Aug 14, 2008

உத்தம்சிங் என்றொரு மாவீரன்!

உத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன்.

படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்பட்டு, பல சிரமங்களை எதிர்கொண்டு, பல நாடுகள் கடந்து, சமயம் பார்த்து காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே பழிவாங்கியவன் இந்த உத்தம்சிங்.

இந்த அரசு, ஆட்சியாள‌ர்க‌ள் செய்த‌ ப‌ல‌ ப‌டுகொலைக‌ளை மற‌ந்து, 61ம் ஆண்டு சுத‌ந்திர‌ தின‌த்தை ம‌க்க‌ளும் கொண்டாடி கொண்டு இருக்கிறார்க‌ள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ‍ கொள்கைகளால் இந்தியா மீண்டும் அடிமையாகி கொண்டு வ‌ருகிற‌து.
அத‌ன் பாதிப்புக‌ளை ம‌க்க‌ள் தின‌ந்தோறும் ப‌ல‌ அவ‌ல‌ங்க‌ளை ச‌ந்தித்து வ‌ருகிறார்க‌ள்.

மீண்டும் ஒரு சுத‌ந்திர‌ போரைத் துவ‌ங்க வேண்டிய‌ த‌ருண‌ம் இது. 21 ஆண்டுக‌ள் க‌ழிந்த‌ பின்பும் அந்த‌ கொடூர‌காரர்க‌ளை கொன்றானே உத்த‌ம்சிங். அவ‌னை நாம் ந‌ம்முடைய‌ நினைவில் ஏந்துவோம் இந்நாளில்.

கட்டுரை தொடர்கிறது.

*******
உத்தம்சிங் நூற்றாண்டு விழா:

இறுதியாக மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.

“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.

ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!

உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத பெயர்! அவன் தனக்குத் தானே, தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!

இந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் - பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.

இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.

அவன் நினைவை, இலட்சியத்தைப் போற்றும் முகமாக “ராம்முகம்மது சிங் ஆசத் என்கிற உத்தம்சிங்” என்கிற திரைப்படம் இப்போது வெளிவந்துள்ளது.

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.

“துப்பாக்கி ரவைதீரும்வரை சுடும்படி உத்தரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.

“அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை” என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இன்று தேச பிதாவாகப் போற்றப்படுகிறார்.

அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.

இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்திய புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.

இந்து- இசுலாமிய - சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம்முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக்கொண்டான். “மதத்தின் பெயரால் என்மக்களிடம் என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்” என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 -ல் பிரிட்டனுக்கு போய்ச் சேர்ந்தான்.

உத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர் காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு- பரிசு பெற்று பதவி உயர்வு பெற்று லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ.டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம்சிங் அவனது மாளிகையில் பணியாளாகா சேர்ந்தான். இரகசியமாகப் பலிவாங்கினால் எஜமான் -பணியாள் தகராறாகக் கருதப்படும். அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.

அந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான்.

“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.

சுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட்சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.

பீகார், சௌரிசௌரவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப் போனவன் உத்த்ம்சிங். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. “அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து, “பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ” என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர், மக்கள்.

அப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும்? நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன், தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக்கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். “அறியாமல் - மனபேதலிப்பால் செய்துவிட்டேன்” என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேகத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங்.

இவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.

முப்பது ஆண்டுகளுக்குப்பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

“இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அலல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்” என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.

உத்தம்சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வதுதான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும், பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.

தியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய - காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை- உரையாடல் ஆசிரியர்.

இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.

ஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதே சமயம் நாட்டு விடுதலை சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கும், நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

ஆனால் “கத்தியின்றி இரத்தமின்றி” காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள்தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களை பூசை அறைத் தெய்வங்களாக்கி “தேச பக்தி”ப்பாயிரம் பாடுகிறார்கள்.

பகத்சிங்- உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் பாசிச மத வெறியர்கள்.

வெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட “தடா” எனப்படும் ஆள்தூக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.

“இன்னொரு ஜாலியன்வாலாபாக்” என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது? பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்துக் கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப்பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஒட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தை உட்பட 17 பேரைக் கொன்றனர்.

இந்த “ஜாலியன்வாலாபாக்” படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா? இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா? இல்லை, விசாரணைக்கமிசன் கண்துடைப்புகளை ஏற்பதா? சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா?

சத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம்பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை - பயங்கரவாத நிறுவனங்களால்தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வ்ன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் சாதாரணமக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டுஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்விமுறையின்றி கொல்லப்படுகிறான்.

“பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரௌலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதந்தூக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கைகளை அடையலாம். ஆகவே, அகிம்சைவழியும் சத்தியாகிரகமுமே சரியானது” என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.

பகத்சிங், உத்தம்சிங் வழியிலேபோய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்றுதான் காந்தி- நேரு - ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்று ஒரு ரௌலட் சட்டம்தான் இருந்தது. இன்று “தடா”, “பொடா”, “மிசா”, “மினிமிசா”, தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் “ஜாலியன் வாலாபாக் படுகொலை”யைப் போன்ற பல மக்கள் திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்விமுறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை- புரட்சித் தீயை அணைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிதுபுதிதாக பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.

நன்றி : புதிய கலாச்சாரம்