Aug 26, 2015

போராடும் தருணங்கள்


மனிதப் பண்புகளுடன்தான் வாழ்கிறோமா?
மனிதனாகப் பிறக்கின்றோம்;

இயக்கமே வாழ்க்கை..
நொடிதோறும் கடந்துசெல்கின்றன
ஆயிரமாய் சம்பவங்கள் உலகெங்கிலும்;
அன்றாடம் அரங்கேறுகின்றன
ஆணவக்காரர்களின் அத்துமீறல்களும்,
அதிகாரத்திலுள்ளவர்களின் கொடுங்குற்றங்களும்..
நாம் கண்டும், கேட்டும், பார்த்ததுமாய் சிலவும்
அறியாமலே பலவும்.

வினையின் விளைவு எதிர்வினைதானே?
அப்படித்தான் நடக்கிறதா உலகமெங்கும்..
அப்படியேதான், சரியாகத்தான்
வினையாற்றுகின்றோமா, நாமும்?!
இல்லை.. ... எனில், ஏன்?

உண்மையைக் கண்டடையப்
பகுத்தறிவு தேவை.
உண்மை சுடும்
உணர்வூட்டும், அநீதிகளுக்கெதிராய் போராடத்தூண்டும்.
ஊழித்தீயாய் உருவெடுத்து உன்மத்தர்களைப் பொசுக்கிவிடும்.
அந்த அச்சத்தில்தான்,
அன்று
'மறை'பொருளாக வைக்கப்பட்டிருந்த
அறிவு, இன்று
ஆதிக்க சாதிவெறி, ஆட்கொல்லும் மதவெறி,
ஆபாசச் சீரழிவு, பிழைப்புவாதம் என்பனவாய்
புகைமூட்டத்தில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது
ஆளும் வர்க்கங்களால்..
உண்மையை உணர்ந்துகொள்ளவியலாதபடி...

இந்த நச்சுச் சூழலைத்
தகர்த்தெறியும் ஆயுதமாக,
இருளகற்றும் தீப்பந்தமாக,
புகையைவிலக்கி உண்மையைப்
பளிச்செனத் துலங்கச்செய்கின்றன
தோழர் மருதையனின் இந்த உரைவீச்சுகள்.
இவை..
கடந்த கால்நூற்றாண்டு காலத்தில்
இம்மண்ணில் அரங்கேறிய
சமூக அவலங்களின் மீதும்,
அடக்கி, ஒடுக்கி, சுரண்டப்படும்
ஏழை மக்களின்மீது நிகழ்த்தப்பட்ட
அரச பயங்கரவாத வன்முறை வெறியாட்டங்களின் மீதும்
விளாசப்பட்ட சாட்டையடிகள்.
****

சிறிதாய்க் களைகொல்லாததன் விளைவு
விஷ விருட்சங்களாய்க் கொல்கின்றன
மக்களை இன்று.

பாசிச இராஜீவுக்காக
அழச்சொன்னார்கள் அன்று
அரை வயிற்றுக் கஞ்சிக்கே
அல்லல் பட்டுக்கொண்டிருப்பவர்களை
வல்லரசுக் கனவுகானச் சொன்ன
ஆளும் வர்க்கக் கோமாளி
அப்துல் கலாமுக்கு
ஒப்பாரி வைக்கச்சொல்கிறார்கள் இன்றும்.

இலட்சக்கணக்கில்
ஈழத்து உறவுகள்
உயிர் நீத்தபின்னரும்
தாயகத்தில் குறையவில்லை
புலிவேடம் தரித்த
குள்ளநரிகளின் ஊளைச்சத்தம்.

வெட்டி வீழ்த்தப்படாத
ஆதிக்க சாதிவெறியின் கொடுங்கரங்கள்
படுகொலை செய்துகொண்டுதானிருக்கின்றன
இளவரசுகளையும், கோகுல்ராஜ்-களையும்;
தீக்கிரையாக்குகின்றன சேரிக்குடும்பங்களை
நாயக்கன்கொட்டாயிலும், சேஷசமுத்திரத்திலும்.

உலகளந்த பெருமாளையே
விஞ்சி நிற்கின்றன
உலகமயத்தின் நவீன அவதாரங்கள்.
அன்று
இறால் பண்ணைகள்
இன்று
தொழிலாளி வர்க்கத்தின் கொத்தடிமைப் பண்ணைகளாக
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

இலட்சக்கணக்கில்
தற்கொலை செய்யப்படுகின்றனர் விவசாயிகள்.
வனங்களிலிருந்து, வாழ்விடங்களிலிருந்து
விரட்டப்படுகின்றனர் பழங்குடி மக்கள்.

கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன
பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளால்.
ஆற்று மணலும், ஊற்று நீரும்,
கிரானைட்டும், தாதுமணலும்
பகற்கொள்ளையடிக்கப்படுகின்றன.
ஊழித்தாண்டவம் ஆடுகிறது முதலாளித்துவக் கும்பல்.

தொடர்கதையாய் நீள்கிறது
காஷ்மீரின் துயரம்.
நீதி கேட்டு அழுகின்றன
மும்பைக் கலவரத்திலும்,
குஜராத் படுகொலையிலும்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மா.
அப்சல் குரு, யாகூப் மேமன்களின்
உயிர் குடித்தபின்னும் பசித்துக் கிடக்கிறது
பார்ப்பன இந்துமதவெறி.

பொருளில்லார்க்கிவ் வுலகில்லை.
ஆம்.
நீதியும், நியாயமும் உனக்கில்லை
என்கிறது ஊழல் நீதிமன்றம்.
காவல் நாய்களின்
வன்புணர்ச்சி வக்கிரங்களும்,
கொட்டடிக் கொலைகளும்
கேள்வி கேட்பாரின்றித் தொடர்கின்றன.

தடியாலடித்துக்
குடிகாக்கிறது தாயுள்ளம் கொண்ட அரசு.
எழுதித் தீர்க்கவியலாவண்ணம்
நீண்டுகொண்டே செல்கிறது.. ... ........
இன்றைய அநீதிகளும், அவலங்களும்.

****
ஆயின்,
என்ன செய்ய வேண்டும்?

நமது அறிவுக்கண்ணை
அழுத்திக்கிடக்கும் அழுக்குகளை நீக்கி
உண்மையை உற்றுப் பார்த்து,
உணர்வுபெற்றுப்
போராட வேண்டிய தருணமிது என்பதை
உணர்த்துகின்றது இந்நூல்.

மனிதன் ஒரு சமூக விலங்கு..
மானிடவியலாளர்களின் கூற்று.
தலைமுறைகளின் சேகரமாய் நமது
மரபணுக்களில் ஊறிவந்த
அன்பு, கருணை, இரக்கம்,
அநீதிகண்டு பொங்கும் கோபம்,
பண்பு, பரிவு, பாசம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நேசம்,
நாட்டுப்பற்று, தியாகம், மனிதநேயம்...
பரந்து, விரிந்த மனப்பாங்கு,
அனைத்தையும் அரித்துத் தின்றுகொண்டிருக்கின்றன
சாதி-மதவெறி, சுயநலமோகம், நுகர்வுக்கலாச்சாரம்,
நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்தியக் கலாச்சாரச் சீரழிவுகள்...
உள்ளிட்ட இன்றைய சமூகக் கேடுகள்.

இயற்கையை அழித்து,
கோடிக்கணக்கான மக்களின்
வாழ்வைப் பறித்து,
உழைப்பைச் சுரண்டி,
உயிரைக்குடிக்கிறது ஆளும் வர்க்கம்.
மனிதர்களின்
சமூக உணர்வை, உறவைப் பறித்தெடுத்து
விலங்கின் நிலைக்குத் தாழ்த்துகிறது.

இந்த அநீதிகளை வீழ்த்த
ஒடுக்கப்படுவர்களும், உழைக்கும் மக்களும்
ஓரணியில் திரண்டு,
ஒன்றுபட்டுப் போராடவேண்டிய தருணம் இது.
இவ்வுண்மையை உணர
நாம் அனைவரும்
படிக்கவேண்டிய நூல் இதுதான்.

-மருதமுத்து,
உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

வெளியீடு -
புதிய கலாச்சாரம்,
18, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044-23718706
விலை ரூ. 40/-

No comments: