Sep 7, 2015

வாழ்வை நேசிப்பவர்கள் இந்த வானவில்லை வாசியுங்கள்!



தியாகம்...
தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் தகைமை..

தமது மண்ணுக்காக, மக்களுக்காக உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் வீரம்..

இலட்சியப் போராட்டத்தில் எதிர்ப்படும் இன்னல்களை துணிவுடன் எதிர்கொண்டு, துன்ப, துயரங்களால் வாடிவிடாத மனப்பாங்கு..

வார்த்தைகளில் வடித்தெடுக்கப்படவியலாத உணர்வு..
பேரன்பும், பெருங்கோபமும் உந்தித்தள்ளும் செயல்பாடு.
பாசத்தில், நேசத்தில் பெருக்கெடுக்கும் அன்பின் ஊற்று..
ஒன்று மற்றொன்றாய் மாறும் இரசவாதவித்தை..

அனைத்திற்கும் மேலாக.. அது துரோக இருள் கிழிக்கும் மின்னல் கீற்று;
வசந்தத்திற்குக் கட்டியம் கூறும் வானவில்....

நமது அனுபவத்தின் வீச்சு, அறிதலின் ஆழத்தைப் பொறுத்து விரிந்துகொண்டே செல்கின்றன தியாகத்தின் பரிமாணங்களும், பரிணாமங்களும்.

காற்றிலாடிய முல்லைக்குத் தேர்கொடுத்ததும், குளிரில் வாடிய மயிலுக்குப் போர்வை தந்ததும், மூப்புப் பிணியறுக்கும் அருநெல்லியை அருந்தமிழை வாழவைக்கும் ஒளவைக்கு அதியமான் ஈந்ததும்... சங்கப்பாடல்கள் தீட்டும் ஈகையின் சித்திரங்கள்.

வீரமங்கை வேலு நாச்சியார், தன்னுடலையே ஆயுதமாக்கி வெள்ளையனின் வெடிமருந்துக்கிடங்கைத் தகர்த்த போராளி குயிலி, ஜான்சிராணி இலட்சுமிபாய், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை சகோதரர்கள், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், மாவீரன் திப்புசுல்தான் .. ... வரலாறாய் நீள்கிறது வெள்ளையனின் ஆக்கிரமிப்புகளுக்கெதிராக, நம் மண்ணைக் காக்கப் போராடியவர்களின் படைவரிசை.

பிர்லா மாளிகையில் குடித்த ஆட்டுப்பாலும், கொறித்த வேர்க்கடலையும் செரிக்க உண்ணாவிரதமிருந்து நடைப்பயணம் செய்த, சுதந்திர வேட்கையில் பொங்கியெழுந்த மக்களை தனது தள்ளாத வயதுவரை கைத்தடியாலடித்து வதைத்த மகாத்மாக்களின் துரோகத் திரை கிழித்து நம் நாட்டின் விடுதலைப் போராட்ட வானில் சுடர் வீசும் நட்சத்திரங்களாகத் திகழும் பகத்சிங் மற்றும் தோழர்களின் தியாகம்.

அடிமைத் தளையுடைக்கும் சுதந்திரப் போரில் சிறைபட்டு, சித்திரவதைக்கு ஆளாகி, இன்னுயிர் நீத்த பல்லாயிரம் தியாகிகள்.

இப்படிப்பட்ட நம் முன்னோர்களின் மூச்சுக்காற்றில் பிறந்ததுதான் இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று.

இங்கு மட்டுமல்ல.. உலகெங்கிலும் தனது மண்ணையும், மக்களையும் நேசித்த தியாகச்சுடர்களின் ஈகங்கள்தான் மக்களின் அடிமை விலங்கொடித்து, மனித சமூகம் புதுவாழ்வு காண வித்திட்டது.
******

பண்ணைகளின் கொடுங்கோன்மையையும், முதலாளித்துவச் சுரண்டலையும் போரிட்டு வீழ்த்தி, புதியதோர் உலகம் படைக்க, பொதுவுடைச் சமுதாயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சோசலிச இரசியாவின் மீது வன்மத்துடன் போர்தொடுத்தான் பாசிச ஹிட்லர். அவனது ஆக்கிரமிப்புப் படையினரிடம் அகப்பட்டு மூச்சுத்திணறிக்கொண்டிருந்தது அந்தச் சிறு கிராமம்.

நாடெங்கிலும் ஹிட்லரின் பாசிச இராணுவத்தை முறியடித்து முன்னேறிக்கொண்டிருந்தது செம்படை. தனது ஊரை ஆக்கிரமித்திருந்த ஜெர்மானியப் படையினரை விரட்டியடிக்க அந்த செம்படை வீரர்களின் வருகையை எதிர்நோக்கி விடியலுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் அந்தக் கிராம மக்கள்.

அவ்வூரை ஆக்கிரமித்திருந்த கொடூர மனம் படைத்த ஜெர்மானியப் படையதிகாரி நிகழ்த்திய அட்டூழியங்களால் சொல்லொணாத் துயருக்கு ஆளாயினர் மலைக்குன்றின் மேலிருந்த அந்தச் சிற்றூரின் மக்கள். பெண்களும், சிறுவர்களும், முதியோர்களும் மட்டுமே அவ்வூரில் இருந்தனர். ஆண்கள் எல்லோரும் செம்படையில் இணைந்து ஜெர்மானியர்களை விரட்டும் போர்முனைக்குச் சென்றிருந்தனர்.

அந்தப் போர்ச்சூழலில், அந்தச் சிற்றூரின் எளிய கிராம மக்கள் மேற்கொண்ட போராட்டத்தையும், பட்ட துன்பங்களையும், செய்த தியாகங்களையும், அவர்களது நாட்டுப்பற்று, மனிதநேயம், தாய்மையுணர்வு உள்ளிட்ட நற்பண்புகளையும் விவரமாக எடுத்துரைக்கிறது இந்த நாவல்.
தாய்மையை, அனைத்தையும் நேசிக்கும் அதன் பேருருவை, அதன் அளப்பரிய தியாக உணர்வை வெளிப்படுத்திய அற்புத முத்துக்களை, சோவியத்தின் பொதுவுடைமைப் பூமியில் பிரகாசித்த இரத்தினங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது "வானவில்" எனும் இந்த இரசிய நாவல்.
போரிலே மகன் மாண்டான் எனும் செய்தி கேட்டு போர்க்களத்திற்கு விரைந்துசென்றவள் குப்புறக்கிடக்கும் தனது மகனின் உடலைப் புரட்டிப்போடுகிறாள். மார்பில் விழுப்புண் பட்டு மல்லாந்துகிடக்கும் அவ்வுடலின்மீது வீழ்கின்றன அவளது கண்ணீர்த்துளிகள்; இழப்பின், மரணத்துயரின் வெளிப்பாடாக மட்டுமல்ல. தன் உயிரைக் கருவாக்கி, உதிரத்தை அமுதாக்கித் தான் வளர்த்த அருமை மகன் போரில் புறம் காட்டிய கோழையல்ல; மாறாக, மார்பில் வேல் தாங்கிய மறவன் என்கிற பெருமிதத்திலும் ஊற்றெடுத்த பன்னீர்த்துளிகள் அவை. இது புறநானூறு காட்டும் ஒரு வீரத்தாயின் சித்திரம்.

ஊருக்கு வெளியே, அருவிக்கரைப் புதரருகே உறைபனியில் விரைத்துக்கிடக்கிறது விடுதலைப் போரில் வீரமரணமடைந்த அன்பு மகனின் சடலம். ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க அவ்வூரைக் கடந்து செல்கையில் ஜெர்மானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட செம்படை வீரர்களில் அவனும் ஒருவன். நாள்தோறும் அருவிக்கரைக்குத் தண்ணீர் எடுத்துவரச்செல்லும் தாயால் மகனின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு வரமட்டுமே இயலுகிறது. வாரியெடுத்து, மார்போடணைத்து, வாய்விட்டுக்கதறியழ, நல்லடக்கம்செய்ய வாய்க்கவில்லை அந்தத் தாய்க்கு. இறந்து கிடப்பவன் அவ்வூரைச் சேர்ந்தவன் எனத் தெரிந்துவிட்டால் ஜெர்மானிய ஏவல் நாய்கள் எக்காளமிடும்; சடலத்தை ஊர்நடுவே மரத்தில் தொங்கவிட்டுச் சிதைக்கும்; குதூகலித்துக் கும்மாளமிடும். இந்தக் கோரக்காட்சியைக் காண விரும்பவில்லை அவள். எனவேதான் தாங்கமுடியாத அந்த வேதனையை மனதில் இருத்திக்கொண்டு விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறாள் அத்தாய்.

வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டே விடுதலைக்காகப் போரிட்ட வீரமங்கை, அவள் ஒரு கொரில்லாப்போராளி. பிரசவ நாள் நெருங்கியதால் வீடுதிரும்பியவளை மோப்பம் பிடித்துவிட்டது ஜெர்மானிய மிருகம். கொரில்லா வீரர்களின் நடமாட்டம் குறித்துத் தகவல்களைப் பெறுவதற்காக நிறைமாதக் கர்ப்பிணியென்றும் பாராமல் கொடூரமாகச் சித்திரவதை செய்கிறான். நல்வாழ்வு தருவதாக நயவஞ்சக நாடகமாடினான். அச்சுறுத்திப் பார்த்தான். அசையவில்லை அவள். கல்மனதையும் கரையச் செய்யும் கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டது அந்த ஜெர்மானிய மிருகம். நடுக்கும் குளிரை விரட்டியடிக்கவியலாத கந்தல் ஆடைகளுடன் வயிற்றுப் பாரம் தாளாமல் தள்ளாடியவளை நாள்முழுதும் சொட்டுத்தண்ணீர் கூடத் தராமல் நிற்கவைத்து வதைத்தது; மசியவில்லை அவள். உடைகிழித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் இழுத்துச்செல்லப்பட்டாள்; கத்தியாகக் குத்தும் பனிச்சிதிலங்களின் மீது தடுமாறி விழுந்தவளை துப்பாக்கிக் கட்டையாலும், கத்தியாலும் குத்துகின்றன அம்மிருகங்கள். எலும்பையே உறையவைக்கும் பனிக்காலம் அது. வெற்றுடம்பாய் வீசியெறியப்பட்டாள் கட்டாந்தரைமீது சிறைக்குள். நாவறண்டு, குளிரில் விறைத்து, நாடியொடுங்கிக் கிடந்தவள் உதவிக்கு யாருமற்ற நிலையில் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.

இரத்தவாடை பிடித்துவிட்ட ஓநாய் விழித்துக்கொண்டது. தாய்ப்பாசத்தைப் பகடையாக்கிப் பேரம் பேசினான். குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டாவது உண்மையைக் கூறும்படி கெஞ்சிப்பார்த்தான். ஆனால் தனது நாட்டு மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக விடுதலைப்போரில் தன்னையே கரைத்துக்கொண்டவள் அவள். ஈன்றெடுத்த மகவின் மீது மாளாத பாசம் கொண்ட அன்னைதான் அவள். அத்துடன் இளம்பருவத்திலேயே தாய்நாட்டு விடுதலைக்காகப் போரிடும் கொரில்லாப் படையின் வீரப் புதல்வர்களையும் தான் பெற்றெடுக்காத மக்களாகவே நேசித்தவள் அவள். எனவே, காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டாள். அடுத்த கணமே பிஞ்சுக்குழந்தையின் நெஞ்சிலே பாய்ந்தது வஞ்சகனின் துப்பாக்கிக் குண்டு. அழவில்லை அவள். சிலையாக நின்றவளை குழந்தையுடன் இழுத்துச் சென்று அருவியில் தள்ளிக் கொன்றனர் பாசிஸ்டுகள். அன்று பிறந்த மழலையைக் கொன்று வீசியது கண்டும் சித்தம் கலங்காமல் எஃகுறுதியுடன் எதிர்த்து நின்று தன் தாய்நாட்டு வீரர்களின் உயிர் காத்தாள் அந்தத் தாய்.

கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது அவ்வூரில். இரவில் யாரும் வெளியில் நடமாடக்கூடாது. மீறுபவர்கள்
சுட்டுத்தள்ளப்படுவார்கள். துணிந்து மீறினாள் ஒரு தாய். சிறைப்பட்டிருந்த கர்ப்பிணியின் கதறல் அவளை உந்தித்தள்ளியது. உணவும், தண்ணீரும் தரப்படாமல் நாள்முழுதும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவளின் பசி தணிக்க ஒரு சிறிய ரொட்டித் துண்டினை தனது மகனிடம் கொடுத்தனுப்புகிறாள் சிறைக்கூடத்துக்கு, நள்ளிரவில். விதி மீறிய அச்சிறுவனை சுட்டுக்கொன்று சாக்கடையில் எறிந்தன பாசிச மிருகங்கள். யாருமறியாவண்ணம் ஊர்ந்து சென்று சாக்கடையில் கிடக்கும் தனது குழந்தையின் உடலை எடுத்து வந்து வீட்டுக்குள்ளேயே அடக்கம் செய்கிறாள் அத்தாய், தனது மற்ற குழந்தைகளின் கண்முன்பாகவே. இறந்தவன், விதி மீறத் துணிந்தவன் தனது மகன் என்பது விடியலில் அடையாளம் காணப்பட்டுவிட்டால் ஒட்டுமொத்தக் குடும்பமும் சுட்டுப்பொசுக்கப்படும். மகனை மண்ணிலும், துக்கத்தை நெஞ்சிலும் புதைத்துக்கொண்டாள் அந்தத் தாய்.

அந்தச்சிற்றூரிலிருந்த ஆடு,மாடு,கோழி அனைத்தையும் தின்றுதீர்த்துவிட்ட ஜெர்மானியர்களின் முன்னே வந்துநின்றது உணவுப் பஞ்சம். கிராம மக்களின் மீது வரி விதித்தனர். வரியாக ஒவ்வொரு குடும்பமும் தானியங்கள் தரவேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டது. தம்பிடி தானியமும் தங்களிடமில்லையெனக் கைவிரித்துவிட்டனர் மக்கள் எல்லோரும். ஊர் மக்களில் ஐந்துபேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு மூன்று தினங்களுக்குள் தானியங்களைக் கொண்டுவராவிடில் அவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினான் அதிகாரி. அடிபணிய மறுத்து உறுதியுடன் எதிர்த்து நின்றனர் மக்களனைவரும் ஒற்றுமையுடன். ஆனால், அவர்களிடம் நிறையவே தானியங்கள் இருந்தன. அவை, மண்ணைக்காக்கும் போரில் ஈடுபட்டுள்ள தனது மைந்தர்களுக்காக, செம்படை வீரர்களுக்கென அம்மக்களால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளவை; தனது மண்ணை ஆக்கிரத்துள்ள பாசிசப் பேய்களின் பசிபோக்க அல்ல.
இப்படிப் பலவாறாக, தியாகத்தின் சுவடுகள் இந்நாவல் முழுவதும் தடம் பதித்துச் செல்கின்றன.
************************************

கடும் இன்னல்களையும், கொடுந்துன்பங்களையும் எதிர்கொண்டபோதிலும் கொண்ட இலட்சியத்தில் பற்றுறுதியுடன் இருப்பதற்கு அதீத மனவலிமையும், அளப்பரிய தியாக உணர்வும் தேவைப்படுகிறது. இந்த உயரிய நற்பண்புகள் ஒருங்கே அமையப்பெற்ற கோடிக்கணக்கான மைந்தர்களைக் கொண்டிருந்தது அன்றைய சோவியத் இரசிய சமூகம். ஆண்களும், பெண்களும், சிறியோர் முதல் வயதானவர்கள் வரை, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் திரண்டெழுந்து போராடினர். ஹிட்லரின் நாஜிப் படைகளை விரட்டியடித்துத் தாய் மண்ணை மீட்டனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட இம்மாவீரர்களின் தியாகம்தான் உலக மக்களைப் பாசிசத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்துக் காத்தது.

மனிதன் இயற்கையின் அங்கம். மனித உணர்வுகள் சமூகக் கூறுகளின் பிரதிபலிப்புகள். வளமான மண்ணில்தான் நலம்காக்கும் பயிர், பச்சைகள் செழித்தோங்கி வளர்கின்றன. அன்றைய சோவியத் சமூகம் பண்பட்டிருந்தது. பொதுவுடைமைப் பண்பாடுகொண்ட அப்பூமிதான் உயரிய, நற்பண்புகளைக்கொண்ட மக்களை வளர்த்தெடுத்தது; உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் பிறப்பித்தது. உழைக்கும் மக்களின் உயர்வுக்கு வழிகாட்டியது. அந்த வரிசையில் உதித்ததுதான் வானவில் எனும் இந்நாவல்.
நல்வாழ்வுக்கான தேடல்கள் நடப்பு நிலையை உற்று நோக்கவைக்கின்றன.

நீரின்றி வறள்கிறது நமது பூமி; நிலத்தைப் பறிக்கிறது அரசு; பயிர்வளர்த்தும் உயிர்வளர்க்க முடியாமல் மடிகிறான் விவசாயி. நவீன அடிமைப் பண்ணைகளாக வளர்கின்றன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். தொழிலாளிகளின் உயிர் குடிக்கும் கொலைக்கூடங்களாகத் தொழிற்சாலைகள். வாழ்விடங்களிலிருந்து விரட்டப்படுகின்றனர் பூர்வகுடிகள். பட்டப்பகலில், பகிரங்கமாக, துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கப்படுகின்றன இயற்கை வளங்கள் யாவும். உலகமயத்தால் ஒட்டச்சுரண்டப்படுகிறது தேசம். வளர்ச்சியின் பலிபீடத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை. ஜனநாயகப் பூங்காவில் கோலோச்சுகின்றனர் நவீன ஜார் மன்னர்கள். ஆட்சி பீடத்திலிருந்து பொங்கி வழிகின்றன அருளுபதேசங்கள் நாராசமாய். வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட மக்கள் தள்ளப்படுகின்றனர் போராட்டக் களங்களை நோக்கி.

நாடு காக்க, நல்வாழ்வு காண, அநீதிகளை, அவலங்களை ஒழித்துப் புதுயுகம் படைக்க, புதிய விடியலைக் காண விழைபவர்களுக்கு உணர்வூட்டும் ஆற்றலாக, போராட்டப்பாதையின் கைவிளக்காக இந்நூல்.

உண்மை.. உணர்வூட்டும்;
போராட்டம்... துரோக இருள் கிழிக்கும்;
தியாகம்... புதியதோர் உலகு செய்யும்;
வானவில்... வசந்த காலத்திற்குக் கட்டியம் கூறும்.
மண்ணை, மக்களை, வாழ்வை நேசிப்பவர்கள் இந்த வானவில்லை வாசியுங்கள். தொடுவானம் தொட்டுவிடும் தூரம்தான்.

- மருதமுத்து,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

ஆசிரியர் - வாண்டா வாஸிலெவ்ஸ்கா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ. 125/-

1 comment:

வலிப்போக்கன் said...

ஒரு “தாய்”யின் போராட்டத்தைப் போல பல “தாய்”மார்களின் போராட்ட வரலாறு பதிவிட்டு தெரிவித்தமைக்கு நன்றி!!!