Feb 1, 2016

புறக்கணிப்பு போராட்டம் நடத்தலாமா?

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 8

மக்களைப் பத்தி இவ்வளவு அக்கறையாகப் பேசுபவர்கள். புறக்கணிப்பு போராட்டம் நடத்தலாமா என்று கேட்கிறார்களே?

ஒரு விசயத்தைப்புரிந்து கொள்ள வேண்டும். நீதிபதி முதல் நீதிமன்ற ஊழியர் வரை அனைவருக்கும் மாதச் சம்பளம் உண்டு. ஆனா வக்கீல்களுக்கு கேஸ் கிடைத்து ஃபீஸ் வந்தால்தான் வருமானம்,’போராட்டம்’ என்றால் வருமான இழப்பு வக்கீலுக்குதான். புறக்கணிப்பு போராட்டம் நடந்ததுனா, வழக்காடியை கூப்பிட்டு அவருடைய வழக்கின் நிலைமையையும் போராட்டத்தின் நியாயத்தையும் விளக்கி அவரை ஏற்கச் செய்கிறார்கள். இது வழக்காடிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான விவகாரம்.
வழக்கு தேங்குவதை பற்றிக் கவலைப்படுபவர்கள் உண்மை நிலவரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அரசுக்கு எதிரான ஆகப் பெரும்பாலான வழக்குகளில் அரசு தரப்பு பதில் அளிப்பதே இல்லை. தொழிற்சங்க வழக்குகளில் கம்பெனி முதலாளிகள் தரப்பு வாய்தா வாங்கிக்கொண்டே இருக்கிறது. இவை ஒருபுறமிருக்க மிகச்சில நீதிபதிகள்தான் வழக்குகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று கடுமையாக வேலை செய்கிறார்கள். மற்றப்படி, வழக்குகள் தேங்கிக்கிடப்பது பற்றி நீதியரசர்கள் ஓய்வு பெற்றுப் போகும்போது உரையாற்றுவார்களே தவிர, பணியில் இருக்கும்போது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

மிக அதிகமாக விடுமுறை எடுத்துக் கொள்ளும் துறை நீதித்துறை, வாரத்துக்கு 5 நாள் வேலை, நீதிபதிகளைப் பொருத்தவரை அவர்கள் நாளொன்றுக்கு இத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இத்தனை வழக்குகளை முடிக்க வேண்டும் என்ற இலக்கும் கிடையாது, பேரன் பிறந்தநாள் விழா, பேத்தி நாட்டிய அரங்கேற்றம், இன்னும் ஆன்மீகம், இசை, இலக்கியம், சமூக சேவை என்ற பெயர்களில் காஸ்மோபாலிடன் கிளப் நண்பர்கள் அழைக்கும் விழாக்கள்....என்று எதாவது ஒரு காரணத்தைக் காட்டி, உரிய நேரத்துக்கு முன்பாகவே நீதிபதிகள் கிளம்புவாரகள். இதற்கு அவர்கள் யாரையும் கேட்கத் தேவையில்லை.

புறக்கணிப்பு போராட்டத்தினால் இழக்கப்பட்ட வேலைநாட்கள் எத்தனை, நீதிமன்றத்துக்கு மட்டுமேயான சிறப்பு விடுமுறை நாட்கள் எத்தனை? கோடை விடுமுறை 30 நாட்கள், கிறிஸ்துமஸ் விடுமுறை 10 நாட்கள் என்று ஆங்கிலேயன் அமல்படுத்திய விடுமுறைகளுடன் ஆயுதபூஜை விடுமுறை 10 நாட்கள், அப்புறம் தமிழ், தெலுங்கு ஆங்கில புத்தாண்டுகள் என்று அடுக்கடுக்காக விடுமுறைகள்! சிறப்பு விடுமுறைகள் எல்லாவற்றையும் ரத்து செய்யட்டும், ஒரு அரசு அலுவலகத்துக்கு என்ன விடுமுறை உண்டோ அவ்வளவுதான் என்று தீர்மானிக்கட்டும். நீதிபதிகள் வழக்கை முடிப்பதற்கான இலக்குகளைத் தீர்மானிக்கட்டும். அப்புறம் இவர்கள் புறக்கணிப்பு பற்றி கவலைப் படட்டும்.

 - ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

No comments: