Nov 28, 2013

சொர்ணவல்லி மிஸ் - ஒரு நாளும் கோவித்ததில்லை!

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 4 – அமிர்தா
டந்த இரண்டு நாட்களில், சொர்ணவல்லி மிஸ் பற்றிய நினைவுகளில் சில வருடங்களை எளிதாய் பின்னோக்கி போய்விட்டேன். பள்ளி முடிந்து நானும், என் தோழி காயத்ரியும் சொர்ணவல்லி மிஸ்ஸிற்காக வழக்கமாய் காத்திருப்போம். அவர் வந்ததும் அவருடன் உற்சாகமாய் கிளம்புவோம். பள்ளியிலிருந்து வீட்டிற்குமான இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை மிஸ்ஸை கேள்விகளால் துளைத்தெடுப்போம். கொஞ்சம் கூட சளைக்காமல் எங்களுக்கு பதிலளித்துக்கொண்டே வருவார். தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என்று சொல்லிவிடுவார். அந்த கேள்வியை நாங்களே அப்பொழுதே மறந்து போயிருப்போம். ஆனால், மிஸ்ஸோ அது குறித்து தேடிப் படித்து, அடுத்து வரும் நாட்களில் கேள்வியை நினைவுபடுத்தி, பதிலும் சொல்வார்.
ஆசிரியை
“பள்ளிகளில் ஒவ்வொரு மாணவியைப் பற்றிய குடும்ப சூழ்நிலை, தனித்திறன் குறித்தும் அறிந்து வைத்திருப்பார்.”
அவரை வீட்டில் விட்டு விட்டு, நேரே எங்கள் வீட்டுக்குப் போய் தலையை காட்டி விட்டு, நேரே புத்தகப் பையுடன் மிஸ் வீட்டிற்கே டியூஷனுக்காக போய் விடுவோம். எங்களுடன் 10 பேராவது அவர் வீட்டில் படிப்பார்கள். அதற்காக கட்டணம் எதுவும் கேட்க மாட்டார். ஏன் எனக் கேட்டால், பிள்ளைகள் வசதியில்லாமல் சிரமப்படக் கூடியவர்கள். அவர்களிடம் பணம் வாங்க மனம் வருவதில்லை என்பார். பாடத்தில் சந்தேகம் இருப்பவர்கள் யார் வேண்டுமென்றாலும் வீட்டிற்கு வந்து படிக்கலாம் என்பார். படிக்கிற பிள்ளைகள் எல்லோருக்கும் மணக்க மணக்க அருமையான காபி தருவார்.
இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விசயம் சொர்ணவல்லி மிஸ் எங்களுக்கு வகுப்பாசிரியர் கிடையாது. அதில் எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய வருத்தம். பள்ளியில் செஞ்சிலுவை சங்க வகுப்பு ஆசிரியர் அவர். பிடித்த ஆசிரியர் சொல்லித் தருவதால் என்னவோ, சில மனதில் ஆழமாய் பதிந்துவிடுகிறது. இன்றைக்கும் போகிற போக்கில் குப்பையை எங்கும் என்னால் போடமுடியாது. உரிய இடத்தில் தான் போடுகிறேன்.
அது பெண்கள் பள்ளி. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவியைப் பற்றிய குடும்ப சூழ்நிலை, தனித்திறன் குறித்தும் அறிந்து வைத்திருப்பார். பள்ளியிலும், சுற்று வட்டார பள்ளிகளிலும் பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, யோகாசனப் போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி என எங்கு நடந்தாலும், மாணவிகளை சேரச்சொல்லி உற்சாகப்படுத்தி, கலந்து கொள்ள வைப்பார். இப்படி தொடர்ச்சியாய் கலந்துகொண்டு பல மாணவிகள் ஜெயித்து, பள்ளியும் பிரபலமானது. என்னிடம் உள்ள நிறைய சான்றிதழ்கள் எல்லாம் சொர்ணவல்லி மிஸ்ஸை தான் நினைவுப்படுத்துகின்றன.
ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து மாணவிகளை சுற்றுலா அழைத்துபோவதில் சில நடைமுறைச் சிக்கல்களை, சிரமங்களை பெரிய பாரமாய் நினைத்துக்கொண்டு எங்கும் அழைத்துப்போவதேயில்லை. சொர்ணவல்லி மிஸ் சுற்றுலாவின் முக்கியத்துவம் உணர்ந்து முன்முயற்சியுடன் ஏற்பாடு செய்தார். அப்படி ஜாலியாய் சென்று வந்த சுற்றுலாக்கள் இன்றைக்கு நினைத்தாலும் மறக்க முடியாதவை.
சொர்ணவல்லி மிஸ் யாரையும் அடிக்க மாட்டார். கோவித்துக் கொள்ள மாட்டார். கொஞ்சம் டல்லாய் இருக்கும் மாணவர்களிடம் கூடுதல் அக்கறை எடுத்து படிக்க வைப்பார். சொர்ணவல்லி மிஸ் என்றாலே மாணவர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ஆசிரியர்கள் ஓய்வறையில் சொர்ணவல்லி மிஸ்ஸிடம் மட்டும் சந்தேகம் கேட்க என எப்பொழுதும் 5 அல்லது 6 பேர் அவரை சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள்.
ஆசிரியர் என்றாலே படிப்பதை நிறுத்தியவர்களாகத் தான் பலரும் இருக்கிறார்கள். சொர்ணவல்லி மிஸ் நாங்கள் இருந்த பகுதியில் உள்ள எல்லா நூலகங்களிலும் உறுப்பினர். நான்கு நாட்களுக்கு ஒருமுறை நூலகங்களுக்கு புத்தகம் எடுத்து வருவார். எனது வாசிப்பு பழக்கம் கூட அவரிடமிருந்து துவங்கியது தான்.
அந்த பள்ளி அந்த பகுதியிலேயே முதலில் துவங்கிய உயர்நிலைப் பள்ளி. அரசு உதவி பெறும் பள்ளி. பெரும்பாலான ஆசிரியர்கள் வயதானவர்கள். சிடுமூஞ்சி ஆசிரியர்கள், கடனுக்கு வகுப்பு எடுப்பவர்கள் என பலரும் இருக்கிற வழக்கமான பள்ளிகளில் ஒன்றாக தான் பல காலம் இயங்கி வந்தது. சொர்ணவல்லி மிஸ்சும், சித்ரா மிஸ்சும் தான் இளவயது ஆசிரியர்கள். அதனால் நெருக்கமாக இருப்பார்கள். தலைமை ஆசிரியர் பள்ளியில் ஆண்டு விழாவோ, வேறு எந்த வேலை என்றாலும் சொர்ணவல்லி மிஸ்சை அழைத்துதான் செய்யச் சொல்வார். சொர்ணவல்லி மிஸ்ஸிற்கு மாணவர்களிடம், தலைமை ஆசிரியரிடம் இருக்கும் செல்வாக்கை பார்த்து, பல ஆசிரியர்கள் பொறாமையில் புறம் பேசினார்கள். சில இடைஞ்சல்களைக் கூட செய்தார்கள். இதையெல்லாம் தெரிந்தே அவர்களிடம் சிநேகமாகவும், பல உதவிகள் செய்யக் கூடியவராகவும் இருந்தார். நாளடைவில் அவர்களையும் கவர்ந்திருந்தார். சித்ரா மிஸ்சும் கூட வழக்கமான சிடுமூஞ்சி ஆசிரியராகத் தான் துவக்கத்தில் இருந்தார். சொர்ணவல்லி மிஸ்ஸிடம் இருந்த நட்பால், அவரும் ஒரு நல்ல ஆசிரியராக மாறத் துவங்கியிருந்தார்.
மாணவியர்
ஆசிரியர்கள் ஓய்வறையில் சொர்ணவல்லி மிஸ்ஸிடம் மட்டும் சந்தேகம் கேட்க என எப்பொழுதும் 5 அல்லது 6 பேர் அவரை சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள்.
மாணவர்களிடம் அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டும் விதமே தனி. தேர்வுத் தாளை அடித்தல் திருத்தலோடு எழுதும் என்னிடம், ஒரு அடித்தல், திருத்தல் இல்லாமல், குண்டு குண்டாக எழுதும் ஒரு பெண்ணின் தாளை காட்டி “இது நல்லா இருக்குல்ல!” என்பார். ‘இது மாதிரி நீயும் எழுது” என்று கூட சொல்ல மாட்டார். குப்பைகளை கண்ட இடத்தில் போடாதே என அறிவுரை எல்லாம் சொல்ல மாட்டார். அவரே இயல்பாக செய்வார். எந்த காரியம் செய்தாலும் திருத்தமாக செய்வார். அவர் தான் மாணவிகளாகிய எங்களுக்கு முன்மாதிரி.
எங்கள் குடும்பத்தில் ஒருவராக சில மாதங்களில் மாறியிருந்தார். பெண் பிள்ளை என்பதால் எங்கள் வீட்டில் எங்கேயும் வெளியே விட மாட்டார்கள். சொர்ணவல்லி மிஸ் வீட்டிற்கு என்றால் எந்த மறுப்பும் சொல்ல மாட்டார்கள். வெளியூருக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தால், அவர் வந்து நான் பார்த்துக் கொள்கிறேன் அனுப்பி வையுங்கள் என்றால், உடனே ஏற்றுக் கொள்வார்கள். அவர் மீது அவ்வளவு மரியாதை. அந்த வயதில் அழகு பற்றிய கருத்து ஆக்கிரமித்த பொழுது, மனிதர்களை நேசிப்பது; உதவுவது தான் அழகு என சொன்னது இன்றைக்கு வரைக்கும் நினைவில் நிற்கிறது.
தன்னிடம் படித்த மாணவிக்கு திருமணம் என்றால், தன்னை மதித்து திருமண பத்திரிக்கை தந்தால் தான் போக வேண்டும் என்ற ஈகோ இல்லாமல் யார் மூலமாக கேள்விப்பட்டாலே திருமணத்தில் கலந்துகொள்வார். கேட்டால், யாராவது தரக் கூடாது என நினைப்பார்களா! அதிகமான வேலைகளில் மறந்திருப்பார்கள் என்பார். என்னுடைய அக்கா திருமணம் சென்னையிலிருந்து 500 கிமீ தள்ளி ஒரு ஊரில் நடந்த பொழுதும், தவறாமல் கலந்து கொண்டார்.
இடைக்காலத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக ஓர் ஆண்டு வேலை செய்தேன். ஆசிரியராக வேலை செய்த பொழுது, என் நடவடிக்கைகளை இப்பொழுது அசை போடும் பொழுது, சொர்ணவல்லி மிஸ்ஸை போல தான் நடக்க முயன்றிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சொர்ணவல்லி மிஸ் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பார் என்பதையும் உணரமுடிந்தது. அவர் ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி செய்ததை இப்பொழுது உணர்கிறேன்.
பள்ளி துவங்கி, முதுநிலை படிப்பு வரை பல ஆசிரியர்களை கடந்து வந்திருந்தாலும், சொர்ணவல்லி மிஸ் தான் இன்றைக்கும் நினைவில் நிற்கிறார். இப்பொழுதும் தூங்குவதற்கு முன்பு, மாதத்தில் இருமுறையாவது சொர்ணவல்லி மிஸ்ஸைப் பற்றி என் பிள்ளைக்கு நினைவுபடுத்துகிறேன்.
வழமையான பள்ளியாக, கெட்டித்தட்டிப் போன ஒரு பள்ளியின் அகத்தையும், புறத்தையும் சில ஆண்டுகளில் மாற்றியமைத்தார். ’சாட்டை’ படம் பார்க்கும் பொழுது தயாளன் ஆசிரியர் சொர்ணவல்லி மிஸ்ஸாக தான் எனக்கு தெரிந்தார். ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியராலேயே இவ்வளவு செய்யமுடியும் என்றால், நாடு முழுவதும் பள்ளிகளில் சொர்ணவல்லி மிஸ் போல பரவியிருந்தார்கள் என்றால் எவ்வளவு அருமையான சமுதாயமாக மலரும் என நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.
சொர்ணவல்லி மிஸ் துவங்கி வைத்த தேடுதலில் தான், தொடர்ச்சியாக பயணித்து சமூக மாற்றத்திற்கான பணியில் பெண்கள் விடுதலை முன்னணியை கண்டடைந்து வேலை செய்கிறேன். இந்த வயதில் நிதானித்து தொகுத்து பார்க்கும் பொழுது, சொர்ணவல்லி மிஸ் என் வாழ்வில் அகத்திலும், புறத்திலும் நிறைய நல்ல தாக்கத்தை ஆழமாய் என்னுள் பதிந்திருக்கிறார் என உணர்கிறேன்.. சொர்ணவல்லி மிஸ்ஸிற்கு எந்த காலத்திலும் இதுவரை நன்றி சொன்னதாக நினைவு இல்லை. இப்பொழுது அவருக்கு இந்த நாளில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
அமிர்தா,
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

No comments: