Mar 24, 2008

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்!



ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்!

மார்ச் 8 பெண்கள் தினம். சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், தமது விடுதலைக்கான புரிதலையும், புத்தார்வத்தையும் புதுப்பிக்க வேண்டிய நாள்.

உழைக்கும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள், வீட்டுச் சிறையிலிருந்து விடுபட்டு, பெருந்திரளாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் கூட, அவர்களது சமூக நிலையில் பெருமளவு மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. உலகமயத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தால் அழகுப் பதுமைகளாக ஆக்கப்பட்டுள்ள பெண்கள், வீட்டிலோ சாதிய, மத, ஆணாதிக்க, நிலவுடைமை போன்ற பிற்போக்குகளின் கீழ் அடைபட்டுள்ளனர்.

இருப்பினும் சற்றே சுய பொருளாதாரத்துடனும், வெளியில் சிறிது சுதந்திரத்துடனும் நடமாடும் பெண்களுக்கு, ஆசுவாசப்படுத்தும் விசயமாக இருக்கிறது காதல். இக்காதல் பொதுவாக மேலோட்டமாகவே இருந்தாலும், அதற்கு ஆட்படும் பெண்களுக்கு குறுகிய காலத்திற்காகவாவது சுய மதிப்பையும், மகிழ்ச்சியையும் தரத்தான் செய்கிறது. வெற்றி பெறுகின்ற காதல், திருமணத்திற்குப் பிறகு தனது முற்போக்கு முகமூடியை இழந்து விடுவதால், தனது பழைய நிலையை பெரும்பாலும் அடைந்து விடுகிறாள், பெண்.

மின்னலைப் போலத் தோன்றி மறையும் இக்காதல் வாழ்விலாவது, ஒரு பெண்ணுக்கு தனது துணையைத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருக்கிறதா? குறைந்த பட்சம் காதலைத் தெரிவிக்கும் ஒரு ஆணிடம், அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் உரிமையாவது உள்ளதா? கீழ்க்கண்ட உண்மைக் கதையைப் படியுங்கள்.

நாமக்கல் மாவட்டம், தாண்டாகவுண்டம் பாளையத்தைச் சார்ந்தவர் மாரிமுத்து. கூலித்தொழிலாளியானாலும், தனது மகள்கள் சீமா, மீனா இருவரையும் அருகாமை நகரக் கல்லூரிகளில் சிரமத்துடன் படிக்க வைக்கிறார்.

ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையாக கல்லூரிக்கு கல்வி கற்கச் சென்றவர்கள் என்ற முறையில், இருவரும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள். இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும் சீமாவை, அவளது உறவுக்காரப் பையனான ஆறுமுகம் தினசரி பின்தொடர்கிறான். கொசுவலை தயாரிப்புத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஆறுமுகம் ஏழாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்டவன். சீமாவை எப்படியாவது காதலித்தே ஆக வேண்டும் என்பதில் குறியாயிருக்கிறான்.

ஆனால் சீமா அவனது காதலை ஏற்கவில்லை. இருப்பினும் ஆறுமுகத்தின் நச்சரிப்பு தாளாமல், திருமணம் செய்யவேண்டுமென்றால் தனது தந்தையிடம் பேசுமாறு கூறி, சீமா தவிர்க்கப் பார்க்கிறாள். ஆறுமுகம் விட்டபாடில்லை. தனது சுற்றத்தாருடன் மாரிமுத்துவிடம் பெண் கேட்கச் செல்கிறான். ஆறுமுகம் தூரத்து உறவென்றாலும் சீமாவுக்கு சகோதர உறவுமுறை என்பதால், பெண்தர இயலாது என்று மாரிமுத்து மறுத்துவிட்டார்.

திருமணப் பேச்சு முறிந்தாலும், அந்த இளைஞனின் காதல் உணர்ச்சி அடங்கவில்லை. விடாமல் சீமாவை தொல்லை செய்கிறான். வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய்த் திருமணம் செய்து கொள்ளலாமென வற்புறுத்துகிறான். இதிலெல்லாம் தனக்கு விருப்பமில்லை என்று, சீமா பலமுறை அவனிடம் பொறுமையாக விளக்கியிருக்கிறாள்.

இதற்கு மேல் இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று அந்த அபலைப் பெண்ணுக்குத் தெரியவில்லை. எப்படியும் சீமா தனக்குக் கிடைக்க மாட்டாள் என்பதால் ஆறுமுகம் ஆத்திரம் கொள்கிறான்.

இடையில் சீமாவைப் பெண்கேட்டு பக்கத்து ஊரிலிருந்து மாப்பிள்ளை வர இருப்பதாகக் கேள்விப்பட்ட ஆறுமுகம் சினமடைகிறான். தனக்கு கிடைக்காத சீமா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவெடுத்து, கந்தக அமிலத்தை வாங்கிக் கொள்கிறான்.

ஜனவரி 21ஆம் தேதி அதிகாலையில், வீட்டை ஒட்டியுள்ள ஓலைத்தடுப்பினாலான குளியலறையில் சீமா குளித்துக் கொண்டிருக்கிறாள். தடுப்பைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த ஆறுமுகம், குப்பியிலிருந்த அமிலத்தை அவளது முகத்தில் வீசுகிறான்.

முகம் சிதைந்த நிலையில் கதறியழும் சீமாவை, அருகிலிருக்கும் ராசிபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார், மாரிமுத்து. அங்கு வசதியில்லை என்பதால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் அந்த ஏழை மகள். இந்த முகத்தை வைத்துக் கொண்டு அக்காவால் வாழமுடியாதே என்று தங்கை மீனா கதறியழுகிறாள்.

31.01.08 குமுதம் ரிப்போர்ட்டரில், இச்சம்பவத்தை நேரடியாக விசாரித்து எழுதியிருக்கும் நிருபர் கதிரவன், போலீசால் கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகத்திடம் பேசிப் பார்க்கிறார். அவன் என்ன சொல்கிறான்? "நான் ஒன்றும் அவளுடன் ஒட்டிப் பிறந்த சகோதரன் இல்லை. என்னைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டார்கள். அதை நம்பி சீமாவும் என்னைத் தவிர்த்தாள். எனவேதான், எனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கவே கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு காரியத்தைச் செய்தேன்', முகத்தில் சலனமில்லாமல், ஆறுமுகம் கூறிய வார்த்தைகள் இவை.

நேசித்த பெண்ணின் முகத்தைச் சிதைத்து வாழ்வை இருளாக்கியிருக்கும் ஆறுமுகத்தினுடைய அந்தப் பெண் மீதான உறவைக் காதல் என்று அழைக்க முடியுமா? இந்த வக்கிரத்தைக் கண்ட பிறகு எவரும் இதைக் காதல் என்று அழைக்க மாட்டார்கள்தான். எனினும் அறிவுக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை, உணர்ச்சிக்குப் புரிவதில்லை.

காதல் குறித்த பிரச்சினைகளை யதார்த்தமாகத் தீர்மானிப்பது உணர்ச்சிதான் என்பதால், பல இளைஞர்கள் அமிலம் வாங்குவதில்லையே தவிர அதற்கு முந்தைய எல்லை வரை வன்முறையை மேற்கொள்கிறார்கள். உடன்பிறந்த ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளான இந்த வன்முறைகளை அவ்வளவு சுலபத்தில் அவர்களுக்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், ஊடகங்களும் சினிமாவும் காதலை ஒரு ஜனநாயகப் பண்பாகக் கற்றுக்கொடுக்கவில்லை.

புத்தாண்டுக்குப் பிறகு பிப்ரவரி 14 காதலர் தினம் இளைஞர்களின் திருவிழாவாக மாறிவிட்டது; இல்லை, மாற்றப்பட்டு விட்டது. என்ன பரிசு கொடுக்கலாம், என்ன வண்ணத்தில் ஆடை அணியலாம், தமிழகத்தில் காதலர்கள் சந்திக்கும் இடங்கள் எவை, பிரபலங்களின் காதல் அனுபவங்கள் என மொத்தத்தில், ஊடகங்களால் காதல் காய்ச்சல் அதிவேகத்தில் சூடேற்றப்படுகிறது. காதல் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா என்று, இந்த சூடேற்றலில் இளைஞர்கள் சங்கமிக்கிறார்கள்.

ஆனால் இந்த நெருப்பில் சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள் எவையும் எரிக்கப் படுவதில்லை. காதலையும் ஒரு நுகர்பொருளாகப் பாவிக்கக் கற்றுக் கொடுக்கும் இந்தக் கண்ணோட்டம், உண்மையில் இந்தியாவில் காதலின் தேவை குறித்தும், அதன் பிரச்சினைகளைக் குறித்தும் கடுகளவு கூட சொல்லிக் கொடுப்பதில்லை. சாதியும் மதமும் மாறி காதலித்த "குற்றத்திற்காக' உயிரோடு எரிக்கப்பட்ட காதலர்களின் கதையை எந்த ஊடகமும் கவலையோடு கூட வெளியிடுவதில்லை.

அதனால்தான் சாதியும், மதமும், வர்க்கமுமே இன்றும் இந்தியாவில் திருமணத்தைத் தீர்மானிக்கும் விதிகளாக இருக்கின்றன. காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணமாவது செட்டிலாவதற்கு என்ற காரியவாதக் கண்ணோட்டமே இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அவ்வகையில் இவர்கள், காதலின் இலக்கணத்தையும் தொழில் நுட்பங்களையும் தமிழ் சினிமாவிலிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்.

முக்கியமாக இளைஞர்களின் காதல் பார்வையை அநேகமாக சினிமாதான் தீர்மானிக்கிறது. காதல் வயப்படுவதன் அடிப்படை இனக்கவர்ச்சி என்ற உயிரியல் உறவில் இருக்கிறது என்றால், யாரை, ஏன், எப்படிக் காதலிப்பது என்ற பரிசீலனையை பண்பாட்டின் தரம் முடிவு செய்கிறது. குறிப்பாக ஆண்கள் இந்தத் தரத்தை தமிழ் சினிமாவிலிருந்துதான் பெறுகிறார்கள்.

சமூக நிலையில் இன்னமும் சமத்துவத்தை அடைய முடியாத பெண்களுக்கு, பொதுவாக, காதலுக்கான முன்முயற்சிகளைச் செய்வதற்கு வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பை உரிமையாகப் பெற்றிருக்கும் ஆண்கள், அதை எப்படிக் கையாளுகிறார்கள்?


கடைசியாக வந்த ரஜினியின் சிவாஜி படம் வரை, எல்லா திரைப்படங்களிலும் நாயகனாக வரும் ஆண்கள், பெண்களை விரட்டி, விரட்டி காதலிக்கிறார்கள், காதலித்தே ஆகவேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்துகிறார்கள். சில சமயங்களில் மிரட்டுகிறார்கள்; சில இடங்களில் எப்படியும் காதலிப்பேன் என்று சவால் விடுகிறார்கள். புதிய பாதை போன்ற படங்களில், கற்பழித்து விட்டு கல்யாணம் தன்னோடுதான் என்று வேறு வழியில்லாமல் செய்து விடுகிறார்கள். நீ ஒருவனைக் காதலிப்பதை விட உன்னைக் காதலிப்பவனை காதலிப்பதே சிறந்தது என்று உபதேசிக்கிறார்கள். இப்படி காதலுக்கு மசியாத நாயகியை வீழ்த்துவதற்கு எல்லா வித்தைகளையும் செய்கிறார்கள்.


காரல் மார்க்ஸ் தனது மருமகனுக்கு எழுதிய கடிதமொன்றில், மென்மையாக வெளிப்படுத்தப்படும் காதலில்தான் அழகிருக்கிறது என்று தான் கருதுவதாகக் குறிப்பிடுகிறார். ஒரு பெண்ணுடன் உள்ள உறவு அல்லது நட்பின் அடிப்படையில் அவள் மீது காதல் தோன்றும்போது, அதனை அவளிடம் தெரிவிப்பதில், ஆணுக்கு மிகுந்த எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். இது பழமை வாதமல்ல. இந்த அணுகுமுறையில்தான், ஒரு பெண்ணுடைய ஆளுமையின் மீது அந்த ஆண் கொண்டிருக்கும் மதிப்பு வெளிப்படுகிறது.


ஆனால் தமிழ்த் திரைப்படங்கள், ஒரு பெண்ணை வென்று அடக்கவேண்டிய விலங்காகவே கருதுகின்றன. ஒரு வரியில் சொல்வதானால், இதுதான் பச்சையான ஆணாதிக்கம்! இப்படித்தான் நமது இளைஞர்கள் பெண்களின் பின்னால் சுற்றுவதும், கவருவதும், தொல்லைப்படுத்துவதுமாக இருக்கிறார்கள். ஆணையும், பெண்ணையும் இருவேறு உலகமாகப் பிரித்து வைத்திருக்கும் இந்தியச் சமூக அமைப்பு, இந்தத் தொல்லைக் காதலை வளர்ப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.

இத்தகைய "காதல்' உணர்வே, பெண்ணை தன்னால் காதலிக்கப்படவேண்டிய அடிமையாக நினைக்கிறது. தான் நினைத்து விரும்பியதாலேயே ஒரு பெண் தன்னைக் காதலிக்க வேண்டும் என்றுதான் ஆண்கள் நினைக்கிறார்கள். தன்னைப் போலவே ஒரு பெண்ணுக்கும் சுயமதிப்பும், தெரிவு செய்யும் விருப்பமும், நிராகரிக்கும் உரிமையும் இருப்பதாக ஒரு ஆண் கனவிலும் நினைப்பதில்லை.

பெண்களைப் பொறுத்த வரை தங்களை அடிமை போல பாவிக்கும் இந்த அணுகுமுறை குறித்து கவலைப்படுவதை விட, தமது எதிர்கால வாழ்க்கையின் பாதுகாப்பு குறித்தே கவலைப்படுகிறார்கள். ஆக ஒரு பெண்ணை உடைமையாகக் கருதும் ஆண்களின் நினைப்பை கேட்பதற்கு ஆளில்லை என்பதால், ஆண்களின் காதல் முதல் முயற்சியே வன்முறையாக இருக்கிறது.

வாழ்க்கை உருவாக்கியிருக்கும் எல்லா உறவுகளிலும் மகிழ்ச்சி, துன்பம், பிரிவு, உறவு, ஏமாற்றம் எல்லாம் கலந்திருக்கிறது. அதில் ஒரு தலைக் காதல் வயப்பட்டு பின்னர் அந்தக் காதல் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், ஒரு ஆணின் கவலை மட்டும் பாரதூரமாக மாறுகிறது. தனக்கு அடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு பெண், தன்னை மறுப்பதால் ஆண்கள் தமது சுயகௌரவம் பாதிக்கப்படுவதாகத் துயரப் படுகிறார்கள்.

இதே மறுப்பு ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால், ஆண் அளவுக்கு அவள் கவலை கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில் வரலாறு அவளை நடத்தியிருக்கும் விதமும், பயிற்றுவித்திருக்கும் முறையும் வேறு. அடிமைகள் ஆண்டான்களின் மீது உரிமை பாராட்ட முடியாதல்லவா!

அதிலும் தான் மட்டும் உரிமையுடன் உறவு கொள்ளவேண்டிய அந்த பெண்ணுடம்பை வேறு ஒரு ஆண் உடைமையாக்கப் போகிறான் என்பது தெரிந்தால், காதல் மறுக்கப்பட்ட அந்த ஆண் வெறி கொள்கிறான். இந்த விசயம் எந்த அளவுக்கு அவனைச் சித்திரவதை செய்கிறதோ, அந்த அளவுக்கு அவனது இரவுப் படுக்கை தூக்கமில்லாமல் கழிகிறது.

சமயத்தில் அமிலத்தை எறியவும் துணிகிறது. அந்த அளவுக்கு விகாரமாகப் போகாத மனம் தற்கொலைக்குத் துணிகிறது. தனது அதிகாரம் செல்லுபடியாகாத எல்லா வகை ஆதிக்கங்களும், இப்படித்தான் இறுதியில் ஒரு "அவலத்தில்' முடிகின்றன.

வாழ்வின் இளமைக் காலத்தில் காதல் தோல்வியால் வரும் இந்தத் துன்பியல் பருவத்தை எல்லா ஆண்களும் கடந்துதான் வருகிறார்கள் என்றாலும், அதன் மூலமான ஆணாதிக்க மனோபாவத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மறுக்கப்பட்ட காதலில்தான், ஆணாதிக்கம் தனது சுயரூபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொள்கிறது.

இதனால் காதலில் வெற்றிபெறும் ஆண்களெல்லாம் புனிதர்கள் என்று பொருளல்ல. காதலின் காலத்தில் பெண்ணுக்கு சமத்துவத்தை "வழங்கும்' இவர்கள், திருமணத்திற்குப் பின்னர் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். காதலின் போது மறைந்து கொள்ளும் ஆணாதிக்கம், இப்போது வெடித்துக் கொண்டு கிளம்பும். காதல் ஒரு மனிதனைத் திருத்தி நல்வழிப்படுத்தும் வல்லமை உள்ளதாக திரைப்படங்கள்தான் சித்தரிக்கின்றன.

வெற்றிபெறும் ஒரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் சாக வேண்டும் என்ற புத்திமதியை வழங்கும் இச்சித்தரிப்புக்கு அப்பால், உண்மையில் காதல் ஒரு ஆணை நல்லவனாக மாற்றிவிடுமா? குறைந்த பட்சம் ஒரு பெண்ணுக்கு எல்லா விசயங்களிலும் இருக்கும் ஜனநாயக உரிமையையாவது அங்கீகரிக்கச் செய்யுமா?

பார்ப்பனியத்தின் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விட காதல் மேலானதுதான். காதலின் போது சில நல்லவிசயங்கள் குறுகிய காலத்திற்காவது நடக்கலாம். இதைத் தாண்டி ஒரு ஆணுக்கு முதிர்ச்சியான ஜனநாயகப் பண்பினை வழங்கும் வல்லமை ஏதும் காதலுக்கு இல்லை. பெரும்பாலும் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தரத்தின் அளவிற்கேற்பத்தான் அச்சமூகத்தில் நிலவும் காதலின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.

காதல் ஒரு ஆணையோ பெண்ணையோ, தானே முற்போக்காளனாக மாற்றி விடுவதில்லை. தெளிவாகச் சொல்வதாக இருந்தால், ஒரு ஆண் தனது சமூக வாழ்வில் எந்த அளவு ஜனநாயக நடைமுறையைக் கொண்டிருக்கிறானோ, அந்த அளவு தான் அவனுடைய காதலிலும் பிரதிபலிக்கிறது. மற்ற மக்களின் ஜனநாயக உரிமையையும் சுயமரியாதையையும் மதிக்கப் பழகாத ஆண், எத்தனை படித்திருந்தாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறியிருந்தாலும், அவன் மீது ஜனநாயகத்தின் வாசனை கூட ஒட்டுவதில்லை.

சொல்லப்போனால், தமது சமூக வாழ்க்கையில், ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் ஈடுபடும் ஆண்களிடம் கூட ஆணாதிக்கத்தின் எச்ச சொச்சங்கள் நீடிக்கத்தான் செய்கின்றன. முற்போக்கான இளைஞர்கள் தமது காதல் நிராகரிக்கப்படும் போது, மற்ற ஆண்களைப் போல எல்லை மீறுவதில்லை.

ஆனால் பெண்ணை உடைமையாகக் கருதும் மனோபாவத்தில் ஊறியிருப்பதால், "தான் உரிமை கோரமுடியாத தனது உடைமை குறித்து' சிந்தித்து சிந்தித்து மன உளைச்சலில் வீழ்கிறார்கள். தங்களை வருத்திக் கொள்கிறார்கள். இது தவறு என்பதை அறிவு ரீதியாக மேலோட்டமாக ஏற்றுக் கொண்டாலும், உணர்ச்சித் தளத்தில் சராசரி ஆணாகவே இருக்கிறார்கள்.


பெண் என்பவள் வெறும் உடல் அல்ல என்பதைக் கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், சமூகத்தில் நிலவும் பண்பாடும், ஊடகங்களின் தாக்குதலும் பெண்களைப் பாலியல் நோக்கில் பார்ப்பதற்கு மட்டுமே அவர்களையும் பழக்கப் படுத்துகின்றன. எனவே, அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஆணாதிக்கம் துளிர் விட்ட வண்ணம் இருக்கிறது.

இதைக் களையெடுக்க வேண்டுமானால், அதற்குப் பெண்களின் உதவியும் தேவைப்படுகிறது. ஏராளமான பெண்கள் சமூக வாழ்க்கையில் ஈடுபடும்போதுதான், பாலினக் கவர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஆண்பெண் உறவு சாத்தியமாகிறது. பெண்கள் சமூக மாற்றத்துக்கான நடைமுறையில் ஈடுபடும்போதுதான், ஆணாதிக்கம் என்ற ஒன்றையே அவர்களால் அடையாளம் காண முடிகிறது. அதற்கெதிராகப் போராடவும் முடிகிறது.

அந்த வாய்ப்பை வழங்குவதற்கு பெண்கள் வேண்டும். அதுவும் சமூகப் போராட்ட நடைமுறைகளில் உற்சாகமாக ஈடுபடும் பெண் தோழர்கள், ஆயிரக்கணக்கில் வேண்டும். ஆண் மட்டுமல்ல பெண்ணும் தனது குடும்ப வாழ்க்கைக்கு வெளியே சமூக நலனுக்காகப் போராடும் போது மட்டுமே, ஆணாதிக்கத்தின் சுவடுகளை உருத்தெரியாமல் அழிப்பதற்கான களம் உருவாகும். அப்போதுதான் ஆணாதிக்த்தையும், "நல்லெண்ணம் கொண்ட ஆணாதிக்கத்தையும்' கூட முறியடிக்க முடியும்.

நிலப்பிரபுத்துவ, சாதியக் கொடுங்கோன்மை புரியும் நிலப்பிரபுக்களையும், முதலாளித்துவச் சுரண்டல் செய்யும் முதலாளிகளையும் இறுதியில் வீழ்த்துவதற்கு, அவர்களால் ஒடுக்கப்படும் மக்கள் விழிப்புணர்வு பெற்றுப் போராடினால்தான் முடியும். இந்த உண்மை ஆணாதிக்கத்துக்கும் பொருந்தும். அத்தகைய விழிப்புணர்வைப் பெறாதாவரை, பெண்களுக்கும் விடுதலை கிடைக்கப் போவதில்லை.

மாணவி சீமாவுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து, அவள் படிக்கும் கல்லூரியில் கூட எந்தப் போராட்டத்தையும் மாணவிகள் நடத்தவில்லை. ஏனென்றால், பாலியல் கொடுமைகளால் தினம் தினம் புழுங்கித் தவிக்கும் பெண்கள், சீமாவின் பிரச்சினையை அவளுடைய தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

இதனை உருவாக்கி உலவவிடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களை, மாபெரும் இயக்கமாகி எதிர்க்காத வரையில், தனிப்பட்ட பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகள் நிற்கப் போவதில்லை. ஆணாதிக்கத்தின் "அன்பு', பெண்களை அமிலமாகச் சுடுவதும் நிற்கப் போவதில்லை.

- இளநம்பி. புதிய கலாச்சார இதழிலிருந்து....

நன்றி : தமிழரங்கம்

2 comments:

ganesh said...

வணக்கம்,

தங்களின் இந்த பதிவு ஆணாதிக்கம் பேணும் (அ)சிங்கங்களுக்கு ஒரு சாட்டையடி....அமில விருந்து....

எனது அனுபவ பின்னூட்டம்: இதோ"

பொருளாதார ரீதியில் உண்மையான காதலை கசக்கி எ(றி)ரியும் சில பெண்களின் காதல் அவர்களை ஆசுவாசப்படுத்துகிறதா??/... இல்லவே இல்லை... அது காதலை மாசுப்படுத்துகிறது... நியாயமற்ற எதிர்பார்ப்புகளினால் காதலை கை கழுவும் பெண்களுக்கு எந்த எதிர்பார்ப்புகளும் மன நிறைவை தராது...

சில மாதங்களுக்கு முன் நான் விஜய் டிவியின் நீயா நானாவில் கலந்து கொண்டேன்....அங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா?....ஒருவரின் காதலன் (அ) காதலி எப்படி யிருக்க வேண்டும்...ஆனால் நிகழ்ச்சி ஆரம்பவித்ததுடன் பேசப்பட்ட முக்கிய விஷயம்?.... பெண்கள் தன் காதலன்(வருங்கால துணை) என்னென்ன வைத்திருக்க வேண்டும்.. ஒரு பெண் எழுந்து கேட்டார்..அவை கீழே..
1.சொந்த வீடு(இரண்டு படுக்கையறை)
2.குளு குளு வசதி
3.சொந்தமாக இரு மற்றும் 4 சக்கர வாகனம்
4.மாதம் 50,000 சம்பளம்(குறைந்த பட்சம்)
இவர் சொன்னதுமே அனைத்து பெண்களும் இத்துடன் சில சேர்த்து சொன்னார்கள்"'.
மேற்கண்டவை நல்ல இல்லறம் நடத்த தேவையான பட்டியல்....இந்த பட்டியல் மன நிறைவை தருமா?..
*அதில் தனது காதலன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு அனைத்து நாயகிகளின் பதில் இதோ...(அன்புசெல்வன் IPS)காக்க காக்க சூர்யா மாதிரியாம்...(ஆனா யாருமே சத்தியமா அதுல (மாயா) ஜோதிகா மாதிரி இல்ல..

ஒரு ஆண் என்ற உணர்வுடன் இப்பெண்களின் பிற்போக்குகளினால் தள்ளப்பட்டவன் நான்... இதுதான் இன்றய நம் சமுதாய பெண்களின் முற்போக்கு சிந்தனைகளா?... இல்லை பொய்யான உணர்விற்கான உண்மை முகமூடி.... இம்முகமூடியை சுய பொருளாதாரத்துடன் ,சுதந்திரமாக வாழ அணிகிறார்கள்...ஆனால் எதிர் காலத்தில் அது ??????.....

ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் இறுதி கடன் வரை ஒரு ஆண்தான் துணை...அதை மறந்து ஆணாதிக்கம் பேசும் பெண்களின் பெண்ணாதிக்கம் எங்ஙனம் சபையேறும்?...

***ஒரு பெண்ணுக்கு தனது துணையைத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருக்கிறதா? குறைந்த பட்சம் காதலைத் தெரிவிக்கும் ஒரு ஆணிடம், அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் உரிமையாவது உள்ளதா?***

ஒரு ஆணை பிடித்திருக்கிறது என்று சொல்ல பல வருடங்கள் கூட பெண்களுக்கு தேவைபடுகிறது,ஆனால் ஒரு வினாடியில் தனது முற்போக்கு அறிக்கையை வெளியிட்டுவிடுகிறார்கள்...(பிடித்தவனையே பிடிக்கவில்லை என்று).
சீமா என்ற சகோதரிக்கு ஒரு மனித மிருகம் இழைத்த கொடுமை அவன் உயிர் வாழ தகுதியற்றவன்.. ஆனால்
இதுவும் உன்மை..
* ஒவ்வொரு ஆணுக்குள்ளும் தாய்மை உணர்வு உண்டு..

* ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின் ஒரு ஆண் நிச்சயமுண்டு...
* இதை மறுக்கும் பெண்கள் ஆண்கள் இல்லாத சமூகத்தில் வசிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்..

{இது ஒரு அமில காதலனின் திரு முகம்}

vignathkumar said...

tamil feminest should first be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality.on other side of tamil medias non tamil womens{telungu,hindi,malayalam,kanadam,etc} are grandly invited by tamilmedia pepoles. they occupy tamil medias they earn money,enjoy ,dance, and get good fame. for tamil women nothing.
feminest should be awern of male domination psychartists in tamil magazens .their opnions are written in tamil magazeens they are oppose to women democrasy,equality, and self confidence also.
when male uses his body and mind in cinema ,modeling,dancing, acting ,wears a convinent dress no question is put.said as art.but puting questions on women against these things is oppose to male domination.
but i agree some of ur views