Aug 5, 2014

பெண் நீதிபதிக்கே இந்த கதி!



தில்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, நாடு முழுவதும் போராட்டங்களும் அதை தொடர்ந்து விவாதங்களும் நடைபெற்றன! கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டன.  ஆனால், சம்பவங்கள் குறைந்தபாடில்லை.  இதோ, குவாலியரில் பெண்கள் பாலியல் பிரச்சனையை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு பொறுப்பான பெண் நீதிபதியே பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு, பணியை ராஜினாமாவும் செய்துள்ளார். 
****

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மாவட்டக் கூடுதல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவுக்கு, அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குவாலியர் நீதித்துறை நிர்வாகத்தை கவனிக்கும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி, எனது பணியின் மீது அதிக ஆர்வம் காட்டினார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நீதித்துறை அதிகாரி ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன்.

அப்போது எனது மகள் முன்னிலையில் என்னைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசினார்மேலும், நீதித்துறை அதிகாரி ஒருவரின் மனைவி தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, திரைப்படப் பாடல் இசைக்கு நான் நடனமாட வேண்டும் என்றும், அதைக் காண உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்வத்துடன் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். என்னை தனிமையில் தனது பங்களாவுக்கு வந்து சந்திக்கும்படி நீதிபதி தெரிவித்தார்.

ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதியின் விருப்பத்துக்கு நான் அடிபணியவில்லை. இதனால் குவாலியரில் இருந்து சித்திக்கு என்னை அந்த நீதிபதி இடமாற்றம் செய்ய வைத்தார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க முயன்றும், என்னால் முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதியை நான் தொடர்பு கொண்டபோது, எனக்கு அவர் மிரட்டல் விடுத்தார்.

எனவே வேறு வழியின்றி கடந்த மாதம் 7ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்து விட்டேன். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் நீதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லோதா கருத்து: இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "இது மிகவும் முக்கியமான விவகாரம் ஆகும். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்' என்றார்.

பொதுநல வழக்கு: இந்நிலையில், பெண் நீதிபதியால் குற்றம்சாட்டப்பட்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்..ஆர்.) பதிவு செய்யவும், இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேபோல், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தலைமையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியை உயர் நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குற்றச்சாட்டு நிரூபணமானால் தண்டனைக்குத் தயார்: உயர்நீதிமன்ற நீதிபதி
 
பெண் நீதிபதி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு நிரூபணமானால் தூக்கு தண்டனையை ஏற்கவும் தயார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. இது குறித்து சிபிஐ அல்லது எந்த அமைப்பின் விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி, 05/08/2014

No comments: