Aug 30, 2015

சிறையின் கொடுமையை வெளியில் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு!

பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்காக நாம் நடத்திய சட்ட போராட்டத்தில்.....

சிறையின் கொடுமையை வெளியில் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு

சிறைவைப்பு என்பது நீதிமன்ற பாதுகாப்பு. அங்கு அவர்களுக்கு ஏதாவது விபரீதம் நடந்தால், நிராயுதபாணியான அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளமுடியாது! வெளியில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கமுடியாது! சிறை சென்ற மாணவர்களை உள்ளே வைத்து அடிக்கிறார்கள், மிரட்டுகிறார்கள் என்றால், நீதிமன்றம் தானே பொறுப்பாக முடியும். அதனால், மாணவர்களின் உண்மைநிலையை அறிய, மாணவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையோடு ஆட்கொணர்வு மனு ஒன்றை உடனடியாக தாக்கல் செய்தோம். வழக்கு மதியம் ஒருமணிக்கு வரும் என எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ஜெயா அரசு வழக்குரைஞருடன் தனிப்பட்ட முறையில் பேசி, எந்தவித சலனமும் இல்லாமல் அடுத்த நாளைக்கு தள்ளிவிட்டு, சீட்டை விட்டு எழுந்துபோய்விட்டார்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை விசாரணையின் பொழுதும் பிரமாண பத்திரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருந்தும், கையெழுத்து இல்லை என காரணம் காட்டி, திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர். சிறையில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆனதோ என பதைபதைத்து ஆட்கொணர்வு மனு நாம் தாக்கல் செய்தால், நீதிபதிகளோ அடித்த காயம் ’ஆறுவதற்கும்’, அடித்தவர்களை காப்பாற்றுவதற்காக ஜெயா அரசு பதில் ’தயாரிப்பதற்கும்’ கால அவகாசத்தை உருவாக்கி தந்தனர். நீதிபதிகளின் அலட்சியமானது சிறையில் போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதலை நியாயப்படுத்துவதாகவும், போலீசின் அடாவடித்தனத்தை அங்கீகரிப்பதாகவும், அப்பட்டமாக தெரிகிறது. நீதி ‘எல்லோருக்கும் பொதுவானது’ நம்புவோமாக!

ஆட்கொணர்வு மனுவை ஜவ்வாக இழுத்தடித்து ஒருவழியாக விசாரணைக்கு வந்தது. காயம்பட்ட மாணவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவரவேண்டும் என வாதிட்டோம். நீதிபதிகளோ ஜெயா அரசுக்கு தர்ம சங்கடமாகிவிடும் என வழக்கை தள்ளுபடி செய்வதிலேயே கவனமாய் இருந்தனர். நாம் வாதங்களால் நெருக்கும் பொழுது, ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக, மாவட்ட நீதிபதி ஒருவரை சிறைக்கு சென்று விசாரணை செய்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவிட்டார்கள்.


மாவட்ட நீதிபதியும் சிறையில் விசாரணை செய்தார். வெளியிலேயே ஜனநாயகம் என்றால் என்ன விலை? என்று கேட்கும் போலீசை, அதன் கோட்டையாக இருக்கும் சிறையில்? அடிப்பதெல்லாம் அங்கு சர்வசாதாரணம் என்றாலும், கைதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு சாட்சி சொல்லப்பட்டிருந்தாலும், மாணவர்களை அடித்ததை சாட்சி சொன்ன அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். நீதிபதியும் வேறு வழியின்றி அறிக்கையில் பதிவு செய்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

No comments: