Aug 30, 2015

டாஸ்மாக் : பிணையை ஏற்கமுடியாது! உயர்நீதிமன்றமே! முன்பணத்தை ரத்து செய்


”முன்பணம் கட்டி பிணையை ஏற்கமுடியாது!
உயர்நீதிமன்றமே!
முன்பணம் கட்ட உத்தரவிட்டதை ரத்து செய்!”

டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பல பொய் வழக்குகளை போட்டு, தொடர்ந்து கீழமை நீதிமன்றங்களில் பிணை மறுத்தனர்.  நாம் தொடர்ச்சியாக உயர்நீதி மன்றத்தில் பிணைக்காக போராடி வந்தோம்.  கடந்த வெள்ளியன்று தலைக்கு ரூ. 5000 முன்பணம், மற்றும் இன்னுமொரு பிணை வழக்கில் நொறுக்கப்பட்ட அரசு சாராயத்தின் மதிப்பில் 50% முன்பணம் கட்டவேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

பல மாவட்டங்களில் உள்ள சிறைகளில் உள்ள தோழர்களிடம் முன்பணம் கட்ட சொல்லிய பிணை உத்தரவை தெரிவித்த பொழுது, “மக்களை காக்க வேண்டிய அரசு, சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்று, சீரழிக்கிறது. தினமும் பலரையும் கொன்று குவிக்கிறது!  சாராயத்தை தடுக்கவேண்டிய அரசின் வேலையை, நாங்கள் செய்துள்ளோம்.  ஆகையால், முன்பணம் கட்டி பிணை என்பதை ஏற்கமுடியாது.  முன்பணம் கட்டுவதை ரத்து செய்ய உயர்நீதி மன்றத்தில் போராடுங்கள்” என நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், முன்பணம் கட்ட உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி, மீண்டும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை அரசு பலவிதத்திலும் சிந்தித்து, ஒடுக்கப் பார்க்கிறது. தோழர்கள் பல நாட்கள் சிறையில் இருந்தாலும், சிரமங்களை எதிர்கொண்டு, தங்களுடைய உறுதியால் அரசின் ஒடுக்குமுறையை ஒன்றுமில்லாமல் செய்கிறார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

கடந்த 3ந் தேதியன்று பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் துவங்கிய டாஸ்மாக் நொறுக்கிய போராட்டத்திலிருந்து, நமது வழக்குரைஞர்களும், நமக்கு ஆதரவான பல வழக்குரைஞர்களும் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வழக்கு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் வழக்குகளுக்காக நிறைய செலவுகள் செய்துகொண்டிருக்கிறோம்.

போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த நீங்கள் நிதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Porkodi Vasudevan,
Bank of India,
A/c No: 800010100026977
Chennai Main Branch,
IFSC Code: BKID0008000
MICR Code: 600013009

நீங்கள் கொடுக்கும் தொகை எவ்வளவாக இருந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்! இன்னும் கொஞ்சம் உற்சாகமாக வழக்குகளை முன்னெடுத்து செல்வோம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
90946 66320

குடி கெடுக்கும் டாஸ்மாக்கை உடைத்தவர்களுக்கு முன்பணத்துடன் பிணை!

டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களுக்கு நாம் நடத்திய சட்டப் போராட்டத்தில்….

முன்பணம் கட்டினால் பிணை!

குடி கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டும், அடித்து நொறுக்கிய விருத்தாச்சலம் பகுதி வாழ்மக்களுக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த மக்களுக்கும், கோவை பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் தலைக்கு ரூ. 5000 எனவும், ஒரு வழக்கில் அடித்து நொறுக்கிய சரக்கு மதிப்பில் 50% என முன்பணம் கட்ட சொல்லி, பிணை தந்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்!

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் இராஜூ மீது பல பொய் கேசுகளை போட்டு, தடுப்பு காவல் சட்டமான குண்டாஸ் வழக்கில் போட முனைந்தனர். நாம் நீதிமன்றத்தில், மணல் மாபியாக்கள், கல்வி மாபியாக்களை எதிர்த்து போராடியதால், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என வாதாடி, குண்டாஸ் வழக்கு போட விடாமல் தடுத்தோம். இப்பொழுது அவருக்கும் பிணை கிடைத்திருக்கிறது!

டாஸ்மாக் சரக்கு பொது சொத்தாம். அதை சேதப்படுத்தியற்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். டாஸ்மாக் போராட்டங்களை நசுக்க தான், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிற விதத்தில் நீதிமன்றமும் தன் பங்குக்கு முன்பணம் கட்ட சொல்லி உத்தரவிடுகிறது அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுதே, ஜெ. சொத்துக்குவிப்பில் சிறை தண்டனை என தீர்ப்பு வந்த பொழுது, அதிமுக காலிகள் எல்லாவிதமான காலித்தனங்களில் ஈடுபட்டார்கள். அவர்கள் மீதெல்லாம் ஒப்புக்காவது முதல் தகவல் அறிக்கை பதிந்தார்களா? பேருந்து மற்ற பொதுச்சொத்துக்களை கொளுத்தியதற்காக அபராதம் தான் விதித்தார்களா? அதிமுக காலிகள் கலவரம் செய்து கொண்டிருந்த பொழுது, சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த நாம் வழக்கு தொடுத்த பொழுது, அரசாங்கம் ஒப்புக்கு இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது என சொன்னதை உயர்நீதி மன்றம் எத்தனை வழக்கு பதிந்தீர்கள் என கேட்டு அப்படியே அமுங்கிகொண்டுவிட்டது!

ஆட்சியாளருக்கு ஒத்தூதுகின்றன நீதிமன்றங்கள். இவர்களை ஜனநாயகத்தின் தூண்கள் என நம்புவோமாக! நாம் நடத்தி வரும் சட்ட போராட்டத்தில் நீதிமன்றம் தனது மக்கள் விரோத நடவடிக்கைகளின் மூலமாக நன்றாகவே அம்பலமாகி வருகிறது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

சிறையின் கொடுமையை வெளியில் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு!

பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்காக நாம் நடத்திய சட்ட போராட்டத்தில்.....

சிறையின் கொடுமையை வெளியில் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு

சிறைவைப்பு என்பது நீதிமன்ற பாதுகாப்பு. அங்கு அவர்களுக்கு ஏதாவது விபரீதம் நடந்தால், நிராயுதபாணியான அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளமுடியாது! வெளியில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கமுடியாது! சிறை சென்ற மாணவர்களை உள்ளே வைத்து அடிக்கிறார்கள், மிரட்டுகிறார்கள் என்றால், நீதிமன்றம் தானே பொறுப்பாக முடியும். அதனால், மாணவர்களின் உண்மைநிலையை அறிய, மாணவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையோடு ஆட்கொணர்வு மனு ஒன்றை உடனடியாக தாக்கல் செய்தோம். வழக்கு மதியம் ஒருமணிக்கு வரும் என எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ஜெயா அரசு வழக்குரைஞருடன் தனிப்பட்ட முறையில் பேசி, எந்தவித சலனமும் இல்லாமல் அடுத்த நாளைக்கு தள்ளிவிட்டு, சீட்டை விட்டு எழுந்துபோய்விட்டார்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை விசாரணையின் பொழுதும் பிரமாண பத்திரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருந்தும், கையெழுத்து இல்லை என காரணம் காட்டி, திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர். சிறையில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆனதோ என பதைபதைத்து ஆட்கொணர்வு மனு நாம் தாக்கல் செய்தால், நீதிபதிகளோ அடித்த காயம் ’ஆறுவதற்கும்’, அடித்தவர்களை காப்பாற்றுவதற்காக ஜெயா அரசு பதில் ’தயாரிப்பதற்கும்’ கால அவகாசத்தை உருவாக்கி தந்தனர். நீதிபதிகளின் அலட்சியமானது சிறையில் போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதலை நியாயப்படுத்துவதாகவும், போலீசின் அடாவடித்தனத்தை அங்கீகரிப்பதாகவும், அப்பட்டமாக தெரிகிறது. நீதி ‘எல்லோருக்கும் பொதுவானது’ நம்புவோமாக!

ஆட்கொணர்வு மனுவை ஜவ்வாக இழுத்தடித்து ஒருவழியாக விசாரணைக்கு வந்தது. காயம்பட்ட மாணவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவரவேண்டும் என வாதிட்டோம். நீதிபதிகளோ ஜெயா அரசுக்கு தர்ம சங்கடமாகிவிடும் என வழக்கை தள்ளுபடி செய்வதிலேயே கவனமாய் இருந்தனர். நாம் வாதங்களால் நெருக்கும் பொழுது, ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக, மாவட்ட நீதிபதி ஒருவரை சிறைக்கு சென்று விசாரணை செய்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவிட்டார்கள்.


மாவட்ட நீதிபதியும் சிறையில் விசாரணை செய்தார். வெளியிலேயே ஜனநாயகம் என்றால் என்ன விலை? என்று கேட்கும் போலீசை, அதன் கோட்டையாக இருக்கும் சிறையில்? அடிப்பதெல்லாம் அங்கு சர்வசாதாரணம் என்றாலும், கைதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு சாட்சி சொல்லப்பட்டிருந்தாலும், மாணவர்களை அடித்ததை சாட்சி சொன்ன அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். நீதிபதியும் வேறு வழியின்றி அறிக்கையில் பதிவு செய்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

Aug 27, 2015

”ஜட்ஜய்யா நம்மள காப்பாத்துவார்”




டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்கள், கோவை, கடலூர், விருத்தாச்சலம், ஓசூர் என பல பகுதிகளில் கைதான மக்களுக்கும் தோழர்களுக்கு பெயில் எடுப்பதற்கான தொடர் முயற்சிகளில் நமது வழக்குரைஞர்கள் தோழர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த போராட்டத்தில்… ஒரு நிகழ்வு!

பச்சையப்பா கல்லூரி RSYF மாணவ தோழர்களை கைதாகும் பொழுது போலீசு கடுமையாக தாக்கியதை உலகமே பார்த்து காறித்துப்பியது.  சட்டவிரோதமாக காவல்நிலையத்திலும் மணல் நிரப்பிய பைப்பால் அடித்தது! அன்று இரவு மாணவர்களை ரிமாண்ட் செய்வதற்காக போலீசு நீதிபதி வீட்டிற்கு அழைத்துவந்தது!

ஊர் அடங்கியதும் இரவு 9.30 மணிக்கு நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்கும் வழக்கில் உரிய காரணங்கள் இல்லாமல் ரிமாண்ட் செய்யக்கூடாது என உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதாடினோம். நீதிபதி அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, மாணவர்களை சிறையில் அடைப்பதிலேயே காவல்துறை கண்ணும் கருத்துமாய் இருந்தது. 


கைது செய்த பொழுதும், காவல்நிலையத்திலும் காட்டுமிராண்டித்தனமாக அடித்ததை எடுத்து சொல்லியும் நீதிபதிக்கு பதைபதைப்பு வரவில்லை.  இவ்வளவு மோசமாக தாக்கியிருக்கிறீர்களே என போலீசை நீதிபதி கண்டிக்கவுமில்லை. நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்த நீதிபதியை, காவல்நிலையத்தில்  மாணவர்களை அடித்ததை ஒவ்வொருவராக சொல்வதை உட்கார்ந்து விரிவாக பதிவு செய்யவேண்டும் என கோரினோம். “நானும் மனுசன் தானே!” என சொல்லி, சீக்கிரம் முடிச்சுட்டு தூங்க போகணும் என  ஒரு இயந்திரத்தை போல போலீசு கேட்ட  கையெழுத்தை போட்டுவிட்டு கிளம்புவதிலேயே இருந்தார்.   

காவல்நிலையத்தில் போலீசு அடிப்பதையெல்லாம் இவ்வளவு பெரிதுபடுத்துகிறோம் என அசுவாரசியமாய் கேட்டு பதிவு செய்தார்.  அடித்ததை பதிவு செய்யும் பொழுது மாணவர்களை நீதிபதி “வா! போ!” என ஒருமையில் அழைத்தார்.  பொது நோக்கத்திற்காக போராடிய அந்த மாணவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. போலீசை போல ஏன் நடந்துகொள்கிறீர்கள்? மரியாதையாக அழையுங்கள் என பல வழக்குரைஞர்களும் போராடிய பிறகுதான், ஏற்கனவே கேட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் உணவிற்கு அனுப்பிவைத்தார். எல்லா மாணவர்களுக்கும் வெளிகாயங்களுக்கு மட்டும் பெயருக்கு டிஞ்சர் போட்டு, உள்நோயாளியாக அனுமதித்து விடக்கூடாது என மருத்துவர்களை டீல் செய்து, திரும்ப அழைத்துவந்தார்கள்.

நீதிபதியின் நடவடிக்கையை கவனித்த பொழுது, சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் மக்களை அடிக்கும் ஒவ்வொரு போலீசுக்கும் ஐ.ஜி. நம்மள காப்பாத்துவார் என்பதை விட, “ஜட்ஜய்யா! நம்மள காப்பாத்துவார்” என்ற நம்பிக்கை இருக்கும் என அப்பட்டமாக தெரிந்தது!
 
கொசுறு செய்தி : இரவு 9.30 மணி அளவில் நீதிபதி வீட்டிற்கு மாணவ தோழர்களை அழைத்து வந்த பொழுது, அரசை, போலீசை அம்பலப்படுத்தி முழக்கம் எழுப்பினார்கள்.  இதனால் பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த இன்னொரு நீதிபதி  வந்து மாணவர்களையும், நம்மையும் பார்த்து “தூக்கம் கலைக்கிறீர்களே!” என  விசனப்பட்டார். டாஸ்மாக் போராட்டம் அன்றைக்கு தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது, தூக்கம் கலைத்ததற்காக கவலைப்படுகிறார்! நாம் பலரின் ’தூக்கத்தை’ கலைக்க வேண்டியிருக்கிறது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

Aug 26, 2015

போராடும் தருணங்கள்


மனிதப் பண்புகளுடன்தான் வாழ்கிறோமா?
மனிதனாகப் பிறக்கின்றோம்;

இயக்கமே வாழ்க்கை..
நொடிதோறும் கடந்துசெல்கின்றன
ஆயிரமாய் சம்பவங்கள் உலகெங்கிலும்;
அன்றாடம் அரங்கேறுகின்றன
ஆணவக்காரர்களின் அத்துமீறல்களும்,
அதிகாரத்திலுள்ளவர்களின் கொடுங்குற்றங்களும்..
நாம் கண்டும், கேட்டும், பார்த்ததுமாய் சிலவும்
அறியாமலே பலவும்.

வினையின் விளைவு எதிர்வினைதானே?
அப்படித்தான் நடக்கிறதா உலகமெங்கும்..
அப்படியேதான், சரியாகத்தான்
வினையாற்றுகின்றோமா, நாமும்?!
இல்லை.. ... எனில், ஏன்?

உண்மையைக் கண்டடையப்
பகுத்தறிவு தேவை.
உண்மை சுடும்
உணர்வூட்டும், அநீதிகளுக்கெதிராய் போராடத்தூண்டும்.
ஊழித்தீயாய் உருவெடுத்து உன்மத்தர்களைப் பொசுக்கிவிடும்.
அந்த அச்சத்தில்தான்,
அன்று
'மறை'பொருளாக வைக்கப்பட்டிருந்த
அறிவு, இன்று
ஆதிக்க சாதிவெறி, ஆட்கொல்லும் மதவெறி,
ஆபாசச் சீரழிவு, பிழைப்புவாதம் என்பனவாய்
புகைமூட்டத்தில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது
ஆளும் வர்க்கங்களால்..
உண்மையை உணர்ந்துகொள்ளவியலாதபடி...

இந்த நச்சுச் சூழலைத்
தகர்த்தெறியும் ஆயுதமாக,
இருளகற்றும் தீப்பந்தமாக,
புகையைவிலக்கி உண்மையைப்
பளிச்செனத் துலங்கச்செய்கின்றன
தோழர் மருதையனின் இந்த உரைவீச்சுகள்.
இவை..
கடந்த கால்நூற்றாண்டு காலத்தில்
இம்மண்ணில் அரங்கேறிய
சமூக அவலங்களின் மீதும்,
அடக்கி, ஒடுக்கி, சுரண்டப்படும்
ஏழை மக்களின்மீது நிகழ்த்தப்பட்ட
அரச பயங்கரவாத வன்முறை வெறியாட்டங்களின் மீதும்
விளாசப்பட்ட சாட்டையடிகள்.
****

சிறிதாய்க் களைகொல்லாததன் விளைவு
விஷ விருட்சங்களாய்க் கொல்கின்றன
மக்களை இன்று.

பாசிச இராஜீவுக்காக
அழச்சொன்னார்கள் அன்று
அரை வயிற்றுக் கஞ்சிக்கே
அல்லல் பட்டுக்கொண்டிருப்பவர்களை
வல்லரசுக் கனவுகானச் சொன்ன
ஆளும் வர்க்கக் கோமாளி
அப்துல் கலாமுக்கு
ஒப்பாரி வைக்கச்சொல்கிறார்கள் இன்றும்.

இலட்சக்கணக்கில்
ஈழத்து உறவுகள்
உயிர் நீத்தபின்னரும்
தாயகத்தில் குறையவில்லை
புலிவேடம் தரித்த
குள்ளநரிகளின் ஊளைச்சத்தம்.

வெட்டி வீழ்த்தப்படாத
ஆதிக்க சாதிவெறியின் கொடுங்கரங்கள்
படுகொலை செய்துகொண்டுதானிருக்கின்றன
இளவரசுகளையும், கோகுல்ராஜ்-களையும்;
தீக்கிரையாக்குகின்றன சேரிக்குடும்பங்களை
நாயக்கன்கொட்டாயிலும், சேஷசமுத்திரத்திலும்.

உலகளந்த பெருமாளையே
விஞ்சி நிற்கின்றன
உலகமயத்தின் நவீன அவதாரங்கள்.
அன்று
இறால் பண்ணைகள்
இன்று
தொழிலாளி வர்க்கத்தின் கொத்தடிமைப் பண்ணைகளாக
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

இலட்சக்கணக்கில்
தற்கொலை செய்யப்படுகின்றனர் விவசாயிகள்.
வனங்களிலிருந்து, வாழ்விடங்களிலிருந்து
விரட்டப்படுகின்றனர் பழங்குடி மக்கள்.

கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன
பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளால்.
ஆற்று மணலும், ஊற்று நீரும்,
கிரானைட்டும், தாதுமணலும்
பகற்கொள்ளையடிக்கப்படுகின்றன.
ஊழித்தாண்டவம் ஆடுகிறது முதலாளித்துவக் கும்பல்.

தொடர்கதையாய் நீள்கிறது
காஷ்மீரின் துயரம்.
நீதி கேட்டு அழுகின்றன
மும்பைக் கலவரத்திலும்,
குஜராத் படுகொலையிலும்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மா.
அப்சல் குரு, யாகூப் மேமன்களின்
உயிர் குடித்தபின்னும் பசித்துக் கிடக்கிறது
பார்ப்பன இந்துமதவெறி.

பொருளில்லார்க்கிவ் வுலகில்லை.
ஆம்.
நீதியும், நியாயமும் உனக்கில்லை
என்கிறது ஊழல் நீதிமன்றம்.
காவல் நாய்களின்
வன்புணர்ச்சி வக்கிரங்களும்,
கொட்டடிக் கொலைகளும்
கேள்வி கேட்பாரின்றித் தொடர்கின்றன.

தடியாலடித்துக்
குடிகாக்கிறது தாயுள்ளம் கொண்ட அரசு.
எழுதித் தீர்க்கவியலாவண்ணம்
நீண்டுகொண்டே செல்கிறது.. ... ........
இன்றைய அநீதிகளும், அவலங்களும்.

****
ஆயின்,
என்ன செய்ய வேண்டும்?

நமது அறிவுக்கண்ணை
அழுத்திக்கிடக்கும் அழுக்குகளை நீக்கி
உண்மையை உற்றுப் பார்த்து,
உணர்வுபெற்றுப்
போராட வேண்டிய தருணமிது என்பதை
உணர்த்துகின்றது இந்நூல்.

மனிதன் ஒரு சமூக விலங்கு..
மானிடவியலாளர்களின் கூற்று.
தலைமுறைகளின் சேகரமாய் நமது
மரபணுக்களில் ஊறிவந்த
அன்பு, கருணை, இரக்கம்,
அநீதிகண்டு பொங்கும் கோபம்,
பண்பு, பரிவு, பாசம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நேசம்,
நாட்டுப்பற்று, தியாகம், மனிதநேயம்...
பரந்து, விரிந்த மனப்பாங்கு,
அனைத்தையும் அரித்துத் தின்றுகொண்டிருக்கின்றன
சாதி-மதவெறி, சுயநலமோகம், நுகர்வுக்கலாச்சாரம்,
நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்தியக் கலாச்சாரச் சீரழிவுகள்...
உள்ளிட்ட இன்றைய சமூகக் கேடுகள்.

இயற்கையை அழித்து,
கோடிக்கணக்கான மக்களின்
வாழ்வைப் பறித்து,
உழைப்பைச் சுரண்டி,
உயிரைக்குடிக்கிறது ஆளும் வர்க்கம்.
மனிதர்களின்
சமூக உணர்வை, உறவைப் பறித்தெடுத்து
விலங்கின் நிலைக்குத் தாழ்த்துகிறது.

இந்த அநீதிகளை வீழ்த்த
ஒடுக்கப்படுவர்களும், உழைக்கும் மக்களும்
ஓரணியில் திரண்டு,
ஒன்றுபட்டுப் போராடவேண்டிய தருணம் இது.
இவ்வுண்மையை உணர
நாம் அனைவரும்
படிக்கவேண்டிய நூல் இதுதான்.

-மருதமுத்து,
உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

வெளியீடு -
புதிய கலாச்சாரம்,
18, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044-23718706
விலை ரூ. 40/-

Aug 21, 2015

பேருந்து நிறுத்த நிழற்கூரையில் ஜெவின் சாதனை பட்டியல்!



சென்னையில் பல பேருந்து நிறுத்தங்களில் வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்குவதற்கு முன்பெல்லாம் நிழற்கூரை இருப்பதில்லை. தண்டையார் பேட்டையில் மக்கள் மத்தியில் நாம் பிரச்சாரம் செய்த பொழுது, ஒரு நிழற்கூரை இருந்தால் சிரமமின்றி இருக்கும் என மக்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

சமீப காலங்களில் கவனித்தால், பல பேருந்து நிறுத்தங்களில் பள பளவென அலுமினியத்தில் நிழற்கூரை அமைக்கப்பட்டு, ஜெவின் ’சாதனை’களை ஜெவிற்கு பிடித்த பசுமையான பச்சை வண்ணத்தில் நிறைய புகைப்படங்களை கண்ணாடிக்குள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கழட்டிவிடப்பட்ட போக்குவரத்து துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சிந்தனையா? அல்லது மாநகராட்சியின் மேயரின் சிந்தனையா தெரியவில்லை.

மக்களுக்கு நிழற்கூரை கூட எப்படி சாத்தியப்படுகிறது என்றால், தாங்கள் விளம்பரம் செய்வதற்கு ஒரு இடம் ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுவதால் தான் கிடைக்கிறது!

உங்கள் பகுதியில் எப்படி? பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்கூரை இருக்கிறதா? அதில் ஜெவின் விளம்பரம் இருக்கிறதா? அல்லது வேறு விளம்பரம் இருக்கிறதா?

அதில் சொல்லப்படும் பல விசயங்கள் சாதனைப் பட்டியலில் சேருகிறதோ இல்லையோ, நாலு வயசு பையன் சரக்கடிச்சது! பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு, சாலையில் கிடப்பது தான் ஜெவின் உண்மையான சாதனைகள்!

Aug 9, 2015

ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது PRPC சென்னைக் கிளை!



நேற்று தான் கிளை துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் ஆறு ஆண்டுகளை கடந்து வந்துவிட்டோம்!

உழைக்கும் மக்கள் உரிமைகளுக்கான தொடர்போராட்டத்தில்…
அடிப்படை உரிமைக்களுக்கான பகுதி வாழ் மக்களுடன் இணைந்து நின்ற போராட்டங்கள்!

சமச்சீர் கல்வி, இலவச கல்வி, அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள்!
மனித உரிமை மீறல்களை கண்டித்த போராட்டங்கள்!
உச்சநீதி மன்றம் வரை சென்று நடத்திய பல பொது நலவழக்குகள்!

- என கடந்து வந்த போராட்ட பாதையை நினைத்துப் பார்க்கும் பொழுது, சந்தோசமாக உணர்கிறோம்.

இந்த போராட்ட பயணத்தில் எங்களுக்கு பல உதவிகள் செய்த மூத்த வழக்குரைஞர்கள், சக வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள், தோழர்கள் என பலரையும் நன்றிகளுடன் நினைத்து பார்க்கிறோம்.

உலகமயமாக்க சூழலில் சமூகத்தில் மனித உரிமை மீறல்கள் மலிந்து வரும் வேளையில், நாம் செய்யவேண்டிய பணிகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன. சமூக அநீதிகளை எதிர்த்து போராடும் மக்களை காக்க இப்பொழுது செயல்படுவதை விட, இன்னும் உற்சாகமாகவும், உறுதியாகவும் இயங்க இந்நாளில் உறுதியேற்கிறோம்.

எங்களுடன் இணைந்து போராட உங்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

இன்னும் இரண்டு மாசம் கூட சிறையில் இருக்கட்டும்! டாஸ்மாக் கடை ஒழிஞ்சா போதும்!


அரசு சாராயக் கடையை நொறுக்கி கைதான பச்சையப்பா மாணவர்களை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறை மோசமாக தாக்கியது. சிறைக்குள் போன பிறகும், சிறை காவல்துறையும் தாக்கியது!

இதில் காயம்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை தரவில்லை. காயம்பட்ட மாணவர்களின் உண்மை நிலை அறிய, கைதானவர்களில் ஒருவரான சாரதி அவர்களின் தாயார் சுலோசனா அவர்களின் பெயரில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தோம்.

அந்த தாயாரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ”என் பையன் சிறையிலிருந்து எப்பம்மா வருவான்?” என்றார்.

அந்த தாயாரின் மனம் வருந்த கூடாது என்பதற்காக “வெளியே கொண்டு வருவதற்காக எல்லா வேலைகளையும் செய்து வருகிறோம். எல்லோரும் சீக்கிரம் வெளியே வந்திருவாங்கம்மா!” என்றோம்.

“பல குடும்பங்களை சீரழிக்கிற சாராயக் கடைகளை மொத்தமா ஒழிக்கணும்! அதுக்காக இன்னும் இரண்டு மாசம் கூட என் பையன் உள்ளே இருக்கட்டும்மா! பரவாயில்லை!” என்றார்.

அந்த தாய்க்கு ஆறுதல் சொல்லப்போய், இன்னும் உற்சாகமாய் செயல்படுவதற்கு அந்த தாய் தான் எங்களுக்கு உற்சாகம் தந்தார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

Aug 2, 2015

அரசு சாராயக்கடை சூறை! மக்கள் போர்க்கோலம்!

டாஸ்மாக் கடை சூறை! கலிங்கப்பட்டியில் மக்கள் போர்க்கோலம்!
போலீஸ் தடியடி! கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

 போராடும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
மக்கள் மீது தடியடி செய்து, கண்ணீர் புகைகுண்டு வீசியதை வன்மையாக கண்டிக்கிறோம்!


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை





Aug 1, 2015

நாய் செத்து மிதந்த நீரில் விடுதி உணவு : சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்!



சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லுாரிக்குரிய, மாணவர்களுக்கான விடுதி, கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் இயங்கி வருகிறது. அதில், 150 மாணவர்கள் தங்கி உள்ளனர்.

விடுதிக்கு தேவையான தண்ணீரை, தரைமட்ட குடிநீர் தொட்டியில் சேமித்து பயன்படுத்திவருகிறார்கள். அந்த தொட்டிக்கு மூடி போடவில்லை. பலமுறை விடுதி நிர்வாகத்திடம் மாணவர்கள் வலியுறுத்தியும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. நேற்று முன்தினம் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொட்டியை பரிசோதித்த பொழுது, அழுகிய நிலையில் ஒரு நாய் மிதந்துள்ளது. அந்த நீரில் சமைத்ததினால் தான் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அந்த விடுதியில் இல்லை. விடுதியில் பெரும்பாலான அறைகள் இடியும் நிலையில் உள்ளன. அவற்றை சரி செய்யவேண்டும். குடிநீர் வசதி செய்துதரவேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் மில்லர்ஸ் சாலையில் மறியல் நடத்தினர்.
கல்லுாரி முதல்வர், போலீசார் மாணவர்களுடன் பேச்சு நடத்தியதில், 15 நாட்களுக்குள், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதாக கூறினார். அதன்பின் போராட்டத்தை தற்காலிகமாக மாணவர்கள் கைவிட்டனர்.