May 10, 2007

திருமணம் - சிறுகதை/கவிதை

திருமணம்

இளம் மாலைப்பொழுது
குழந்தைக்ளோடு குழந்தையாய் மாறி
விளையாடிக் கொண்டிருந்தாள்
அவள்.
நண்பன் அறிமுகப்படுத்தினான்.

மூன்று வருடங்களில்...
ஆரோக்கியமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கினோம்.
நிறையவற்றில் ஒன்றுபட்டோம்
கருத்து வேறுபாடுகள் எழுந்த பொழுது
களைந்து கொண்டோம்.

எனக்கு பெண்ணும்
அவளுக்கு மாப்பிள்ளையுமாய்
அவரவர் வீட்டில்
வலைவீசிக் கொண்டிருந்தார்கள்
இருவரில் யார் கேட்டிருந்தாலும்
மற்றவர் மறுத்திருக்க மாட்டோம்
ஆனால் மெளனம் காத்தோம்.

'இந்த பெண் எப்படி?'
அம்மாதான் ஆரம்பித்தாள்
படம் பார்க்காமலேயே...
'முகம், மனம்
அறியா பெண்ணுடன் எப்படியம்மா?' என்றேன்.
அதெல்லாம் சொல்லாதே! ஊர் வாழலை?
இந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம்.

அவளை அறிந்திருந்ததால்
'வேறு சாதிப்பெண்ணை
திருமணம் செய்யலாம் என
கனவில்கூட நினையாதே
சாதி சனம் எல்லாம் எச்சில் துப்பிவிடும்
என் உயிர் போய்விடும் - என்றாள்.
தொடர்ந்து புலம்பினாள்.

சுற்றம் மொத்தமாய்
என்மேல் விழுந்து
மூட்டை மூட்டையாய்
அறிவுரைகளை வைத்தார்கள்
மீண்டும் மெளனமானேன்
திருமணம் நடந்தேறியது.

முதல்நாள் இரவில்
இருவரும் அறிமுகமாகி
ஏதோ மனதில் நெருட
சுற்றிலும் இருள் படர்ந்தது.

வந்த நாட்களில்
அம்மாவின் பழமையும்
அவளின் நடைமுறையும்
கடுமையாய் மோதிக்கொள்ள
நடுவில் நான்.
நான்கே மாதங்களில்
தனிக்குடித்தனம்.

கனவுகளைத் தவிர்த்து
மண்ணில் அழுந்த நடப்பவன்
நான்
கனவுகளில் வாழ்ந்து
அபூர்வமாய்
தரைக்கு இறங்கி வருகிறவள்
அவள்.

ரசனை, நுகர்வு
அனைத்திலும்
எதிரும், புதிருமாய்.

இரண்டு மனதும்
இரண்டு உடலும்
இணைந்தால் தான்
'மழலை' என்றில்லையே!
பனிப்போர் தொடரும் வேளையில்
மண்ணில் வந்திருங்கினான்.

துடுப்பும், படகுமாய்
ஒரு திசை வழி செல்ல வேண்டியவர்கள்
வெவ்வேறு இலக்கு பயணப்படும்
இரூ படகுகளாய் நாங்கள்

சரியாய் இரண்டு வருடங்கள்
இருவரும் முடிவெடுத்தோம்
இனி இணைந்து வாழ்வது அபத்தம்
பிரிந்துவிடுவோம்.

உன் கனவுகளின் வாழ்க்கைக்கு
மழலை தடையாய் இருப்பான் - என்றேன்
சிறிது யோசித்து புன்னகையுடன்
வைத்துக்கொள் - என்றாள்

இடைக்காலங்களில்
'என் வாழ்க்கை
நோயின் தீவிரம்' இரண்டும்
அம்மாவின் உயிரை
சரிபாதியாய் எடுத்துக்கொண்டன.

இப்பொழுது அனாதையாய்
நானும், எனது மகனும்
ஒரு துருவத்தில்.
அவள் ஒரு துருவத்தில்
சுற்றம் அனைத்தும்
'ச்சூ! ச்சூ!' என
நாயை அழைத்தார்கள்

அவள்மீது எனக்கு துளியும்
வருத்தமில்லை
என் கோபம் அனைத்தும்
என் மெளனங்களின் மீதும்,
என் தாயின் சாதியப்பிடிப்பின் மீதும்.

இன்று
வாழ்க்கை மரத்தின்கீழ்
ஞானோதயம் பிறக்கிறது
அன்று
நல்ல மகனாய் இருந்திருப்பதைவிட
சுய சிந்தனை கொண்ட
நல்ல மனிதனாய் இருந்திருக்கலாம்

- சாக்ரடீஸ்

4 comments:

லக்ஷ்மி said...

காலச்சக்கரத்தில் பின்னோக்கி போகும் சக்தி கற்பனைகளில் மட்டுமே சாத்தியம் மகா. நானும் சில பல சமயங்களில் யோசிப்பதுண்டு, இப்படி செய்திருக்கலாம். அப்படி யோசித்திருக்கலாம் என்றெல்லாம். என்ன செய்வது? கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமென்பது போலத்தான் இதுவும். ஹ்ம்ம்....

அமிர்தா said...

இறந்தகாலத்திற்குள் யாரும் பயணிக்க முடியாது தான். நீங்கள் சொல்வது உண்மை தான். அந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும் அல்லவா!

5 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரே தவறை இன்றைக்கும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். படிப்பினையால், ஒப்பீட்டளவில் சதவீத அளவு குறைந்திருக்கிறது. அது ஒரு தொடர் போராட்டம் தான்.

ஆனால், இன்னும் சிலரை கவனிக்கிறேன். மீண்டும், மீண்டும் அதே தவறை செய்கிறார்கள் புத்துணர்ச்சியுடன்.

தங்கள் கருத்துக்கு நன்றி லட்சுமி.

அசுரன் said...

//அது ஒரு தொடர் போராட்டம் தான்.//


நல்ல கவிதை....

நிறைய பேருக்கு மனதில் நன்கு குத்தி கிழிக்கும் தன்மை கொண்டது. குறிப்பான சம்பவங்களின் ஒற்றுமையல்ல. பொதுவாகவே பிற்போக்கு பிடிப்புகளின் பாற்ப்பட்டு தமது சுயசிந்தனை தவிர்க்கும் அல்பவாதிகளின் மனதில் சுருக்கென்று தைய்க்கும் விதத்தில் உள்ளது.

http://blackboards.blogspot.com/2007/04/blog-post.html

http://blackboards.blogspot.com/2007/04/blog-post.html">"என்ன இருந்தாலும் தோழரே...... "

அசுரன்

அமிர்தா said...

வாழ்த்துகளுக்கு நன்றி அசுரன்.

சாக்ரடீஸ் கவிதைகளில் எனக்கு பிடித்த இரு அம்சங்கள் -

கருவாக பெரும்பாலும் கையாள்வது சாதாரண மனிதர்களின் மனப் போராட்டங்கள்.

எல்லொருக்கும் புரியும்படி எழுதுவது.