Jan 27, 2015

பயணம் ‍- கவிதை
தொலைதூரப் பயணத்திற்கு
பேருந்திற்காய் காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில்
ஆடி அசைந்து வந்தது.

இடம்பிடிக்க ஆவலாய் மொய்த்தார்கள்.
கொஞ்சம் சிரமப்பட்டு
இடம் பிடித்தாயிற்று!
தேர்வில் வெற்றி பெற்ற
மாணவனின் குதூகலிப்புடன்
என்னை வசதி செய்துகொண்டேன்.

முகத்தில் அறையும் திமிர்காற்று.
கையசைத்து குதூகலிக்கும்
பச்சை வண்ணமரங்கள்.
நினைத்த உருவம் பொருந்திக்கொள்ளும்
வான் மேகங்கள்.
காற்றில் மிதந்து
காதலிக்க வலியுறுத்தும்
ராசாவின் பாட்டு.
பயணங்கள் இனிமையானது!
பாட்டிற்கேற்ப நடனம் ஆடிக்கொண்டே

பயணம் செய்தது பேருந்து.
பின்வந்த நிறுத்தத்தில்
பயணிகள் சிலர் ஏறினார்கள்
அதில் ஒரு வயதான அம்மா
ஏறியதும் கண்களை சுழற்றி
இடம் தேடினார்.
முகத்தில் சிறிது வருத்தம்.
கண்டும் காணாதது போல்
முகங்கள் வேறுபக்கங்கள் திருப்பிக்கொண்டன!

எண்ணம் மாற்ற
பார்வையை வெளியில் தெளித்தேன்.

வெண்மையாய் இருந்த மேகங்கள்
அடர்த்தியாய் பின்னிக்கொண்டன.
வருத்தமுகம் நினைவில் வந்தது.
பார்வையை கீழே தாழ்த்தினேன்.
மரங்கள் உற்சாகமிழந்தது போல்
ஒரு பிரமை.

அந்த அம்மாவிற்கு கால் வலித்திருக்கும்
நேரக் கணக்கிட்டு மனது சொல்லியது!
திரும்பி பார்த்தேன்
சிரமப்பட்டு நின்றுகொண்டிருந்தார்.
உள்ளத்தில் சிறுவலி.
பக்கத்து சீட்டுக்காரருக்கும்
உறுத்தியது போலும்.
அடுத்த பஸ்சில வந்தா என்ன!
செத்தா போயிரும்?’
உறுத்தலை நிறுத்திக்கொண்டார்.

என்ன அவசர வேலையோ?
முடிவெடுத்தேன்.
‘உட்காருங்கம்மா!’ எழுந்துகொண்டேன்.
கண்களில் நன்றியுடன் அமர்ந்தார்.

மீண்டும்
மேகங்களைப் பார்த்தேன்.
விளையாடிக்கொண்டிருந்தன.
அடர்த்தியாய் வரிசையாய்
நின்ற மரங்களை  கண்டேன்.
காற்றோடு கதை பேசிக்கொண்டிருந்தது!
* 1997ல் எழுதியது! பரணியில் வேறு எதையோ தேடிய பொழுது கண்ணில்பட்டவை!

Jan 6, 2015

சாருவின் வெளியீட்டு விழாவும், காமராஜர் அரங்க சீட் அளவும்!

சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். நமக்கும் இலக்கியத்திற்கும் தூரம் தான்! தூரத்தை குறைப்பதற்காக அவ்வப்பொழுது சில கூட்டங்களில் தலை காட்டுவதுண்டு!

அரங்கத்தில் 2000 சீட்களாவது இருக்கும். மொத்த அரங்கத்தில் 60%க்கும் மேலாக சீட்கள் ஆளில்லாமல் இருந்தது. அதுவும், ஹாலின் இடது ஓரத்தில் ஆட்களே இல்லை என்கிற அளவுக்கு இருந்தது. 600, 700 பேருக்கு ஏன் இவ்வளவு பெரிய ஹால்? சாருவின் நண்பர்களும், வாசகர்களும் நிறைய உழைத்து, விளம்பரப்படுத்தியதால், நிறைய பேர் வந்துவிடக்கூடும்  என்ற எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கலாம் என தோன்றியது!

ஆனால் சாரு இப்படி எழுதுகிறார்.

//நேற்றைய விழா மிக வெற்றிகரமாக முடிந்தது.  வந்திருந்த அனைவருக்கும் நன்றி.  விடுமுறை முடிந்த முதல் நாள் – திங்கள் கிழமை அன்று – 2000 பேர் கொள்ளளவு கொண்ட அரங்கில் 1500 பேர் வந்திருந்தது ஒரு மிகப் பெரிய சாதனை தான்.  ஆனாலும் இனிமேல் காமராஜ் அரங்கம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  ஏனென்றால், அந்த அரங்கம் இப்படித்தான் ஏதாவது இடக்குமுடக்கான தேதியில் கிடைக்கிறது.  சனி, ஞாயிறு வேண்டும் என்றால் டிசம்பர் விழாவுக்கு பத்து மாதங்கள் முன்னதாக அதாவது மார்ச் மாதமே முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது.  அது நம்மால் ஆகாது என்பதால் இனிமேல் மியூசியம் அரங்கிலேயே வைத்து விடலாம் என்று யோசிக்கிறேன்.//

http://charuonline.com/blog/?p=2137

அரங்கத்தின் சீட் அளவு எவ்வளவு இருக்கும் என இணையத்தில் தேடிப்பார்த்ததில், 1700 தான் என தெரிந்தது!

"Kamaraj Kalai Arangham" 
574 A, Anna Salai 
Opp. DMS 
Teynampet Police Station 
Chennai 600006 
Ph: (044) - 24349040 
Capacity: 1700 
Stage: 45' x 75' 
2 Dressing Rooms 
A/C 

http://www.narthaki.com/spaces/sp1h.htm

சாரு மேடையில் இருந்ததால் ஒளியின் வெளிச்சத்தாலும், அரங்கம் முழுவதும் வாசகர்களை பார்க்கும் ஆர்வத்தாலும் சாருவிற்கு 1500 தெரிந்திருக்கலாம். ஆக, உண்மை தெரிந்த நாம் சாருவிற்கு தெரியப்படுத்தவேண்டும் என்ற நல்லெண்ண‌த்தில் இந்த தகவலை சொல்கிறேன்! கடந்த வெளியீட்டு விழாவிலும் இதே நிலை தான். அப்பொழுதே இந்த தகவலை என்னை மாதிரி யாராவது பொறுப்பாக சொல்லியிருந்தால், காமராஜர் அரங்கத்தை சாரு தவிர்த்திருப்பார். சாருவின் மின்னஞ்சலுக்கும் இந்த தகவலை அனுப்பிவிட்டேன். ஏதோ நம்மால் முடிந்த சிறு உதவி!

குருத்து

Jan 3, 2015

Unthinkable – சவாலான படம் தான்!அமெரிக்க குடிமகனான ஒரு முசுலீம், அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களில், அணுகுண்டை வெடிக்க ஏற்பாடு செய்து, தானாக கைதும் ஆகிறார்.  இராணுவம், காவல்துறை, உளவுப்பிரிவு, சிறப்பு பிரிவு என எல்லோரும் பிடிப்பட்டவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபடுகிறார்கள். ஒருவர் சாதாரணமாக கேட்டால், இன்னொருவர் விரல்களை வெட்டி, மின்சார அதிர்ச்சி கொடுத்து என எல்லாவித கொடூர சித்ரவதைகளையும் செய்து கேட்பார். இதற்கிடையில்,  ஒரு இடத்தில் வைத்த குண்டு வெடித்து, 53 பேர் கொல்லப்படுகிறார்கள். துணைவியாரை அழைத்து வந்து மிரட்டி கேட்டும் சொல்லாததால், கழுத்தறுத்து கொல்கிறார்கள். அடுத்து அவனுடைய இரண்டு குழந்தைகள் என நகரும் பொழுது, குண்டு வைத்த இடங்களை சொல்கிறார்.  இன்னும் சில இடங்களில் இருக்கிறது அதையும் சொல்! என கேட்கும் பொழுது, தற்கொலை செய்துகொள்கிறார். சொன்ன இடங்களில் குண்டுகளை அகற்றும் பொழுது, சொல்லாத இன்னொரு இடத்தில் குண்டு வெடிக்க தயாராகிறது. படம் முடிகிறது!
*****

தீவிரவாதிகளை சட்டத்திற்குட்பட்டு விசாரிப்பதா? அல்லது மீறியா? என்பதை விசாரணை அதிகாரிகளுக்குள் நடக்கும் விவாதத்தை, பார்வையாளனுக்கு நகர்த்தி, சட்ட வகை மீறி செய்வது சரி தான் என்பதை ஏற்க வைக்கிறார்கள்.  அமெரிக்கா தனது மேலாதிக்கத்தால், உலகம் முழுவதும் செய்யும் லட்சக்கணக்கான அரசியல், இராணுவ கொலைகளுக்கு நம்மிடம் ஆதரவு கோருகிறது என்ற வகையில் இந்த படம் மிக ஆபத்தானது. (வினவு சொல்கிற படி) நாம் அமெரிக்காவின் படுகொலைகளை மறந்துவிட்டால், இந்த படம் நம்மை வென்றுவிடும்!

97 நிமிடங்கள் விறு விறு என ஓடும் இந்த படம் 2010ல் வெளிவந்தது. படம் போணியாகவில்லை என விக்கிபீடியா தகவல் சொல்கிறது!

இந்த படத்திற்கு ஒரு விரிவான விமர்சனம் வினவில் வந்தது. அனைவரும் அவசியம் படிக்கவேண்டும்.

கற்றல்!எதிர்த்த வீட்டு அருளம்மா,
பக்கத்துவீட்டு பாத்திமாக்கா
அடுத்த தெருவில் இருந்து வரும் பாட்டியம்மா – என
பலரும் எங்க வீட்டு முருங்கை கீரையை
வாங்கி செல்கிறார்கள்!

தேனாம்பேட்டையிலிருக்கும் சகோதரி
வரும் பொழுதெல்லாம் கீரை கொண்டுவரசொல்லி
நினைவுப்படுத்துகிறாள்!

வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம்
தோழி கீரை கொண்டு போகிறாள்!

இப்பொழுதெல்லாம் நானும்
கீரை சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன்! :)

பிசாசு : ஏன் தண்டிக்கவில்லை?காரில் பயணிக்கும் பொழுது, செல்பேசியில் கவனம் கொண்டு ஸ்கூட்டியில் வரும் பெண்ணை இடித்துவிடுகிறான். அவள் இறந்தும்விடுகிறாள்.

பிசாசாய் மாறியதும் என்ன செய்திருக்க வேண்டும்? அவனை விரட்டி விரட்டி பயமுறுத்தியிருக்கவேண்டும். கொலை செய்திருக்கவேண்டும்.  ஆனால், அதை செய்யாமல், அவனுக்கு பார்த்து, பார்த்து நல்லது செய்கிறாள்.

குற்றம், தண்டனை என்றே பழக்கப்பட்டு விட்ட நமக்கு, இந்த பிசாசை புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன்? ஏன்? என பலவகைகளில் சிந்தித்து பார்க்கிறேன். இளவயது பையன், இளவயது பிசாசு என்பதால், பருவக்கோளாறாக இருக்ககூடும் என சமாதானம் கூட சொல்லிப்பார்க்கிறேன்.

அன்பும், பெருங்கருணையும் கொண்ட மிஷ்கினின் பிசாசு பழகிய இரண்டு மணிநேரத்திலிருந்து, கடந்த ஒருவாரமாக என்னை ஆட்கொண்டுவிட்டாள். ஒவ்வொரு நாளும் ஏன் தண்டிக்கவில்லை என அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன். புதிய புதிய ஜன்னல்கள் திறக்கின்றன.

- குருத்த