Aug 9, 2015

இன்னும் இரண்டு மாசம் கூட சிறையில் இருக்கட்டும்! டாஸ்மாக் கடை ஒழிஞ்சா போதும்!


அரசு சாராயக் கடையை நொறுக்கி கைதான பச்சையப்பா மாணவர்களை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறை மோசமாக தாக்கியது. சிறைக்குள் போன பிறகும், சிறை காவல்துறையும் தாக்கியது!

இதில் காயம்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை தரவில்லை. காயம்பட்ட மாணவர்களின் உண்மை நிலை அறிய, கைதானவர்களில் ஒருவரான சாரதி அவர்களின் தாயார் சுலோசனா அவர்களின் பெயரில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தோம்.

அந்த தாயாரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ”என் பையன் சிறையிலிருந்து எப்பம்மா வருவான்?” என்றார்.

அந்த தாயாரின் மனம் வருந்த கூடாது என்பதற்காக “வெளியே கொண்டு வருவதற்காக எல்லா வேலைகளையும் செய்து வருகிறோம். எல்லோரும் சீக்கிரம் வெளியே வந்திருவாங்கம்மா!” என்றோம்.

“பல குடும்பங்களை சீரழிக்கிற சாராயக் கடைகளை மொத்தமா ஒழிக்கணும்! அதுக்காக இன்னும் இரண்டு மாசம் கூட என் பையன் உள்ளே இருக்கட்டும்மா! பரவாயில்லை!” என்றார்.

அந்த தாய்க்கு ஆறுதல் சொல்லப்போய், இன்னும் உற்சாகமாய் செயல்படுவதற்கு அந்த தாய் தான் எங்களுக்கு உற்சாகம் தந்தார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

No comments: