Apr 15, 2016

விலையில்லா பொருட்கள் - சாதனையா? வேதனையா?


எல்லா பகுதிகளிலும் விலையில்லா பொருட்கள் கொடுத்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு, பொறுத்து பொறுத்துப் பார்த்து, பிறகு செம கடுப்பாகி எங்கள் பகுதியில் யாரோ சிலர் அரசை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதும். கடந்த மாதம் அதிமுககாரர்கள் தலைமையில் ஜெ.வே தன் சொத்தில் இருந்து கொடுக்கும் பில்டப்போடு கொடுத்தார்கள்.

பக்கத்துவீட்டு வயதான அம்மா பொருட்களை வாங்க சென்ற பொழுது கிரைண்டரை தூக்க சிரமமாக இருக்கிறது என்று ஒருவரிடம் உதவி கேட்டு இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்டு அப்படியே ஓடியேவிட்டார்.

வீட்டிற்கு வந்து மிச்சமிருந்த மிக்ஸியை பார்த்தால், உள்ளே பிளைடே இல்லை. மின்விசிறியை பிரித்துப் பார்த்தால் அதன் உதிரி பாகங்கள் நாலைந்து உள்ளேயே கலைந்துகிடந்தன. ஓடுகிறதா என சோதித்துப் பார்த்தால், ஓடவில்லை. மோசமானவைகளை கொடுத்து ஏமாத்திட்டங்கப்பா! என புலம்பினார். இதே தரத்தில் தான் பலருக்கும் கொடுத்து இருக்கிறார்கள் என அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் தெரிவித்ததை பார்த்து பாட்டி நம்மளை மட்டும் ஏமாத்தலை என ஆறுதல் அடைந்தார்.

இன்றைக்கு பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு போன பொழுது, அங்கு ஒரு புத்தம்புது விலையில்லா மின்விசிறி ஜெ. படத்துடன் என்னைப் பார்த்து சிரித்தது.

விலையில்லா பொருட்கள் கொடுத்ததை எல்லாம் மக்களுக்கு சாதனை என நினைவுப்படுத்தினால், வெளுத்து வாங்கும் கொடை வெயிலில் மக்களுக்கு கூடுதலாக காதில் புகைவருவது சர்வநிச்சயம்!  :)

No comments: