Apr 4, 2007

குழந்தைகள் - கவிதை


மகிழ்ச்சியெனில்
மத்தாப்பாய் சிரிக்கிற
துன்பமெனில்
அடைமழையாய்
கொட்டித்தீர்க்கிற
மழலை மனசு வேண்டும்.

அம்மாவின் அதட்டல்களை மீறி
புழுதிப் பறக்க
தெருவில் விளையாடி
தூக்கம் வெறுக்கிற
பிள்ளையின் சுறுசுறுப்பு வேண்டும்.

கோபமெனில் - உடனே
சண்டை பிடிக்கிற
மறுநிமிடம் மறந்து கூடுகிற
பிள்ளையின் மறதி வேண்டும்.

புதிய பொருளெனில்
விழிகள் விரிய
வியந்து பார்க்கும்
குடைந்து குடைந்து
ஆயிரம் கேள்விகள் கேட்கும்
பிள்ளையின் ஞானம் வேண்டும்.

இறந்த கால நினைவுகளில்
எதிர்கால திட்டங்களில்
நிகழ்காலத்தை தொலைக்காத
பிள்ளையின் வாழ்வு வேண்டும்.

குழந்தைகளை நேசிக்காத
சமூகம்
தற்கொலையின் விளிம்பில்.

குழந்தைகளிடமிருந்து - முதலில்
கற்றுக்கொள்வோம்.
சாதி, மதம்,
சடங்கு குப்பைகளை - பிறகு
கற்றுக்கொடுப்போம்.

- சாக்ரடீஸ்

4 comments:

லக்ஷ்மி said...
This comment has been removed by the author.
லக்ஷ்மி said...

குழந்தையா மாறிடணும்ங்கற ஏக்கம் வராத மனிதனே கிடையாது. ஆனால் அந்த வயசுலயும் அந்த நேரத்துக்கு தகுந்தாற்போல கோபதாபங்கள், ஏக்கம், பொறாமை, புறம் சொல்லல் இன்னபிற எல்லா சில்லறைத்தனங்களும் இருக்கும்தான். ஆனால் அவற்றின் பாதிப்பு பெரிதில்லையாதலால் தெரிவதில்லை. எனவே இது இக்கரைக்கு அக்கரை பச்சைன்ற மாதிரியான் விஷயம்னுதான் தோணுது.

லக்ஷ்மி said...

உங்களை அழகு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். முடிந்த போது எழுதவும்.

அசுரன் said...

எங்கோ ஒரிடத்தில் படித்தேன். கம்யுனிஸ்டுகளாகவும், புரட்சிக்காரர்களாகவும் சமூக அவலங்களை தட்டிக் கேட்ட மனிதர்கள் பலருக்கும் கள்ளம் கபடமற்ற குழந்தை பிராயத்தின் மீதான காதலே முக்கிய உந்துததலாக இருந்ததாக.

எனக்கும் கூட இது குறித்தான கேள்விகள் ப்ல வருடங்கள் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஏன் பெரியவர்கள் குழந்தைகள் போல இருப்பதில்லை என்று.

குழந்தை பிரயாத்துக்கான ஏக்கம் இன்றும் என்னுள் உள்ளது. சாலைகளில், பூங்காக்களில் விளையாடும் குழந்தைகளையும், பெண்களையும் உற்று நோக்கும் போது மனதின் இன்னொரு பகுதி என்னை எச்சரிக்கிறது, சுற்றியுள்ள சமூகம் உனது பார்வைகளை வேறு மாதிரி புரிந்து கொள்ளும் என்று.....

ஆயினும், ஒவ்வொரு முறை தூங்கியெழுந்து படுக்கையின் அருகில் நண்பரை சந்திக்கும் போதும், ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புகளற்ற சக மனிதரைப் சந்திக்கும் போதும் என்னுள் இருக்கும் குழந்தை புன்னகையாய் வெளிப்படுகிறது.

அசுரன்