Oct 30, 2009

பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!நன்றி : போராட்டம்

வரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (AFSPA) திரும்பப் பெறக் கோரி, அவர் கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகிறார்.

1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது.

இந்திய இராணுவப் படைகள், இச் சட்டத்தின் அரவணைப்பில், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கட்டாய ஆட்கடத்தல்கள் என அட்டூழியம் செய்து வருகின்றன. இதன் மூலம் நாட்டிற்கே தலைகுனிவையும், மணிப்பூர் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தையும் கொடுத்து வருகின்றன. “இச்சட்டம் ஒடுக்குமுறையின் சின்னமாக மாறி விட்டது. மக்களின் வெறுப்பிற்குரிய சட்டமாகவும், எதேச்சதிகாரம் மற்றும் பாகுபாட்டின் கருவியாகவும் விளங்குகிறது” என அரசாங்கம் நியமித்த ஜீவன் ரெட்டி கமிசனே கூறியுள்ளது. இனப் பாகுபாட்டிற்கான ஐ.நா கமிட்டி இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூரிலுள்ள மாலோம் எனும் இடத்தில் பத்து குடிமக்களை, இந்திய இராணுவம் படுகொலை செய்ததைக் கண்டித்து, கவிஞர் ஐரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தியக் குற்றவியல் சட்டம் 307-ன் படி அவர் தற்கொலை செய்ய முயன்றார் என நான்கு நாட்களில் அவரை கைது செய்தது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார்.

நவம்பர் 21, 2000 அன்று, அவரது மூக்கில் பிளாஸ்டிக் குழாய் சொருகப்பட்டு, அவரது உடலில் திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. கடந்தப் பத்தாண்டுகளாக இந்தத் திரவ உணவின் மூலமாகவும், உச்சகட்ட பாதுகாப்புடன் தனிமைச் சிறையில் வைத்து அவரது உயிரை இந்திய அரசு கையில் பிடித்து வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் விடுதலை செய்யப்படுவதும், உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுவதும் என தொடர் நிகழ்வாகியுள்ளது.

அவரது இடையறாத போராட்டத்திற்கு ஆதரவாக மணிப்பூர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடந்த டிசம்பர் 10, 2008 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவரது உறுதிமிக்க போராட்டத்தின் பத்தாண்டு துவக்கத்தை, “நம்பிக்கை, நீதி மற்றும் அமைதியின் திருவிழா” என மக்கள் மத்தியில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். எனவே, அமைதியிலும், நீதியிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் அவரது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது அவசியமானதாகும்.

(‘மணிப்பூர் சுதந்திரம்’ இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறைகூவலின் அடிப்படையில்)

தொடர்புடைய பதிவுகள்

மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள் - நன்றி - தெகல்கா

1 comment:

vrinternationalists said...

தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்