Apr 29, 2009
மே தினம் - பேரணி, பொதுக்கூட்டம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.
இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.
நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல்.
இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்புப் போருக்கு நாம் ஒப்புதல் கொடுத்தவர்கள் ஆவோம். அல்லது ஈழப்பிரச்சினையைக் காட்டி ஓட்டுக் கட்சிப் பச்சோந்திகள் நடத்திவரும் பித்தலாட்டத்துக்குப் பலியான ஏமாளிகள் ஆவோம்.
“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது? ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்.
இந்தப் போலி ஜனநாயகம் நமது நாட்டின் பெயரளவு இறையாண்மையையும் காவு கொடுத்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் ஆணைக்கிணங்க தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி, மறுகாலனியாக்க அடிமைத்தனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சாதி மதவெறியை ஒழிக்கவோ, அத்தகைய வெறியர்களைத் தண்டிக்கவோ இந்தப் போலி ஜனநாயகத்தால் முடிந்ததே இல்லை. மாறாக, இந்து மதவெறி பாசிஸ்டு கொலைகாரர்களை ஆட்சியில் அமர்த்தி மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைத்திருக்கிறது. எனவேதான், “இந்த மோசடி ஜனநாயகத்துக்கு மயங்காதீர்கள்” என்று மக்களை எச்சரிக்கிறோம்.
இந்திய மக்களின் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் பயன்பட்டதில்லை. அவ்வாறு தீர்க்கப் போவதாகச் சவடால் அடித்து மக்களை ஏய்க்கவும், பதவிக்கு வந்து கொள்ளையடிக்கவும் ஓட்டுக் கட்சிகளுக்குத்தான் இந்தத் தேர்தல் பயன்பட்டு வருகிறது. அதோடு, இந்தத் தேர்தலில் ஈழப்பிரச்சினை இவர்களுடைய பதவி வேட்டைக்கு அதிருஷ்டப் பரிசாக அகப்பட்டிருக்கிறது.
எண்ணிப்பார்க்கவே மனம் கூசுகிறது. பீரங்கித் தாக்குதலுக்கும், விமானக் குண்டு வீச்சுக்கும் இரையாகி, அன்றாடம் நாடோடியாய் ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் பரிதவிப்பை, கூச்சமே இல்லாமல் தங்களுடைய பதவி பேரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.
“ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நிறுத்து! சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்து!” என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக மக்கள் போராடத் தொடங்கியவுடனேயே ஓட்டுப் பொறுக்கிகளுக்கு மூக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது.
மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், இராணுவப் பயிற்சி நிலையங்கள் முன் மறியல், மாணவர் போராட்டம், வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, தமிழகம் தழுவிய கதவடைப்பு, முத்துக்குமரன் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்புகள்..! கடந்த 6 மாதங்களாக தம்மால் இயன்ற எல்லா வடிவங்களிலும் தமிழக மக்கள் போராடினார்கள். ஆனால் தனது ஒரு மயிரைக் கூட அசைக்கவில்லை இந்திய அரசு.
தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது, இந்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பியது. சிங்கள இராணுவத்துக்கு சென்னையிலேயே பயிற்சியும் அளித்தது. “இந்தப் போரை வழிநடத்திக் கொண்டிருப்பது இந்திய இராணுவம்தான்; ஈழத்தமிழ் மக்களையும் புலிகளையும் துடைத்தொழிப்பதென்பது, ராஜபக்ஷே அரசின் கொள்கையாக மட்டும் இல்லை. இந்திய அரசின் கொள்கையும் அதுதான்” என்பது அம்பலமானது.
தமிழகமெங்கும் சோனியா, மன்மோகன் கொடும்பாவிகள் எரிந்தன. காங்கிரசார் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடனே, சொக்கத்தங்கம் சோனியாவின் அண்ணன் கருணாநிதிஜி வெறி கொண்டு பாய்ந்தார். பேசினால் ராஜத்துரோகம், படத்தை எரித்தால் தேசியப் பாதுகாப்பு சட்டம் என்று போலீசு இராச்சியத்தைக் கட்டவிழ்த்து விட்டார். அதன் உச்சகட்டமாக அரங்கேறியது சென்னை உயர்நீதி மன்ற போலீசு கொலைவெறியாட்டம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா? 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வோமென அன்று சவடால் அடித்தார்கள் தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள். செய்தார்களா? சவடால்களையெல்லாம் இன்று கமுக்கமாக மறைத்து விட்டார்கள். ஈழத்தில் சண்டை ஓயவில்லை. ஆனால் இங்கே நாற்காலிகளுக்கான நாய்ச்சண்டை தொடங்கிவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிணம் இவர்களது பதவிச் சூதாட்டத்தின் பகடைக்காயாகிவிட்டது.
தனது வாரிசுகளின் தொழில் சாம்ராச்சியத்தையும் அவர்களது அரசியல் எதிர்காலத்தையும் உத்திரவாதப்படுத்திக் கொள்வதற்காக ஆட்சியையும் காங்கிரசுடனான கூட்டணியையும் இறுகப் பற்றிக் கொண்டு ஈழத்தின் இன அழிப்புப் போருக்கு விசுவாசம் காட்டுகிறார் கருணாநிதி. பதவிதான் அவரது உயிர் மூச்சு. “அமைதி வழியில் ஈழம் அமைந்தால் நான் அகமகிழ்வேன்” என்ற அறிக்கையெல்லாம் வெறும் பேச்சு. இதைவிட நயவஞ்சகமான பேச்சை நீங்கள் கேட்டதுண்டா?
போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக அன்புமணியைப் பதவி விலகச் சொன்னால் கடைசி இரண்டு மாதக் கல்லாப் பணத்தை அநாவசியமாகத் “தியாகம்” செய்ய நேரிடும் என்பதால், அன்புச் சகோதரியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன் பின் கனத்த இதயத்துடனும் சூட்கேஸுடனும் மன்மோகன்சிங்கிடமிருந்து விடை பெற்றிருக்கிறார் மருத்துவர் அய்யா. “இனி நான் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தால் அது தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம்” என்று முன்னர் அறிவித்த இந்த அய்யா, இன்று கூச்சமே இல்லாமல் அம்மாவுடன் நின்று பல்லிளிக்கிறாரே, இவரைவிட இழிந்த பிழைப்புவாதியை உங்களால் காட்ட முடியுமா?
“போரென்றால் மக்கள் சாவது சகஜம்தான்” என்று கூறி ராஜ பக்ஷேவுக்கு ஜெயா வக்காலத்து வாங்கியபோது துடிக்காத வைகோவின் மீசை, நாற்காலி எண்ணிக்கையை ஜெ குறைத்தவுடன் துடிக்கின்றதே, இந்த “ஈன”மான உணர்வுக்கு எந்த அகராதியிலாவது விளக்கம் இருக்கிறதா?
இனப்படுகொலைக்குத் துணைநிற்கும் காங்கிரசை எதிர்த்து திருமாவளவன் திமிறி எழவில்லை, திருப்பி அடிக்கவில்லை, அத்துமீறவுமில்லை. இரண்டு நாற்காலிகள் கிடைத்தவுடன் தங்கபாலுவை சந்தித்து வருத்தம் தெரிவித்து அடங்கிவிட்டார் இந்த “தமிழ்நாட்டுப் பிரபாகரன்”! இவரது அடக்கத்தை விஞ்சவும் இங்கே ஆள் இருக்கிறதா?
யு.சி.பி.ஐ என்ற காங்கிரசு எடுபிடிக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராஜீவின் இலங்கை ஆக்கிரமிப்புக்குக் கூஜா தூக்கிய தாவன்னா. பாண்டியன், போயஸ் தோட்டத்துக்குத் தாவினாரே, அவரது ஈழ ஆதரவு அவதாரத்தின் நோக்கமே இதுதான் என்று ஆறுமாதங்களுக்கு முன் நீங்கள் ஊகிக்க முடிந்ததா?
பல கட்சிகள் கொள்கைகளைத் துறந்தோடிய போதிலும், மார்க்சிஸ்டுகள் மட்டும்தான் ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதாவுடன் “கொள்கைபூர்வமான” கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குக் கசக்கிறதா, இனிக்கிறதா?
மாமி ஜெயலலிதா, ஈழப்போரைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக முன்னர் கருணாநிதியைச் சாடியதும், பின்னர் போரை ஆதரித்ததும், காங்கிரசுக்குத் தூது விட்டு பேரம் படியாதென்று தெரிந்தபின் கூட்டணிக் கூஜாக்களின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதக் காட்சியில் நடித்ததும்… இந்தக் கேலிக்கூத்தெல்லாம் வேறெந்த நாட்டிலேனும் நடக்கக்கூடுமா?
ஈழத்தமிழர்க்கு ஆதரவாக அத்வானியை அறிக்கை விடவைக்கிறார் வைகோ. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் பாரதிய ஜனதாவும் உறுப்பினராம்! தமிழ் விரோத பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு தமிழ்மக்கள் மத்தியிலேயே அங்கீகாரம் தேடித்தரும் பணியை யாரேனும் இதைவிட எளிதாக்க முடியுமா?
“முடியும்” என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். “ஈழ மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோகும் காங்கிரசை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்” என்று கூறிக்கொண்டு, அத்வானியையும் ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில ஈழ ஆதரவாளர்கள்.
ஈழப்பிரச்சினையில் சுப்பிரமணியசாமி, சோவின் கொள்கைதான் பா.ஜ.க., அ.தி.மு.க.வின் கொள்கை. இது உலகத்துக்கே தெரியும். இந்த ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும்! வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, “யாழ் கோட்டையில் சிக்கிக் கொண்ட 20,000 சிங்கள சிப்பாய்களை விடுவிக்காவிட்டால், இந்திய விமானப்படையை அனுப்புவோம்” என்று புலிகளை மிரட்டியது பா.ஜ.க அரசு. “அதே பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாளை ராஜபக்சேவை மிரட்டும்” என்று நம்மை இவர்கள் நம்பச் சொல்கிறார்கள். ராஜபக்ஷேவை மிரட்டுவது இருக்கட்டும், “காவிரித் தீர்ப்புக்குக் கட்டுப்படுமாறு” கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அத்வானி கொஞ்சம் மிரட்டிக் காட்டுவாரா?
ஈழம், சேதுக்கால்வாய், காவிரி, ஒகேனக்கல், முல்லைப் பெரியார், மீனவர் படுகொலை.. என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு எதிரானதுதான், காங்கிர”, பா.ஜனதா மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலை. அதற்குத் துணை போவதுதான் பிற கட்சிகளின் நிலை. தீர்மானமான முடிவில் இவர்கள் ஒருபோதும் நின்றதில்லை.
ராஜ பக்ஷேவுக்கு துணை நிற்கும் காங்கிரசுடன் ராமதா”க்கும் திருமாவளவனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையாம்! வைக்கோவுக்கோ, ராஜ பக்ஷேயின் அக்கா ஜெயலலிதாவுடன் பிரச்சினையே இல்லை. ஆனால் இவர்கள் மூவரும்தான் ஈழத் தமிழர்களின் “காவல் தெய்வங்களாம்”! வெட்கக்கேடு!!
இந்தத் தேர்தல் முடியட்டும். இதில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், காங்கிரசு அல்லது பா.ஜ.க. அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு இவர்கள் சோரம் போவார்கள். ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவும் துணை நிற்பார்கள். இதுவரை நடந்து வருவதும் இனி நடக்கப் போவதும் இதுதான்.
இருந்தாலும் என்ன? டில்லியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளிடம் காவடி எடுத்து கருணை மனுக் கொடுப்பதன் மூலம் ஈழப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று நம்புகிறார்கள், ஈழ ஆதரவாளர்கள். டில்லி மனது வைத்தால் ஈழம் அமைந்து விடும் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.
தமிழகமே எதிர்த்தபோதும் இன்று சிங்கள அரசுக்கு இந்தியா துணை நிற்பது ஏன்? இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கத்தின் கீழ் இலங்கையை வைத்திருப்பதுதான் இந்திய அரசின் நோக்கம். உலகமயமாக்கத்தின் ஆதாயங்களால் முன்னிலும் பன்மடங்கு கொழுத்துவிட்ட அம்பானி, டாடா, பிர்லா, மித்தல், மகிந்திரா போன்ற தரகு முதலாளிகள் இலங்கையின் சந்தை முழுவதையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். தெற்காசியா முழுவதற்கும் ரூபாயை நாணயமாக்கி தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவது போராளிகளும் போராட்டங்களும் இல்லாத அமைதியான இலங்கை. அந்த சுடுகாட்டு அமைதியை நிலைநாட்டத்தான் ராஜபக்ஷேவுக்குத் துணை நிற்கிறது இந்திய அரசு.
இந்திய ஆளும்வர்க்கம் விரும்பாத எதையும் எந்தக் கட்சியின் ஆட்சியும் செய்யப்போவதில்லை. இந்திய மண்ணை பன்னாட்டு முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளா, ஈழத்தமிழர்களின் உரிமைக்காக இந்தியத் தரகு முதலாளிகளின் நலனை விட்டுக் கொடுப்பார்கள்?
தெற்காசியப் பகுதியில் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆயுதமும் நிதிஉதவியும் அளித்து வரும் இன்றைய சூழலில், ராஜபக்சேவை அரவணைக்காமல், ஈழத்தமிழ் மக்களை அத்வானி ஆதரிப்பார் என்று நம்புவது முட்டாள்தனமில்லையா?
“ஒரே இந்தியா ஒரே சந்தை” என்று பார்ப்பன இந்து தேசியத்தால் இந்தியாவின் எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்கிவரும் இந்திய அரசு, காஷ்மீர் வடகிழக்கிந்திய மக்களைப் பல பத்தாண்டுகளாய் துப்பாக்கி முனையில் நசுக்கி வரும் இந்திய அரசு, ஈழப் போராளிகள் மீது கருணை காட்டும் என்று மக்களை நம்பவைப்பது அயோக்கியத்தனமில்லையா?
காங்கிரசு தோற்றாலென்ன, எத்தகைய தோல்வியும் காங்கிரசுக்குப் பாடம் புகட்டாது. “ஆட்சியை இழந்தாலும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு சமீபத்தில்தான் பாடம் புகட்டினார் மன்மோகன் சிங். ஈழ ஆதரவாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்! எத்தகைய தேர்தல் வெற்றியும் அகண்டபாரத வெறி பிடித்த அத்வானியையும் ஈழ ஆதரவாளராக உருமாற்றிவிடாது.
இலங்கையின் மீது இந்திய ஆளும் வர்க்கத்தின் பிடி அகல வேண்டுமானால், அதன் காலடி நிலம் சரிய வேண்டும். இலங்கைக்கு ஆசைப்பட்டால், தமிழகத்தை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். இந்து இந்தி இந்தியா என்ற பார்ப்பன தேசியம் உடைத்தெறியப்பட வேண்டும். தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் வீழ்த்தப்படவேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தப் போராட்டத்தின் ஒரு படி. ஈழமக்களுக்காகத் தமிழகம் விடுத்த ஒருமனதான கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசை, நிராகரிக்கிறார்கள் தமிழ் மக்கள் என்று உணர்த்தும் ஒரு அடி.
இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரண்டெழச் செய்வதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாம் கொடுக்கக் கூடிய முடிவான பதிலடி!
இந்த கட்டுரையை பரவலாக அனைத்து பிரிவினரிடத்திலும் கொண்டு சேர்க்குமாரு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பிரசுரத்தின் PDF கோப்புக்கு இங்கே சொடுக்கவும்
ஈழத்தின் மீதான இந்தியாவின்
மேலாதிக்கப் போருக்கு
பதிலடி கொடுப்போம்!
தேர்தலைப் புறக்கணிப்போம்!
ஈழத்தமிழ் மக்களின்
குலையறுக்கும் காங்கிரசு தி.மு.க…
தலையறுக்கும் பா.ஜ.க. அ.தி.மு.க…
ஈழத்தமிழர் பிணத்தைக் காட்டி
பதவி வேட்டையாடும்
பச்சோந்திகளுக்குப்
பாடம் புகட்டுவோம்!
மே 1, 2009
பேரணி
பொதுக்கூட்டம்
திருவள்ளுவர் திடல், தஞ்சை
மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.
மேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506
நன்றி :
http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment