப்படி நீதிமன்றத்தை கேள்வி எழுப்பலாம் என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோபம் வந்துவிட்டது! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடக்கூடாது என விளக்கம் கேட்டு ‘தமிழ் இந்து’ பத்திரிக்கைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது!

“நீதிமன்ற அவமதிப்பு” என்ற அதிகாரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டும், “மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் இருந்தாலன்றி தங்களைப் பதவி இறக்கம் செய்ய முடியாது” என்ற அரசியல் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டும் பல நீதிபதிகள் கேள்விக்கிடமற்ற முறையில் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளிலும், ஜனநாயக மீறலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை ஒட்டி, நாம் வெளியிட்டுள்ள கீழே உள்ள சுவரொட்டி, இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

No comments: