Feb 10, 2016

எஸ்.வி.எஸ். கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்குவாரி!

எஸ்.வி.எஸ். கல்லூரி மூன்று மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், மாணவிகளின் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்படவில்லை என்றும், நுரையீரலில் தண்ணீர் தேங்காததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்ததற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அரசு கல்லூரியில் சேர, எஸ்.வி.எஸ். கல்லூரி சித்தா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு சென்னை அரும்பாக்கத்தில் கலந்தாய்வு நடந்துள்ளது. அந்த கல்லூரியில் 2008 முதல் 2016 வரை படித்து வரும் மாணவர்கள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. 136 மாணவ–மாணவிகள் அரசு கல்லூரியில் சேர தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் தங்களுடயை கல்லூரி காலத்தில் அநியாய கல்வி கட்டணத்தையும் செலுத்திவிட்டு படிப்பை முடிக்க முடியாமல் சித்தரவதை, மனஉளைச்சல் உள்ளாகி, மற்றும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விதத்தை மீண்டும் விளக்குகிறது இக்கட்டுரை.
*******

எஸ்.வி.எஸ். கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்குவாரி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ’பங்கரம்’ எனும் கிராமத்தில் அமைந்துள்ள SVS இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற பெயரில் ’வாசுகி’ என்பவரால் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கழிவறை வசதிகள், சுகதாரம், மின்விசிறி, மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கூட சரிவர செய்யப்படாமல் இயங்கிவந்த இக்கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் நிலை நிலப்பண்ணையாளர்கள் காலத்திலும் நடந்திராத பெருங்கொடுமை என விவரிக்கிறார்கள் அங்கு படித்த மாணவர்கள்.

’வசூல்ராஜா MBBS' தாளாளர்:

எஸ்.வி.எஸ். கல்லூரியில் படிக்கும் கண்ணதாசன், அய்யப்பனும் மாணவர்கள் கல்லூரிப் பற்றி சொல்லும் பொழுது “எஸ்.வி.எஸ். கல்லூரி சிறந்தக் கல்லூரி. எந்தவிதப் பிரச்சனைகளும் இருக்காது. விடுதி வசதி, உணவு என அடிப்படை வசதிகள் எல்லாமும் சிறப்பாக இருக்கும். நல்ல தரமான மருத்துவக் கல்வி உங்களுக்கும் கிடைக்கும் என்று அரசாங்கம் தான் இனிக்க இனிக்க தேன் தடவி பேசி, எங்களை இக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இங்கு வந்து பார்த்த போதுதான் கல்லூரியில் வெறும் பெயர்ப்பலகை மட்டும்தான் இருந்தது. மேலும் அப்போதுதான் தளம் போட்டுக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான கல்லூரிக்கு கவுன்சிலிங் மூலம் எங்களை அனுப்பி வைத்து ஏமாற்றி விட்டார்கள்” என கதறுகிறார்கள் அம்மாணவர்கள்.
ஒவ்வொரு மாணவரிடமும் ஐந்தாறு இலட்சம் வரை வசூல் செய்த கல்லூரி நிர்வாகம் 7 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும்தான் ரசீது தருகிறார்கள். இது குறித்து கேட்ட பொழுது, ‘ரசீது வேண்டுமா? நீ படிப்பை முழுவதுமாக முடித்துவிட்டுப் போகமாட்டாய் உன் மார்க்கில் கை வைத்துவிடுவோம்’ என பச்சையாக மிரட்டுகிறார்கள் என்கிறார் இரண்டாமாண்டு படிக்கும் அருள்முருகன்.

”ஆய்வு மேற்கொள்ள வரும் அதிகாரிகளுக்கு முன்னால் என்னை டாக்டராக நடிக்கவைத்தார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் அதே கதிதான். மாணவிகளாகிய நாங்கள் தான் சமையல் வேலை செய்தோம், துணிதுவைப்பது, பாத்திரங்கள் கழுவது போன்ற வேலைகள் செய்வோம். இதைவிட கொடுமை மேடம் வாசுகிக்கு கடலைமாவு அரைத்து உடல் முழுவதும் பூசவேண்டும். மாணவர்கள் கட்டம் கட்டும் வேலைகளையும், அவுஸ்கீப்பிங் போன்ற எல்லா வேலைகளையும் செய்வார்கள். இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எங்கள் மேடத்தின்(வாசுகி) கை, கால்களைப் பிடித்துவிடாத மாணவிகளே இல்லை. அதே போல் வாசுகியின் கணவர் சுப்பிரமணியனின் கை, கால்களையும் பிடித்துவிடாமல் எந்த ஒரு மானவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என கூறுகிறார் இறுதியாண்டு மாணவி வாணிஸ்ரீ.

மேலும் அவர் கூறும் பொழுது, “ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும் போது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுப்ரமணியன்(வாசுகியின் கணவர்) தான் ஏ.டி.எம் கார்டை மறந்து கல்லூரியிலேயே வந்துவைத்துவிட்டதாகவும் தற்போது சென்னை பல்லாவரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறேன் அங்கு வந்து ஏ.டி.எம் கார்டைத் தந்துவிட்டுப் போ!” என்னிடம் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதுவரை எந்த இடத்திற்கும் தனியாகப் போனதேயில்லை. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு நடுராத்திரியில் 3 பேருந்துகள் மாறி, மாறிப்போய் ஏடிஎம் கார்டை போய்கொடுத்துவந்தேன். ”கல்லூரியின் தரம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு ”அனைத்தும்” சரியாக உள்ளது என அறிக்கைத் தர (லஞ்சம்) பணம் கொடுக்க வேண்டியிருந்தனால் தான் ஏ.டி.எம் கார்டை அவசரமாக எடுத்து வரச்சொன்னேன்” என்றார் மாணவி வாணிஸ்ரீ.

மருத்துவ வகுப்புகள் நடக்கவே நடக்காது, ஆசிரியர்கள் கிடையாது இப்படிப்பட்ட அவலங்களை மாணவர்கள் எத்தனை நாள்தான் பொறுத்துக் கொண்டு போக முடியும் இந்தக் கல்லூரியின் அக்கிரமங்களைப் பட்டியலிட்டு தொடர்புடைய துறைகளுக்கு புகார்களாக அனுப்பி வைத்தார்கள் மாணவர்கள். சென்னை MGR பல்கலைக்கழக துணைவேந்தர், மருத்துவக் கவுன்சில், மாவட்ட ஆட்சியர், தேசிய மனித உரிமை ஆணையம் உட்பட பதினான்கு அதிகார மையங்களுக்கு புகார்களை அனுப்பிய மாணவர்களுக்கு எந்தத்துறைகளிலிருந்தும் நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றத்தையும் அரசின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியது.

ஆயிரம்நாள் அடிமையாக வாழ்வதைவிட வீரனாக போராடலாம் என்று முடிவெடுத்த மாணவர்கள் கடந்த 24.08.2015 அன்று தங்களது முதல் கட்டப் போராட்டத்தை துவங்கினார்கள். இரண்டாவதாக 07.08.2015 அன்றும் போராட்டம் நடத்தினார்கள். எவரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு தீக்குளிப்பு போராட்டம் என்று அறிவித்து கடந்த ஆண்டு செப் 15 ஆம் நாள் நடத்தியதில் போலீசார் வந்து அவர்களை கலைத்து அப்புறப்படுத்தினர். மாணவர்கள் தங்கள் நியாயங்களை யாரிடம் சொல்லித் தீர்த்துக் கொள்வது என்று தெரியாத கையறு நிலைக்குத்தள்ளப்பட்டனர்.

வேதனையின் வலியின் உச்சத்தில் நின்று கொண்டிருந்த அவர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 21.09.2015 அன்று விஷம் அருந்தித் தற்கொலை செதுகொள்ளும் போராட்டத்தை அறிவித்து செயல்படுத்த முனைந்த போது போலீசார் அவர்களைப் பிடித்து கலக்டர் முன் நிறுத்தினர். கடுந்தவத்தை மெச்சிய சாமி வருவது போல் கலக்டர் வந்தார். கலெக்டர் லட்சுமி நமது கோரிக்கையை ஏற்பார் என்று நினைத்த மாணவர்களை நோக்கிய அவர், ‘என்ன சீரியல் பாத்துட்டு நடீக்கிறீங்களா? சாக வேண்டியதுன்னா உங்க வீட்டுக்குப்போய் தற்கொலை பன்ணிக்கீங்க ஏன் கலெக்டர் ஆபீஸ் முன்னால அதச் செய்றீங்க?’ என்று தான் ஒரு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர் என்ற சிந்தனையை முழுவதுமாக மறந்துவிட்டு அதிகார வெறியில் நடந்துகொண்டார்.

இது இப்படிப் போய்க்கொண்டிருக்க இதை இப்படியேவிட்டால் நமக்கு ஆபத்து என்று நினைத்த கல்லூரி நிர்வாகிகள் தங்கள் பங்குக்கு ரவுடிக் கும்பல்களை இறக்கிவிட்டு போராடும் மாணவர்களை மிரட்டி இருக்கிறார்கள். ஒரு மார்வாடி எப்படி நமது ஊரில் உள்ள பேட்டை வஸ்தாதுகளைப் பயன்படுத்தி கந்துவட்டி கலக்சன், டூ வீலர் சீஸிங் போன்றவற்றை நமது மக்களுக்கு எதிராக செய்ய வைக்கிறானோ அதே போல் அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும்(90 சதவிதத்திற்கும் மேல்) தலித் மாணவர்கள். அவர்களை ‘ரகு’ என்ற அதே வகுப்பைச் சேர்ந்த மாணவனை கைகூலியாக்கி மிரட்டி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் இவற்றையெல்லாம் தொடர்ந்து தட்டிக்கேட்ட மாணவிகளில் மூவரான பிரியங்கா, சரன்யா, மோனிஷா ஆகியோர் கல்லூரி வளாகத்தில் இருந்து கிணற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டு அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அவர்களின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அது கொலையா, தற்கொலையா என்பது மருத்துவப் பிரேத பரிசோதனையின் முடிவுக்குப் பின்னர் தான் தெரியவரும். அதை தொடர்ந்துதான் ஊடகங்கள் தமது பார்வையை SVS இயற்கை மருத்துவக்கல்லூரியின் மேல் திருப்பின. குறிப்பாக பாலிமர் தொலைக்காட்சி ‘அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் படித்து ஏமாந்தவர்களா நீங்கள் ‘என்ற இயக்கம் எடுத்து இச்செய்தியை கூர்ந்து ஆய்ந்து வெளியிட்டது. தற்போது நடவடிக்கை என்ற பெயரில் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 மூன்று பேர் இறந்து போனாதால்தான் இக்கல்லூரியின் கோரக்காட்சி உலகுக்குத் தெரிந்து இருக்கிறது என்றால் இன்னும் எத்தனை கல்லூரிகள் இந்த நாட்டில் இது போல் செயல்பட்டு வருகின்றன. அக்கல்லூரியிலும் இதுபோல் சாவு விழுந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் அதுவரை எதுவும் செய்யமாட்டோம் என்பதுதான் மக்கள் மீதான் அரசின் ‘அக்கறை’யாக உள்ளது. ’பாலிமர்’ செய்தியாளர்கள் மாணவிகளின் இறப்பு பற்றி பேசுவதற்காக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் லட்சுமியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் மீட்டிங்கில் இருக்கிறார் என்ற ஒரு ஒற்றை பதிலுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தொடர்புகொண்டு பேச முயன்றபோது கலெக்டர் போன் ரீச் ஆகவில்லை. இதனை அத்தொலைக்காட்சி கடந்த 27.01.2016 அன்று ஒளிப்பரப்பியது மக்களிடையே அரசின் பாராமுகத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது.

மூன்று மாணவிகளின் மர்ம மரணத்திற்கு கல்லூரி தாளாளர், முதல்வர், வாசுகியின் மகன் போன்ற SVS கல்லூரியின் ரவுடிகள் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கலாம். ஆனால் கல்லூரியை முறையாக ஆய்வு செய்யாமல் போன அதிகாரிகள், MGR பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மயில்வாகணம், நடராஜன் இந்நாள் துணைவேந்தர் கீதாலட்சுமி, பல்கலைக்கழக பதிவாளர், மாவட்ட ஆச்சித்தலைவர் லட்சுமி போன்றவர்கள் அவரவர் தரப்புக்கு அறிக்கை விட்டுக் கொண்டு சகஜமாக உலா வருகிறார்கள். தாம் புகார் அனுப்பிய 14 அதிகாரமையங்கள் நினைத்திருந்தால் இந்த மூன்று மாணவிகளை இழந்திருக்கமாட்டோம். அவர்கள் மருத்துவர்களாகி இருப்பார்கள் என்ற சிந்தனை போராடும் அந்த மாணவர்கள் எந்த நாளும் அழியப்போவதில்லை; அரசு அதற்கு பதில் சொல்லும் நாளும் தூரத்திலில்லை.
தனியார்மய கல்வியை ஒழிக்கவேண்டும்!

அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்களை கொத்தடிமைகளை போல நடத்துவது, கேள்விக்கேட்கும் மாணவர்களை, பெற்றோர்களை ரவுடிகள் வைத்து மிரட்டுவது, மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பிடுங்கி, கல்லாகட்டுவதிலேயே குறியாகவும், இதற்கு பல்கலை கழகம், கல்வித்துறை, போலீசு, நீதித்துறை என அரசின் சகலதுறைகளும் எஸ்.வி.எஸ். கல்லூரியிடம் காசு வாங்கிக்கொண்டோ அல்லது வேறு வகையிலோ பாதுகாப்பு தூண்களாய் பாதுகாத்து நின்றிருக்கின்றன. எல்லா பக்கமும் முட்டிமோதி தோற்று துவன்று நின்ற பொழுது தான் மூன்று மாணவிகளின் படுகொலைகள் நடைபெற்றிருக்கிறன்றன. எஸ்.வி.எஸ். கல்லூரி ஒரு சாம்பிள். இப்படிப்பட்ட கல்லூரிகள் தான் நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. நமது மாணவ, மாணவியர்கள் வெளியே சொல்லமுடியாமல் புழுங்கி சாகிறார்கள். ஒருசமயத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதை தடுக்கவேண்டுமென்றால், இந்த அரசிடம் கெஞ்சியோ, மனுபோட்டோ ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதும் தொடர்நிகழ்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதை நிரந்தரமாக தடுக்கவேண்டுமென்றால், கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்பது தான் ஒரே தீர்வு. அதற்கு வேறு ஏதுவும் குறுக்குவழியில்லை. நாம் ஓரணியில் திரண்டு போராட்டங்களை முன்னெடுப்பது தான் ஒரே வழி!

நூர்தீன்,
செயற்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

No comments: