Aug 1, 2015

நாய் செத்து மிதந்த நீரில் விடுதி உணவு : சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்!



சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லுாரிக்குரிய, மாணவர்களுக்கான விடுதி, கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் இயங்கி வருகிறது. அதில், 150 மாணவர்கள் தங்கி உள்ளனர்.

விடுதிக்கு தேவையான தண்ணீரை, தரைமட்ட குடிநீர் தொட்டியில் சேமித்து பயன்படுத்திவருகிறார்கள். அந்த தொட்டிக்கு மூடி போடவில்லை. பலமுறை விடுதி நிர்வாகத்திடம் மாணவர்கள் வலியுறுத்தியும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. நேற்று முன்தினம் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொட்டியை பரிசோதித்த பொழுது, அழுகிய நிலையில் ஒரு நாய் மிதந்துள்ளது. அந்த நீரில் சமைத்ததினால் தான் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அந்த விடுதியில் இல்லை. விடுதியில் பெரும்பாலான அறைகள் இடியும் நிலையில் உள்ளன. அவற்றை சரி செய்யவேண்டும். குடிநீர் வசதி செய்துதரவேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் மில்லர்ஸ் சாலையில் மறியல் நடத்தினர்.
கல்லுாரி முதல்வர், போலீசார் மாணவர்களுடன் பேச்சு நடத்தியதில், 15 நாட்களுக்குள், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதாக கூறினார். அதன்பின் போராட்டத்தை தற்காலிகமாக மாணவர்கள் கைவிட்டனர்.

No comments: