Dec 20, 2016

கையெழுத்திட்டால் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்! - ஒரு கடிதம்


சென்னை மாநகராட்சிக்கு ஒரு பெற்றோரின் கடிதம்!


அனுப்புநர்

இலக்கியா,
5ம் வகுப்பு,
xxxx பள்ளி,
சென்னை

பெறுநர்

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அவர்கள்,
xxxx பள்ளி,
சென்னை
       
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் சுய உறுதிமொழி படிவம் ஒன்றை தந்து, மாணவர்களும், பெற்றோர்களும் வீட்டிலும், பொது இடங்களிலும் உள்ள சமுதாய கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கையெழுத்திட சொல்லி உறுதிமொழி கேட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி நடத்திவரும் மாநகராட்சி பள்ளிகளில் சென்னையில் 10 மண்டலத்தில் 57 பள்ளிகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசாணை எண் : 270ன் படி , 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிப்பறை, கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் இருக்கவேண்டும்

ஆனால், 57 பள்ளிகளில் பல பள்ளிகளில் சிறுநீர் கழிப்பறைகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லாமல், மிக மிக குறைந்த அளவே உள்ளன. அதே போல தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும்  ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.

உதாரணமாக சைதாப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மேல்நிலை பள்ளியில், 1500 மாணவர்கள் படிக்கின்றனர். சிறுநீர் கழிப்பறை ஒன்று கூட இல்லை.  மலக்கழிப்பறை 8 மட்டுமே உள்ளன.  துப்புரவு பணியாளர் ஒருவர் மட்டுமே.

இது தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களை திரட்டி போராடியதன் விளைவாக, மாநகரட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, பள்ளி வாரியாக அறிக்கையை தயார் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாணையின்படி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (எண் : W.P.11666/2014) தொடுத்தது.  நீதிமன்றமும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவு போட்டது. மாநகரட்சியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் பல தவணைகளை கேட்டு, பள்ளிகளில் ஆமை வேகத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் உள்ள  மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே இந்த கதி என்றால், பொது இடங்களில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி பற்றி சொல்லவே தேவையில்லை. ஒன்றரை கோடி பேர் வாழும் சென்னையில் பல பொது இடங்களில் கழிப்பறை வசதியே இல்லை. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது.  இதனால் பொதுமக்கள் பலவித சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

ஆகையால், சென்னை மாநகரட்சி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்து தந்துவிட்டு இப்படி கையெழுத்து கேட்பது தான் நேர்மையானது என கருதுகிறோம். இந்த படிவத்தில் கையெழுத்து போட்டால் அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் அதை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு சமூக சூழ்நிலை நிலவுவதால் கையெழுத்து இட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த கடிதத்தை மாநகராட்சிக்கும் அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

பெற்றோர்.

Sep 6, 2016

நிதானமில்லாத குடிமகனும் நிதானமான அரசும்!



இரவு 8.30 மணி. வில்லிவாக்கத்தில் உள்ள பிரதான சாலையில் ஒரு பேருந்து பின்புறம் வந்துகொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் இருந்து பார்சல் போல ஏதோ ஒன்று விழுந்தது. இருட்டில் தெளிவாக தெரியவில்லை. சில விநாடிகளில் அருகில் போய் பார்த்தால் ஒரு மனிதர் குப்புற விழுந்து கிடக்கிறார். பேருந்தில் இருந்து விழுந்தது கூடவா பேருந்தில் உள்ள யாருக்கும் தெரியாது!

விழுந்த சில விநாடிகளில் என்னைப் போலவே இன்னும் இருவர் அருகில் வர அவரை சோதித்தால் டாஸ்மாக் வாடை குப்பென்று அடித்தது. கொஞ்சம் வயிறு ஏறி இறங்குவது தெரிந்தது. இன்னும் உயிர் இருக்கிறது. ஒருவர் 108க்கு போன் அடித்து விவரத்தை சொன்னார். ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து முகத்தில் இரண்டு மூன்றுமுறை அடிக்க, மலங்க மலங்க விழித்தார். அவர் எப்படி விழுந்தார் என யாரும் பார்த்திருக்கவில்லை. அவரிடம் கேட்டால், போதையும், விபத்தும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பதில் சொல்லமுடியவில்லை. பேருந்தில் இருந்து விழுந்ததை அங்கிருப்பவர்களுக்கு சொன்னேன்.

சில நிமிடங்களில் அங்கு கடந்து போன போலீஸ் ஜீப்பிலிருந்து ஒரு போலீசு இறங்கி வந்து, விவரத்தை கேட்டு, யாருக்கோ தகவல் சொன்னார். இன்னும் சில நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது!

விழுந்த சில நிமிடங்களில் எங்களுடன் நின்றிந்த ஒருவர் “எதிரில் கடை அருகே நாலைந்து பேர் நின்றிருந்தாலும், வந்து உதவவில்லையே என மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து அந்த ஆட்கள் அருகில் வந்து ஒரு சலம்பிக்கொண்டிருந்தனர். எல்லோரும் போதை.

ஒருவர் போதையிலிருந்தால் அவர் இயல்பு மீறி செய்கிற எல்லா செய்கைகளும் நமக்கு எரிச்சலை தருகின்றன. அன்றைக்கு ஒரு நாள் இரவு 10.30 மணியிருக்கும். உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 15 நிமிடம் ஆகிவிட்டது. நடத்துநர் அந்த நல்ல போதையிலிருந்த 45 வயது குடிமகனிடம் பயணச்சீட்டுக்கான பணம் கேட்கும் பொழுது அவரிடம் பணம் மிக குறைவாக இருந்தது. எந்தவித யோசனையும் செய்யாமல் இதுதான் நீங்க இறங்க வேண்டிய இடம் என அந்தகார இருட்டில் இறக்கிவிட்டு போய்க்கொண்டேயிருந்தார்கள்.

இப்படி ‘குடி’மகன்களிடம் கோபப்படும், புறக்கணிக்கும் நாம், வீடுகளுக்கு, வழிப்பாட்டு தலங்களுக்கு அருகே, மக்கள் கூடுமிடங்களுக்கு அருகே கடைகளை வைத்து தொல்லை தரும் அரசிடம் கோபப்படுகிறமோ என்றால் இல்லை. நிதானமாக இருந்துகொண்டு குடிமகன்களையும், அவர்களுடைய குடும்பங்களை சீரழிப்பவர்களான அரசும் மீதும், ஆளும்கட்சிகாரர்கள் மீதும் மீது கோபம் வருவதை தடுப்பது எது?

10 பேர் நண்பர்கள். அத்தனை பேரும் குடித்தால் கூட நீ ஒழுங்காக இருக்கவேண்டும் என நினைத்தால் குடிக்காமல் இருக்கலாம் என என் அம்மா வாதாடுவார். காற்றே நச்சாக இருக்கும் பொழுது, எப்படி நல்ல காத்து சுவாசிப்பது என்பேன். எங்க அம்மாவை போலவே பலரும் சிந்திப்பார்கள் போல!

 (படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது)

Aug 5, 2016

மிதிவண்டியின் நினைவலைகளில்…



மிதிவண்டியில் முன்னாடி அமர்ந்து பயணிப்பது மிகுந்த நெருக்கத்தை உணரமுடியும்! அது நண்பனாலும், காதலியானாலும்!
***

ஒரு ஞாயிறு காலை. டீனேஜ் வயது. எங்கள் தெருவில் இருந்த ஈஸ்வரியை சைட் அடித்துக் கொண்டிருந்த காலம். பக்கத்து தெருவில் வண்டி பழகி கொண்டிருந்தாள்.

வண்டி பழகும் அழகை நானும் நண்பனும் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் நின்று வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தோம். திடீரென எங்கள் இருவர் பக்கம் திரும்பி இங்கே வாருங்கள்! என அழைத்தாள். வேறு யாரையும் அழைக்கிறதா! என இருவரும் வேகமாய் திரும்பி பார்த்தோம். யாரும் இல்லை. நண்பன் வீட்டிற்கு பயந்து கொண்டு போகவில்லை. நான் தைரியமாய் போனேன்.

தம்பியாலும், தங்கையாலும் வண்டி ஓட்டும்பொழுது, வண்டியை பிடிக்கமுடியவில்லை. அதற்குத்தான் அழைத்திருக்கிறாள். ஈஸ்வரி வண்டியை ஓட்ட, நான் பிடித்துக்கொண்டேன். ஒரு மணி நேரம். கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தது.

அடுத்த நாள், என் அக்காவிடம் ஈஸ்வரிக்கு வண்டி ஓட்டக்கற்றுக்கொடுத்ததைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டு, யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள். "அந்த பொண்ணு யாருடா! நம்ம அத்தைப் பொண்ணா! மாமன் பொண்ணா! நீ சைக்கிள் சொல்லித்தர!" என ஒருமணி நேரம் திட்டு வாங்கியது தனிக்கதை!
***

16 வயதிலிருந்து ஆடல், பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம், சொற்பொழிவு, நாடகம், திரைப்படம், கலைவிழா, பொதுக்கூட்டம், விடிய விடிய நண்பர்களுடன் விவாதம் என பல இரவுகள் மதுரை தெருக்களில் சுற்றித் திரிந்த பயணம் எதுவும் மிதிவண்டி இல்லாமல் சாத்தியமாயிருக்காது!
***

சமீபத்தில் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன். அவரின் 6ம் வகுப்பு படிக்கும் பையன் வரைந்த ஓவியங்களை காண்பித்தார்கள்.

அதில் ஒரு ஓவியம். ஒரு பரபரப்பான மாநகர சாலை. சுற்றிலும் நிறைய கான்கிரீட் கட்டிடங்கள். சாலையில் நிறைய கார்கள் பயணிக்கின்றன. அவ்வளவு தான். பகீரென்று இருந்தது.

"தம்பி! இன்றைக்கும் நிறைய மனிதர்கள் நடந்துபோகிறார்கள். மிதிவண்டியில் பயணிக்கிறார்கள். கூட்டம் கூட்டமாய் பறவைகள் பறக்கின்றன. சாலையின் ஓரங்களில் மரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் சேர்த்தால் ஓவியம் இன்னும் அழகாக மாறிவிடும்" என்றேன்.

புன்னகைத்து சரி என்றான்.

***

20 வயதில்... கோடைகாலத்தில், நானும், நண்பனும் தேநீர் கடையில் உலகத்தைப் பற்றி கவலை கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். :)
அப்பொழுது எங்களை மிதிவண்டியில் இளம்பெண் தென்றலாய் கடந்து சென்றாள். சாலையின் வளைவில் மண்ணின் சதியால் தொபுக்கடீர் என தவறி விழுந்தாள். பதறிப்போன நாங்கள் ஓடிப்போய் உதவி செய்தோம். பிறகு அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே வீடு வரைக்கும் போய் பாதுகாப்பாக விட்டு வந்தோம்.
***

1990-களில் சிடி, டிவிடி வருவதற்கு முன்பு, வீடியோ கேசட்தான் பிரபலம். பொருளாதாரத்தில் வசதியானவர்களின் வீட்டில் தொலைக்காட்சியே இருக்கும். இன்னும் சொற்பமான நபர்களிடம் தான் பிளேயர் இருக்கும். திரையரங்கை விட்டால், படம் பார்ப்பது என்பது மிகவும் சிரமம். வருடம் ஒருமுறை கோயில் திருவிழாக்களில் ஒரு சாமிபடம், இரண்டு சமூகபடங்கள் என திரையிடுவார்கள். பாய்விரித்து படுத்துக்கொண்டெல்லாம் ஜாலியாய் பார்ப்பார்கள்.

நண்பர்களிடையே வசூலைப் போட்டு, பிளேயரை வாடகைக்கு எடுத்து பிடித்த படங்கள் போட்டு பார்க்கலாம் என முடிவுசெய்தோம். வாடகைக்கு எடுத்துவருகிற பிளேயரும், வீடியோ கேசட்டும் இல்லாத அழிச்சாட்டியெல்லாம் செய்யும். ஒருவழியாக போராடி மூன்று படங்கள் பார்த்து நண்பர்கள் எல்லாம் தூங்கி போக, காலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தால், என் குதிரையை காணோம். அதுதாங்க என் மிதிவண்டி! தொலைந்து போனதில் எனக்கு கூட பெரிய வருத்தம் இல்லை.எங்கம்மா தான் 1000 ரூ. வண்டி போச்சே!ன்னு மூன்று நாள் சோகமா இருந்தார்.
***

1990களில்மதுரை சோலைமலை திரையரங்கில், மிதிவண்டிக்கு தரும் டோக்கனுடன் ஒரு டிக்கெட்டையும் தந்துவிடுவார்கள். வரிசையில் மல்லுக்கட்டும் சிரமத்தை தரமாட்டார்கள். ஆகையால், புதுப்படங்களுக்கும், சனி, ஞாயிறுகளிலும் மிதிவண்டி இருந்தால் சோலைமலையை நம்பி படத்திற்கு போகலாம்! மிதிவண்டிக்கு மரியாதை! :)
***


சென்னையில் வாடகைக்கு மிதிவண்டி தருவதை பார்க்கமுடியவில்லை. 1980 வாக்கில் எங்கள் ஊரில் மிதிவண்டியை வாடகைக்கு தருவார்கள். 1 மணி நேரத்திற்கு 2 ரூ. 15 வயதில் காசு தட்டுப்பாடு அதிகம்.

அதனால் ஒரு மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, எல்லோரும் ஒல்லி என்பதால் ஒரே வண்டியில் 5 பேர் ஜாலியாய் 4 கிமீ தள்ளி இருக்கிற ஒரு பச்சைக் கிணற்றில் குளிக்க போவோம். 

20 அடி உயரத்தில் இருந்து தொபக்கடீர் என குளிர்ந்த நீருக்குள் குதித்து, 15 அடி ஆழம் வரை போய், வெளியே வருவது ஆனந்தமோ ஆனந்தம். இப்படி 3 மணி நேரமாவது நீரில் ஊறிக்கிடப்போம்! இப்படி அந்த ஆண்டு தண்ணீர் வற்றிய காலம்வரை, கிணற்றை பாடாய்படுத்தினோம்.


***

அறிந்தவர்கள் அபூர்வமாய் மிதிவண்டி கொண்டு வந்தால், வாங்கி கொண்டு ஒரு ஜாலி ரவுண்டு போய்விட்டு தந்துவிடுகிறேன்.

கடைசியாய் கொடைக்கானலில் வாடகைக்கு மிதிவண்டி வாங்கி, மெல்லிய மழைச் சாரலில் என் பெண்ணுடன் பயணம் போனது இன்னும் நினைவில் நிற்கிறது!

Selvam Ramki

Jul 30, 2016

அலைஸ் & ஜேம்ஸ் (2016) - அன்பை வெளிப்படுத்து!


ஜேம்ஸ் ஒரு ஓவியன். விளம்பர படங்கள் எடுத்துவருகிறார். அலைஸை (Alice) காதலிக்கிறார். நிரந்தர வருமானம் இல்லை என பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க காதலர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

எட்டு ஆண்டுகள். ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று. இப்பொழுது அலைஸ் வங்கியில் பணிபுரிகிறார். ஜேம்ஸ் சின்ன சின்ன விளம்பர படங்கள் எடுத்து எப்பொழுதும் நிதி பற்றாக்குறையுடன், நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். தன்னையும், குழந்தையும் கண்டுகொள்ளாமல் வாழ்கிறார் என கணவர் மீது நிறைய வருத்தம். இருவருடைய பரபர வாழ்க்கையும் மனக்கசப்பை தருகிறது.

இடையில் இரண்டு மாரடைப்புக்கு பிறகு அலைஸின் அப்பா சமாதான தூதனுப்புகிறார். அலைஸையும், குழந்தையையும் போய் பொறுப்பாக விட்டுவிட்டு, வீட்டிற்குள் வர மறுத்து வேலை விசயமாக வெளிமாநிலம் செல்கிறார். இரண்டு நாள்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும் பொழுது, அலைஸின் அப்பா இறந்துபோகிறார். அலைஸின் வருத்தம் இப்பொழுது கோபமாகிவிடுகிறது.

ஜேம்ஸோடு வாழ பிடிக்காமல் விவாகரத்து வழக்கு தொடர்கிறார். ஒரு கார்விபத்தில் ஜேம்ஸ் சிக்கில் கோமாவில் படுத்துவிடுகிறார். அவருடைய உயிரை எடுத்துசெல்ல வரும் தூதன், போகிற வழியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இல்லாமல், எப்பொழுதும் தொழில், தொழில் என பதற்றத்துடன் சுற்றுவது, அலைஸின் அப்பாவுடன் பேசி அவரை சந்தோசப்படுத்தியிருக்கலாம் ஜேம்ஸ் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையில் ஜேம்ஸின் தோழி அலைஸிடம் அவன் பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்ந்தவன். அவனுடைய உலகம் ரெம்ப சின்னது. அதில் நீயும், உன் மகளும் தான் இருக்கிறீர்கள். அவன் எழுந்து வரும் பொழுது அவனை மன்னித்துவிடு! என்கிறார். அவனுடைய ஓவியக்கூடத்தில் அலைஸின் அப்பாவை வரைந்து வைத்திருக்கிறான். அலைஸ் மெல்ல மெல்ல ஜேம்ஸை புரிந்துகொள்கிறார்.

மீண்டும் வாழ விரும்புகிறேன் என ஜேம்ஸ் தூதனிடம் வேண்டி நிற்க, இது உனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். இனியாவது வாழ்க்கையை வாழ்! என வாழ்த்திவிட்டு போய்விடுகிறார்.

அலைஸ், ஜேம்ஸ் மீண்டும் தங்களை பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழ்க்கையை தொடர்கின்றனர். சுபம். :)

*****

5 ஸ்டார் என்ற தமிழ்ப்படத்தில் அப்பாவாக வரும் விஜயன் பிள்ளையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பார். தனது தங்கை பெண்ணை திருமணமும் செய்து, ஊருக்கு பேருந்து ஏற்றிவிடும் பொழுது, “காலேஜை முடிச்சுட்டு வா! நீ ஒரு புது அப்பனை பார்ப்ப!” என்பார். ஆனால் அந்த பையன் திரும்ப வரவேமாட்டான். சென்னையிலிருந்து தலைமறைவாகி, ஜெர்மனிக்கு போய் அங்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டு செட்டிலாயிடுவான். தங்கை பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டோமே என எண்ணி அந்த அப்பா தற்கொலை செய்துகொள்வார்.

இரண்டு படத்திலும் சொல்லப்படும் நீதி “அன்பை வெளிப்படுத்து” என்பது தான்! ஜேம்ஸ்க்கும் தன் குடும்பத்தின் மீது அத்தனை அன்பு உண்டு. ஆனால், எப்பொழுதும் வெளிக்காட்டுவதேயில்லை. அதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், பர பர வாழ்க்கைக்கு என்ன காரணம்? என்பதை படம் எங்கும் அலசவேயில்லை. அதிலும் உள்ளே போய் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நிறைய நுகர்வு, சொந்த வீடு, அடுத்தடுத்து சொத்து என்ற ஓடுகிற ஓட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தனியாக இருக்கும் பொழுது கூட இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். பாதுகாப்பின்மை குறித்து கவலைப்படுகிறார்கள். பரஸ்பரம் கோபம் கொள்கிறார்கள்.

சமூகத்தில் சுற்றியிருப்பவர்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன் குடும்பத்தின் நலனை மட்டும் பார்ப்பது என்பது சுருங்கிப்போய் நிற்கிறது. சில குடும்பங்களை கவனிக்கும் பொழுது குடும்பத்தில் கூட தனிநபர் நலன் என்று போய் தான் நிற்கிறது. அன்பை வெளிப்படுத்து என்பதை விட, இதை பேசுவது தான் மிகவும் அவசியம்.

***

பிருத்விராஜ், வேதிகா இருவரும் படத்தை தாங்கியிருக்கிறார்கள். படத்தின் நீளம் அதிகம் என படத்தை எடுத்த விதம் நமக்கு உணர்த்துகிறது. ஒளிப்பதிவாளரே இயக்கிமிருக்கிறார். நல்ல ஒளிப்பதிவு. அந்த தேவதூதனாக வருபவருடைய பங்களிப்பு சிறப்பு

****

நன்றி : Selvam Ramki

Jul 15, 2016

வயநாடுவரை போயிருந்தோம்!


சென்னையில் அடிக்கிற அக்னி நட்சத்திர வெயிலிருந்து மூன்று நாட்கள் தப்பிக்கலாம் என மலையும் மலைசார்ந்த இடமான கேரளாவின் வடபகுதியான வயநாடு வரை போய்வந்தோம்! கோழிக்கோடு வரை ரயில் பயணம். அங்கிருந்து பேருந்தில் மலைப்பயணம். வயநாட்டின் ஒருபகுதியான சுல்தான் பத்தேரியில் உள்ள ஹோட்டலில் தங்கினோம்.

குருவா டிவீப்

காலை 9 மணியளவில் முதல் ஆளாய் போய்சேர்ந்தோம்.   இயற்கை சூழலோடு இந்த ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. 13 யானைகள் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததால், யாரையும் அனுமதிக்கவில்லை. காத்திருந்த ஒருமணிநேர வேளையில் கல்லால் அடித்து தித்திக்கும் நாவல் பழங்களை சாப்பிட்டோம். மிதகுகள் மூலம் கபினியை கடக்க உதவுகிறார்கள். ஒரு கிலோமீட்டர்வரை காட்டுக்குள் அனுமதி. போன யானைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயமிருந்ததுஉள்ளே குளுகுளு என ஓடும் கபினியாற்றில் நிறைய நேரம் குளித்தோம். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டேயிருந்தார்கள்.

பாணசுரசாகர் அணை

கபினியின் துணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கரைத்தடுப்புஅணை. திரைப்படங்களில் யாரையாவது கடத்திக்கொண்டு போவார்களே, அப்படி ஒரு வேகமாக செல்லக்கூடிய இன்ஜின் போட்டில் சுற்றிலும் பசுமையான மலைகளுக்கு மத்தியில்அதோ அந்த பறவை போல வாழவேண்டும்! இதோ இந்தஅலைகள் போல ஆடவேண்டும்என்ற பாட்டை கோரசாகப் பாடி, சாகச பயணம் செய்தோம்.   என்ன கொஞ்சம் காசுதான் அதிகம்! 6 பேருக்கு ரூ. 750 வசூலிக்கிறார்கள்.

அடுத்து, அணையின் அருகேயே இருந்த கர்லேட் ஏரியின் மேலே கம்பிகளின் வழியே  இடுப்பில் பெல்ட் போட்டு அந்தரத்தில் பயணித்த பொழுது கொஞ்சம் பதட்டமாகவும், சந்தோசமாகவும்தான் இருந்தது!

முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்

சுல்தான் பத்தேரியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது. கேரளாவில் முத்தங்கா, கர்நாடகத்தில் பந்திப்பூர், தமிழகத்தில் முதுமலை சரணாலயம் என மூன்று மாநிலத்திலும் மூன்று பெயர்களில் கோடைகாலத்திலும் பசுமையாக பரந்து நிற்கிறது ஒரேகாடு. காலை 7மணி முதல் 10மணிவரை. மாலை 3லிருந்து 5 மணிவரை காட்டுக்குள் அழைத்துசெல்கிறார்கள். 40ஜீப்கள் தான் காலையில் அனுமதி. மாலையிலும் கோட்டா தான். ஆகையால், காலை 7மணிக்கே போனால், 20பேர் நமக்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள். 16 கிமீ காட்டிற்குள் ஜீப்பில் பயணித்தபொழுதுமூன்று வெவ்வேறு இடங்களில் மான்கள் கூட்டம், 200 மீட்டர் தள்ளி எதையோ தின்றுகொண்டிருந்த  ஒத்த யானை, தயங்கி, தயங்கி காட்டுப்பாதையை கடந்து சென்ற காட்டெருமையை பார்த்தோம். 23புலிகள், 810 யானைகள் என பெரும்பட்டியலை ஓட்டுநர் சொல்லிக்கொண்டே போகும்பொழுது, பகீரென்று இருந்தது.  

அருவிகள்

மேற்குமலை தொடர்ச்சியில் மீன் முட்டி விழும் மீனுமுட்டி அருவி, சூச்சிப்பாறை அருவி என இன்னும் சில அருவிகள் இருந்தாலும், ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து மழை விழத்துவங்கும் பொழுதுதான் அருவிகள் உயிர்பெறுகின்றனமே மாதத்தில் போனதால் நாங்கள் அருவிகளை இழந்தோம்.

செம்பரா சிகரம்

வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறதுஇதன் உச்சியை தொட்டுவர ஒருநாள் டிரெக்கிங் போவது அவசியம். மூன்றுநாள் திட்டத்தில் ஒரு முழுநாளை ஒதுக்கமுடியாததால் போகவில்லை.

உணவு

எங்கு போனாலும் அங்கு வாழும் மக்களிடம் கேட்டாலே நல்ல ஹோட்டல் எதுவென சரியாக கைகாட்டிவிடுகிறார்கள். சென்னையை விட குறைவான விலையில் சுவையான டிபன் கிடைத்தது. மூன்று நாளும் மதிய வேளையில் கேரளத்தின் சுவையான பிரியாணியை வெவ்வேறு இடங்களில் சாப்பிட்டோம்.

நான் ரெம்ப சாப்ட். ரெம்ப அன்பானவாஎன அறிமுகப்படுத்திக்கொண்டு நீச்சல்குளத்தில் உற்சாகமாய் முங்கு நீச்சலடித்து, தெருவில் பழக்கப்படுத்திய யானை போனாலும், “நாங்க யானைப் பார்த்திட்டோம்என ஊரே கேட்கும்படி கத்தி, ‘என்லக்கில் தான் எல்லோரும் மான்கள், யானைகள் எல்லாம் பார்த்தீங்கஎன பயணம் முழுவதும் கலகலக்க வைத்த ஆறுவயது பூவரசி தான் எங்கள் பயணத்தை உற்சாகமாய் வழிநடத்திய குட்டித்தேவதை.

ஊர்வந்து சேர்ந்த அடுத்தநாள் காய்கறி வாங்க சென்றபொழுது, , தென்காசிகாரரான பாய், ’குற்றாலத்தில் சீசன் இப்பவே தொடங்கிருச்சு. அருவிகளில் தண்ணீர் விழுகிறதுஎன்று சொன்னதும் குற்றாலசாரல் மனதில் அடிக்க ஆரம்பித்தது.  யாரெல்லாம் குற்றாலம் வருகிறீர்கள்? J