Nov 19, 2015

நான் நாத்திகன் - ஏன்? - பகத்சிங்


மனிதன் ஒரு சிந்திக்கத் தெரிந்த விலங்கு. சிந்திப்பதால் நாம் மனிதர்கள். சிந்தனை மனித இனத்தின் சிறப்பம்சம். சிந்தனையின் நீட்சி மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது.

காடு, மலைகளில் இரை தேடி வாழ்ந்த ஆதி மனிதன் தன்னைச் சுற்றி நடப்பவற்றை உற்றுப் பார்த்துக் கற்றுக்கொள்ளத் தொடங்கியதிலிருந்து, இன்று அயல் கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான தேடல் வரை மனிதனின் சிந்தனை - தேடல், கற்றல், அனுபவம், அறிவு - படிப்படியாக வளர்ந்து இன்று பிரமிப்பூட்டும் உயரத்தில் உள்ளது.

ஆனால், மனித குலத்தின் இந்த அறிவு வளர்ச்சி அனைத்து மனிதர்களிடத்தும் சமமான அளவில் இல்லை; ஆதிக்க சக்திகளின் குரூர நோக்கங்களால் அறிவு அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கப்படவில்லை, அன்றிலிருந்து இன்றுவரை. பெரும்பான்மை மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி வைத்திருப்பதில்தான் தங்களது வாழ்க்கையின் பிரகாசம் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொண்ட ஆண்டைகளும், நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் காலங்காலமாக ஏழை, எளிய உழைக்கும் மக்களின் அறிவுக்கண்களை கனத்த திரையிட்டு மூடி மறைத்தே வந்துள்ளனர். கடவுள், மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு. .. ... இன்னும் பலவிதமாய், பல வண்ணங்களில், வடிவங்களில் தோன்றி, வளர்ந்து, நீடிக்கின்றன இத்திரைகள்... கால, தேச, வர்த்தமானங்களுக்கேற்றபடி.
********************************************

தேடல் வாழ்வின் உந்துசக்தி. சுகவாழ்வுக்கான நாட்டம் எல்லோருக்கும், எப்போதும் உண்டு. தேடல் புரிதலுக்கும், போராட்டத்திற்கும் வழிவகுக்கிறது; மாற்றத்தை இழுத்து வருகிறது.

வெள்ளையரின் கொள்ளை ஆட்சியின் கீழ் தன் நாட்டு மக்கள் படும் இன்னல் கண்டு, அவர்களின் அறியாமை, அடிமைத்தனம், கையறுநிலை கண்டு வேதனையில் துடித்தது பகத்சிங் எனும் இளைஞனின் இதயம். அவர்களின் விடுதலைக்கான தேடல் அவ்விளைஞனைப் போராட்டப்பாதைக்கு இட்டுச்சென்றது. வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்து, வறுமையில் உழலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் விடியலைக்காண விழைந்த அவ்விளைஞனைப் புடம் போட்டு, புதிய மனிதனாக வார்த்தெடுத்தது போர்க்களம். அப்போராட்டப் பாதையில் தான் பெற்ற அறிவு வெளிச்சத்தை நமக்கு சிறு நூலாகத் தந்துள்ளார் தோழர் பகத்சிங்.. அதுவே இந்நூல் - நான் நாத்திகன், ஏன்?

தேடல்.. நிகழ்வுகளை உற்றுநோக்கி ஆராயச்சொல்கிறது; உண்மையை உணரவைக்கிறது. உண்மையின் பேரொளியில் மங்கி, மடிகிறது பொய்மை எனும் காரிருள்.

மதம் பிடித்த சமூகத்தின் பிறவிப் பெருஞ்சுமையாய் தொட்டுத்தொடரும் கடவுள் நம்பிக்கையை, மத மூடத்தனங்களைச் சுட்டுப் பொசுக்குகின்றன பகத்சிங்கின் தர்க்க வாதங்கள். அங்கிங்கெணாதபடி எங்கும் நிறைந்து, இறைநம்பிக்கையெனும் பெயரில் மனிதரின் அறிவுக்கண்களை மறைக்கும் சர்வவியாபக அறியாமை இருட்திரை கிழிக்கும் போர்வாளாகத் திகழ்கிறது இந்நூல்.
உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தனது பேராசையால் இவ்வுலகையே சூறையாடி அழித்துக்கொண்டிருக்கும் கும்பல் ஒருபக்கம்; அடக்கி, ஒடுக்கி சுரண்டப்பட்டு, மாடாக உழைத்து ஓடாகத்தேய்ந்தபின்னும் உண்ண உணவின்றி, வாழ வழியின்றி பஞ்சம், பசி. பட்டினியில் வாடி, ஆதிக்கப் போரில், கொள்ளை நோயில் மாண்டு, மடியும் கோடிக்கணக்கானோர் மறுபக்கம்.. என்பதாக இவ்வுலகைப் படைத்து, இரட்சித்து, மறுமைநாளில் பரலோகத்தில் தீர்ப்பெழுதுபவனைக் கடவுள் என்று கூற முடியுமா? இது கடவுளின் தீராத விளையாட்டு என்றால், ரோமாபுரி தீப்பற்றியெரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைவிடவும், போர் எனும் பெயரில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த செங்கிஸ்கானை விடவும் குரூர மனம் படைத்த கொடியவனல்லவா, இந்தக் கடவுள்? அப்படிப்பட்ட கடவுள் நமக்குத் தேவையா? வீழ்த்துங்கள் அவனை.. என்று அறைகூவுகிறார் புரட்சியாளர் பகத்சிங்.
**************************************

நாத்திகம்..
பகுத்தறிவின் விளைபொருள்.
அறியாமை இருள் அகற்றும் பகலவன்.
அது, வெறும் கடவுள்மறுப்புத் தத்துவம் மட்டுமல்ல. உண்மையின் ஒளியில் யதார்த்தத்தைப் பரிசீலிக்க உதவும் சுடர்விளக்கு.
நீங்கள் காண மறுத்தாலும் உங்களை உற்றுப்பார்த்துக்கொண்டுதானிருக்கின்றன உண்மைகள்.
இயற்கையின் புதிர் விளங்கா ஆதிமனிதனின் எளிய நம்பிக்கையாக முளைத்த ஆன்மிகம் இன்று சீமைக்கருவேலமரமாகக் கால்பரப்பி வீசும் காற்றில் கலந்த விசமாக மாறியுள்ளது.

இறைவணக்கத்திற்கான அடிப்படை நம்பிக்கை; அச்சத்தில் குடிகொண்டுள்ளது நம்பிக்கையின் வேர். கடவுளை அடிப்படையாகக் கொண்டவை மதங்கள். கடவுள்களின் மீதான மக்களின் எளிய நம்பிக்கைகளை மூலதனமாகக் கொண்டு கடை விரித்த மத பீடங்கள் இன்று மனித உயிர்களை அறுவடை செய்துகொண்டிருக்கின்றன. அன்பை, இரக்கத்தை, கருணையைப் போதிக்கும் மதங்கள் கொலைவெறிபிடித்தாடுகின்றன இன்று.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் ஆட்டங்காணத்தொடங்கிவிட்ட ஆன்மிகம் இன்று புதிது புதிதாய் வெளித்தள்ளுகிறது அவதாரங்களை. சாயிபாபா, நித்தியானந்தா, அஸ்ரம் பாபு, அமிர்தானந்தமயி, ராதாமாதே, ராம்தேவ், பங்காரு, கங்காரு .. ... கணக்கின்றி நீள்கிறது அவதாரங்களின் பட்டியல். காம வெறியர்களும், கருப்புப் பணத்தைப் பதுக்குகின்றவர்களும், கொலை, கொள்ளைக்கஞ்சாத பஞ்சமாபாதகர்களும் இன்று அவதார புருஷர்களாய் வலம் வருகின்றனர், ஆன்மிகத்தின் ஒளியில்.
மதங்கள் மனிதத்தை வளர்க்கவில்லை; மதவெறியைத்தான் வளர்க்கின்றன. ஆயிரக்கணக்கில் பிணந்தின்றும் அடங்காத கொலைவெறியுடன் திரிந்துகொண்டிருக்கின்றன மதம்பிடித்த கடவுள்கள்.

2002-ல் குஜராத் படுகொலைகள்; அவ்வப்போது அரங்கேற்றப்படும் மதக்கலவரங்கள் என்று கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள் இசுலாமிய மக்கள், இந்து மதவெறியர்களால். கடவுளை, மதத்தை விமர்சிப்பவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாக நீள்கிறது. பெருங்கருணை கொண்ட அல்லாவின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன மனித குலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் படுகொலைகள், இசுலாமிய மண்ணிலும். சிலுவைப் போர்க் காலந்தொட்டு இம்மண்ணில் சிந்திக்கொண்டே இருக்கிறது மனித இரத்தம், மதங்களின் பெயரால்.
கோடிக்கணக்கான மக்களின் அவலமான வாழ்க்கைக்குக் காரணம், மனித உழைப்பையும், உலக வளங்களையும் ஒட்டச்சுரண்டும் முதலாளித்துவக் கும்பல்தான் என்பதைப் பெரும்பான்மை மக்கள் அறிந்துகொள்ள முடியாத வகையில் மதபோதையூட்டி அவர்களின் அறிவுக்குத் திரையிட்டு மறைக்கும் திருப்பணியைத்தான் அனைத்து மதங்களும் சிரமேற்கொண்டு செய்து வருகின்றன.

**********************************

அச்சமே இறை நம்பிக்கைக்கு அடிப்படை. நமது அறியாமையில்தான் வேர்விட்டு நிற்கின்றன அனைத்து மதங்களும்.
நம்முடைய வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள அனைத்தையும் தூக்கியெறியச் சொல்கிறார், மாவீரன் பகத்சிங்.
இல்லாத கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி, மனித அறிவைப் பாழ்படுத்தி, நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன மதங்கள். எத்தனை காலம்தான் சுமந்துகொண்டிருப்பது .. .. ... தூக்கியெறியுங்கள் இந்தச் சனியனை.

-மருதமுத்து,
பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை - 2.
விலை. ரூ.15/-

No comments: