பத்தாண்டுகளுக்கு முன்பு
சூரியனுக்கு முந்தி
நாலு முப்பதுக்கே
சுறுசுறுப்பாய் எழும்.
தீப்பொறிகள் தெறிக்க
நெருப்பில் கருவிகள் செய்யும்
பூமாரியின் குடும்பம்.
கழணி தண்ணி
வீடு வீடாய் சேகரித்து
புண்ணாக்கு கரைத்து
அம்பாரமாய் வைக்கோல் கொணர்ந்து
கறவை மாடுகளோடு வாழும்
பால்வாடை கமழும்
பல குடும்பங்கள்.
சாணி சேகரித்து
வட்ட வட்டமாய் - அழகாய்
எரு தட்டி பிணம் எரிக்க
சுடுகாட்டுக்கு விற்கும்
பாலா குடும்பம்.
அம்பது பைசாவிற்கு
ஆவி பறக்க இட்லி விற்கும்
பார்வதியம்மாள்.
திறந்தவெளி தொழிற்சாலை
எங்கள் தெரு.
ஒரு காம்பவுண்டிற்குள் பத்து வீடுகள்.
கொழம்பிலிருந்து சீம்பால் வரை
பரிமாறி கொள்ளப்படும்.
பூட்டுக்களைப் பார்த்ததில்லை
வீட்டின் கதவுகள்.
களவு எப்பொழுதும் போனதில்லை.
உழைப்பில் ஈடுபடுகிற அழகான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள் வர தயங்கும்
'அசுத்தமான' தெரு.
இப்பொழுது
சோம்பலாய் ஏழு மணிக்கு எழுகிறது.
எழுந்ததும் நிறுத்திய வண்டி நிற்கிறதா
சரிபார்க்கிறார்கள்.
காம்பவுண்டு வீடுகளை
கந்து வட்டி குடும்பங்கள் கையகப்படுத்தி
மாடி வீடுகளாய் மாறிப்போனது.
ஆளுயர கேட் முன்நிற்கிறது.
தாண்டினால் நாய் இரைகிறது.
அழைப்பு மணி அழுத்தினால்
திருடனா?
சரி பார்த்தபின்பு
கதவு திறக்கப்படுகிறது.
தீப்பொறிகள் பறப்பதில்லை.
மாடுகள் வழிமறிப்பதில்லை.
எரு நினைவில் மட்டும் நிற்கிறது.
ஆவி பறக்கும் இட்லி இல்லை.
செம்மண் சாலை போய்
தார் சாலையாகிப் போனது.
பூமாரி, பாலா - என
எல்லா குடும்பங்களும்
சிதறடிக்கப்பட்டுவிட்டன.
ஒப்புக்குக்கூட புன்னகைக்க மறுக்கிறார்கள்
புதிய மனிதர்கள்.
உழைக்க மறுக்கும் அவலமான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள்
வர விரும்பும்
'அழகான தெரு'.
தெருவில் நுழையும்பொழுதெல்லாம்
எண்ணம் எழுகிறது.
'சுத்தமான தெரு'வுக்கு பதிலாக
'அசுத்தமான தெரு'வாகவே இருந்திருக்கலாம்.
பின்குறிப்பு - நகரத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்தேன். எங்கள் வீடு என சொல்வதனால்
எங்கள் தெருதான் எங்கள் வீடாய் இருந்தது
9 comments:
பெயர்: அசுரன்
பெயர் காரணம்: சில ஆயிரம் வருட பொருளாதார, கலாச்சார அடக்குமுறைக்கெதிரான
அடையாளமாக எனது எழுத்துக்களை முன்னிறுத்தி இன்று அந்த அடக்குமூறையும்,
அதற்கெதிரான யுத்தமும் தீர்மானகரமான ஒரு நிலையை நோக்கி சென்று
கொண்டிருப்பதை பிறருக்கு குறிப்பால் உணர்த்தும் பெயராக இந்த அசுரன்.
பார்ப்ப்னியத்தின் பரம்பரை எதிர் என்ற அடையாளத்துக்காகவும்.
வயது: சுமார் ஒரு 27 இருக்கும்.
கல்வி: Under Graduation (Marxian Phiolospophy), Diplomo (Marxian
Economy), Post Graduation (Marxian Socio Economy) தற்போது படித்துக்
கொண்டிருக்கிறேன்.
பணி: அரசியல் விழிப்புணர்வுக்காக, மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு
அவற்றை இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகிறேன்.
தமிழ்மணத்தை தாண்டி திண்ணையில் இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளும்,
கீற்றுவில் ஒரு சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். இது தவிர சில
குழுமங்களில் எழுதி வருகிறேன். இணையத்தில் எழுத தூண்டுகோலாக இருந்தது
இங்கு பிற்போக்கு சக்திகள் கேள்வி கேட்க ஆளின்றி பொய்களையும்,
புரட்டுகளையும் பரப்பி வந்ததும், உலகமய பொருளாதாரத்தில் வளப்பமுறும்
நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பகுதி, தமது சம்பளத்திற்க்கு மதிப்பை
கொடுக்கும் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து
கிஞ்சித்தும் கவலையின்றி சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கி
இருப்பதுமே ஆகும். இந்த இரண்டையும் எதிர்த்தே இங்கு எனது எழுத்து
ஆரம்பித்தது. இந்த நோக்கத்தை கடந்து எழுதும் தேவை இன்று வரை
ஏற்ப்படவில்லை. அதற்கான தகுதியும் எனக்கு இன்னும் கிட்டவில்லை.
கம்யுனிச குடும்ப பின்னணியில் பிறந்தாலும் கூட எனது கல்லூரி இறுதி ஆண்டு
வரை என்னை கம்யுனிஸ்டு என்று பிறர் சொல்வதை மறுத்தே வந்துள்ளேன். ஏனேனில்
எனக்கு அப்பொழுது கம்யுனிசம் தெரியாது. தெரிந்து கொள்ளும் விருப்பமும்
இருந்திருக்கவில்லை அந்த காலத்தில். பிறகு, வெகு சன ஊடகங்களில் உண்மைக்கு
மாறாக, யாதார்த்ததில் நான் பார்க்கும், அனுப்விக்கும் ஒரு உலகத்திற்க்கு
மாறாக பொய்யான சித்திரத்தையே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தும் முரன்பாடு
எனக்குள் ஒரு தேடலுக்கான வித்தை ஊன்றியது. மக்களை, அவர்களீன் வாழ்க்கையை
யார் பேசுகிறார்கள் என்ற கேள்வியும், அப்படி பேசாமலேயே அந்த மக்களை
ஊடகங்கள் சுரண்டுவது குறித்த கோபமும் இந்த தேடலின் விதைகளாக இருந்தன.
அந்த தேடல் மக்கள் பிரச்சனைகளையும் ஊடகங்களின் மக்கள் விரோத தன்மையையும்
புரிந்து கொளவதில் வந்து நின்றது. இந்த நேரத்தில்தான் கம்யுனிசம்
அறிமுகமானது. கம்யுனிசத்தை கற்றுக் கொள்வதற்கு மனரீதியாக தயாரான
நேரத்தில் கம்யுனிசம் அறிமுகமானது நல்ல விசயம்தான்.
இங்கு எழுதும் பிறரைப் போல எனக்கு இலக்கியத்திலோ அல்லது இலக்கணத்திலோ
அதிக அறிமுகம் கிடையாது. எனது வாசிப்பை எனது கேள்விகளே தீர்மானிக்கின்றன.
எனது கேள்விகள் நடைமுறைப் பிரச்சனைக்கு பதில் தேடுவதாக இருப்பதால்
அதற்க்கு தோதானவற்றையே வாசிக்கிறேன். வரலாறூ, பொருளாதாரம், அரசியல்,
தத்துவம் இவைதான் நான் அதிகம் வாசித்தவை. கலை இலக்கிய வாசிப்பனுபவம் கூட
இந்த தேவைக்கு உட்பட்டவைதான். ரசனைக்காக என்று வாசிக்க தோன்றவில்லை.
தமிழ்மண அனுபவம் எனக்கு நல்ல விசயங்களை கற்றுக் கொடுத்த அனுபவமாக மனதில்
நிற்கிறது. எனது நிலைப்பாடுகளின் மீது வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகள்
புதிய விசயங்களை கற்றுக் கொள்ள உதவின. ஆயினும், தமிழ் மண செயல்பாடுகள்
என்னிடம் ஏற்படுத்திய நெகடிவ் விளைவுகளையும் நான் குறீபிட்டே தீர
வேண்டும்.
சுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும்
ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது.
இவற்றினால் நானும் பாதிக்கப்பட்டேன். மீண்டு வந்தேன். எனது இந்த கெட்ட
அனுபவங்களை இங்கு குறிப்பிடுவதன் மூலம் சக வலைப்பதிவர்கள் இந்த
பிரச்சனைகள் குறித்த எச்சரிக்கையுடன் செயல்பட ஏதுவாகும் என்றூ
நம்புகிறேன். குறிப்பாக சமீபகாலத்தில் கம்யுனிசம் குறித்தும், முற்போக்கு
அரசியல் குறித்தும் எழுத வந்துள்ள பல இளம் வலையுலக தோழர்கள் இந்த
பண்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ப்தே இங்கு
வெளிப்படையாக இவற்றை அறிவிப்பதின் நோக்கம்.
வாழ்த்துக்கள்,
அசுரன்
comrade pls link to -
kedayam.blogspot
poar-parai.blogspot
vanajaraj.blogspot
poarmurasu.
தோழர்,
நல்ல படிமங்களோடு எழுதப்பட்டிருக்கும் கவிதை, இதயத்தில் புதைந்திருக்கும் கடந்து கால நினைவுகளுக்குள் அழைத்துச்செல்கிறது., பாராட்டுக்கள்..உங்களுடைய ஆர்.எஸ்.எஸ் பற்றிய கவிதையினை பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன் ஆனாலும் உங்கள் வலைதளத்தை இன்றுதான் பார்க்கிறேன். தங்களை இந்த வலைதள வட்டாரத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்..
தோழமையுடன்
ஸ்டாலின்
அசுரன்,ஸ்டாலின் - இருவருக்கும் என் அன்பான நன்றி. இருவரும் வலையில் எனக்கு முன்னோடிகள். மிக ஆரோக்கியமான முறையில் நன்றாக செயல்படுகிறீர்கள். வாழ்த்துக்கள். பிற்போக்கு சக்திகளை முறியக்கும் உங்களோடு துணையாக நானும் நிற்கிறேன்.
கவிதை அருமையாக உள்ளது...வாழ்க்கையின் பிரதிபலிப்பு
நல்ல கவிதை. பல உணர்வுகளை உண்டாக்குகிறது. அவற்றை உற்று நுன்னோக்கி சொல்ல சோம்பேறித்தனம்.
நீங்கள்தான் எழுதுகிறீர்களா? மிக நன்றாக எழுதுகிறீர்கள்.
கவிதை புத்தகங்கள் எதுவும் போட்டிருக்கிறீர்களா?
அசுரன்
//நல்ல கவிதை. பல உணர்வுகளை உண்டாக்குகிறது. அவற்றை உற்று நுன்னோக்கி சொல்ல சோம்பேறித்தனம்.//
வாழ்த்துக்களுக்கு நன்றி அசுரன். அல்பவாதிகளை எழுத்தில் பிரித்தெடுக்கிற உங்களுக்கா சோம்பேறித்தனம்?
//நீங்கள்தான் எழுதுகிறீர்களா?//
மண்டபத்தில் யாராவது எழுதி தருகிறீர்களா? எனக் கேட்டு விட்டீர்களே!
//கவிதை புத்தகங்கள் எதுவும் போட்டிருக்கிறீர்களா?//
நான் எழுதியது சொற்பம் தான்.
கருத்திற்கு நன்றி தேவ்.
//கொழம்பிலிருந்து சீம்பால் வரை
பரிமாறி கொள்ளப்படும்.//
இந்த பழக்கமே இப்போதெல்லாம் வழக்கொழிந்து போய் விட்டது. சில வருடங்களுக்கு முன்பாவது பண்டிகைகளின் போது பலகாரங்கள் மட்டுமேனும் பரிமாறிக்கொள்வது என்று ஒரு வழக்கம் இருந்தது. இப்போதோ சிறப்பு பட்டிமன்றங்களும், உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக திரையிடப்படும் பாடாவதி படங்களும் அந்த பழக்கத்தையும் அற்றுப்போக செய்தாயிற்று. ஒவ்வொரு வீட்டு சுவரும் ஒரு பெரிய அகழியாய் மாறி வெகு காலமாயிற்று மகா.
//'சுத்தமான தெரு'வுக்கு பதிலாக
'அசுத்தமான தெரு'வாகவே இருந்திருக்கலாம்//
பெருமூச்சு ஒன்று விடுவதை தவிர்த்து வேறொன்றும் செய்ய முடிவதில்லை நம்மால்.
//ஒவ்வொரு வீட்டு சுவரும் ஒரு பெரிய அகழியாய் மாறி வெகு காலமாயிற்று மகா. //
Yes. It happened nowadays.
Thanks Lakshmi.
Post a Comment