May 9, 2007

நானும் நீயும் - கவிதை

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்.
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ.

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ.

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ.

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழ வைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

- செயபாசுகரன்

4 comments:

தென்றல் said...

ம்ம்ம்.. தெரிந்த உண்மைகள்.. தெரியாததுபோல் வாழ்கிறோம்..!

நன்றி, மகா!

சென்ஷி said...

ஆனந்த விகடனில் ஏற்கனவே படித்த கவிதைதான். இருப்பினும் மீண்டும் படிக்க சுவை கூடுகிறது..
நன்றி...

சென்ஷி

அமிர்தா said...

//ஆனந்த விகடனில் ஏற்கனவே படித்த கவிதைதான்.//

ஆ.வி. ஆயிரக்கண்க்கில் வந்த கவிதைகளில் 75 கவிதைகளை தேர்ந்தெடுத்து சிறு புத்தகமாக வெளியிட்டது.

அதில் பிடித்த கவிதையாக மனதில் தங்கியது இந்த கவிதை.

ஆர்வமாகி, ஜெயபாஸ்கரனின் கவிதைத் தொகுப்பு வாங்கி படித்ததில், அந்த தொகுப்பில், ஆகச் சிறந்த கவிதையாக இருந்ததும் இந்த கவிதை தான்.

நன்றி சென்ஷி.

அமிர்தா said...

//ம்ம்ம்.. தெரிந்த உண்மைகள்.. தெரியாததுபோல் வாழ்கிறோம்..!//

தெரியாதது போல் வாழ்வதில் பலருக்கு செளகரியங்கள் இருக்கின்றன.

உண்மை இது என உணர்ந்துவிட்டால், அதன்படி நேர்மையாக இருப்பது இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

அவர்களிடம் சேர்க்கத்தான் இத்தனை பிரயத்தனமும்.

நன்றி தென்றல்.