Sep 15, 2015

ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்! - கண்டன ஆர்ப்பாட்டம்!



வழக்குரைஞர் சமூகத்தை மிரட்டுவதற்கு வருகிறது மத்திய போலிசு படை !
ஊழல் நீதிபதிகளை எதிர்க்கும்

நீதிமன்றங்கள் இனி போலீசு நிலையங்கள் !

ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்!

அன்பார்ந்த வழக்கறிஞர்களே,பொதுமக்களே!

நேற்று (15.09.2015) சென்னை உயர்நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், சிவஞானம் அமர்வு, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சில வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து,
உயர்நீதிமன்ற வளாகத்தையே போலீசு முகாமாக மாற்றும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. நீதிமன்றத்தின் மாண்பைப் பாதுகாப்பது என்ற பெயரில் வழக்குரைஞர் சமூகத்தையே குற்றவாளிகளாகச் சித்தரித்திருக்கிறது.

வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு (1) மதுபாட்டிலோடு வருகிறார்கள் (2) பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள் (3) கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் (4) கட்சிக்காரர்கள் பெரும் தொகை கொடுக்காவிட்டால்,பொய்ப் புகார் கொடுக்கிறார்கள் (5) தவறே செய்யாத போலீசு மீது குற்றம் சுமத்துகிறார்கள் (6) நீதிமன்றங்களில் ஊர்வலம், போராட்டம் நடத்துகிறார்கள் (7) யோகா வகுப்பு நடத்த விடாமல் தடுக்கிறார்கள் (8) மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் - என்று போலீசார் எழுதிக் கொடுத்த குற்றப்பத்திரிகையை வாசித்து, விசாரணை நடத்தும் முன்னரே தண்டனையையும் அறிவித்து விட்டார்கள். இனிசென்னை, மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமாம். நீதித்துறையின் இறையாண்மையை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தையும் பிடுங்கி மத்திய அரசிடம் ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார்கள் மாண்புமிகு நீதிபதிகள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் வழக்காடவும்வழக்குரைஞர்களாகிய நாம்தயார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்லவும் தயார். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி நீதியரசர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதே நாம் முன்வைக்கும் கேள்வி. சென்னை, மதுரை வழக்குரைஞர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைக் காட்டிலும் கடுமையான எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உயர்நீதி மன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது இருக்கின்றன.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் (1) சேம்பரில் மது அருந்துகிறார்கள் (2) நீதிமன்ற பெண் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள் (3) கிரானைட், தாதுமணல்,கார்ப்பரேட் வழக்குகளில் ஊழல் செய்து பல நூறு கோடி சம்பாதிக்கிறார்கள் (4) காசு வராத வழக்குகளில் தொடர்ந்து வாய்தா போடுகிறார்கள் (5) பெண் நீதிபதிகளை டான்ஸ் ஆடச் சொல்கிறார்கள் (6) கீழமை நீதிமன்ற நீதிபதிகளை மீன் குழம்பு வைத்து வரச் சொல்கிறார்கள் (7) சாதிவெறியோடு செயல்படுகிறார்கள் (8) நீதிமன்ற டெபாசிட் பணத்தை கையாடல் செய்கிறார்கள் (9) அரசு-போலீசுக்கு ஆதரவாக முறைகேடாகத் தீர்ப்புச் சொல்கிறார்கள் (10) நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தேர்வில் ஊழல் செய்கிறார்கள் என ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு நீதிபதிகள் தயாரா? நீதிமன்ற அவமதிப்பு என்ற கவசத்தைப் பயன்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை அழிப்பவர்கள் நீதிபதிகள்தான் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?

கட்டாய ஹெல்மெட் என்ற உத்தரவும், அணியாதவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, மக்கள் நலனுக்கு எதிரானது என்பது மதுரை வழக்குரைஞர் சங்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடைய கருத்து. எனவேதான், மதுரை வழக்குரைஞர்களாகிய நாங்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்தோம். விமரிசித்தோம். இது ஒரு கருத்துரிமை. கருத்தை வெளிப்படுத்தும் குடிமக்களின் உரிமையைப் பறிக்கின்ற அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. நாங்கள் பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்றால் ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களையும், இந்த தீர்ப்புக்கு எதிராக அன்றாடம் பேசி வரும் லட்சக்கணக்கான மக்களையும் உயர்நீதிமன்றம் தண்டிக்கட்டும்.

எங்களுக்கு எதிராக 16.9.2015 அன்று நடைபெறவிருக்கும் வழக்கு விசாரணை குறித்து நீதிபதிகள் சி.டி.செல்வம், தமிழ்வாணன் அமர்வு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, மற்ற
வழக்கறிஞர்கள் உள்ளே வரக்கூடாதாம்;இன்– கேமரா விசாரணையாம்; வீடியோ பதிவாம்;சீருடை அணிந்த-அணியாத போலீசு பாதுகாப்பாம்! நூற்றுக்கணக்கான கொலைகளை அரங்கேற்றிய சாதி,மதவெறி கிரிமினல்களின் வழக்குகள் கூட திறந்த நீதிமன்றத்தில் நடத்தப்படுகின்றன. வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட நடந்திராத வகையில் வழக்குரைஞர்களை பயங்கரவாதிகளைப் போல சித்தரிக்கிறது இந்த உத்தரவு.

நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் உயர்நீதிமன்ற வளாகத்தை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைப்பது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன் காமெரா விசாரணை – என்பன போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். உண்மை அதுவல்ல.
இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 10-ம் தேதியன்று தென்மாவட்ட வழக்கறிஞர்கள் சுமார் 1500 பேர் மதுரையில் கூடி நீதித்துறை ஊழலுக்கெதிராகப் பேரணி நடத்தினோம். ஊழல் நீதிபதிகள் பட்டியலை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டோம். நீதித்துறை ஊழலைப் பற்றி பகவதி முதல் கட்ஜு வரை பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பேசியிருக்கிறார்கள். வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊழலை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்திருக்கும் மனு ஆண்டுக்கணக்கில் தூங்குகிறது. பல அரசியல் வாதிகளும் ஊடகங்களும் இதனைக் கூறியிருக்கிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாத நீதிபதிகள், 1500 வழக்குரைஞர்கள் வீதிக்கு வந்து குறிப்பான நீதிபதிகள் மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியவுடனே கொந்தளிக்கிறார்கள். தங்களுடைய உண்மை முகம் மக்கள் மத்தியில் அம்பலமாவதை அவர்களால் சகிக்க முடியவில்லை.

வழக்குரைஞர்கள் பொதுப்பிரச்சினைக்காகப் போராடுவது இது முதல் முறையல்ல. காவிரி, முல்லைப்பெரியார்,ஈழம்,உரிமையியல்-குற்றவியல் சட்டத்திருத்தங்கள், மூவர் தூக்கு என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்குரைஞர்கள் போராடியிருக்கின்றனர். நீதிபதி சுபாஷண் ரெட்டியின் பாசிசக் கட்டளைகளை எதிர்த்துப் போராடி முறியடித்திருக்கிறோம். இவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல்தான் பிப்ரவரி 19 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் போலீசு படை புகுந்து தாக்குதல் நடத்தியது. நீதிபதிகள், பெண் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என்று பலரை போலீசார் தாக்கியதற்கும், வாகனங்களை நொறுக்கியதற்கும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் அந்த வழக்குகள் தூங்குகின்றன.

 இப்போது நீதிமன்ற வளாகத்தையே போலீசு முகாமாக மாற்றுவதென்று முடிவு செய்து விட்டார்கள் நீதியரசர்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நகைப்புக்குரியவை. ‘’வழக்குரைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கார்களை நிறுத்துகிறார்கள்’’ என்று உப்பு சப்பில்லாத குற்றச்சாட்டுகளை தலைமை நீதிபதி அடுக்குகிறார். மாட்டுக்கறியும் அசைவமும் சாப்பிடுபவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். யோகா என்ற பெயரில் உயர் நீதிமன்றத்துக்குள் இந்துத்துவ பிரச்சாரம் செய்வதை எதிர்ப்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தடுத்து, நீதித்துறையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டுமானால், மத்திய போலீசு படையிடம் உயர் நீதிமன்ற வளாகத்தை ஒப்படைக்க வேண்டுமாம் !

“ஊழல் நீதிபதிகளிடமிருந்து நீதியின் மாண்பைக் காப்பாற்றுவோம்” என்று குரல் எழுப்பினால், அப்படிக் குரல் எழுப்பும் “வழக்குரைஞர்களை மட்டுமல்ல, நீதிமன்ற வளாகத்தையே போலீசிடம் ஒப்படைப்போம்” என்கிறார்கள் நீதியரசர்கள். இதைவிடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பை யாரேனும் இழைக்க முடியுமா?

வழக்கறிஞர்கள் குற்றமே இழைக்காதவர்கள் என்று நாம் ஒரு போதும் சொல்லவில்லை. குற்றமிழைப்பவர்கள் யாராயிருந்தாலும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆனால் கடந்த 67 ஆண்டுகளில் எந்த உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டதில்லை. இவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், வெளிப்படையாக துணிச்சலாக ஊழல் குற்றம் முதல் பாலியல் குற்றம் வரை அனைத்தையும் செய்கிறார்கள். தட்டிக் கேட்டால், குற்றமிழைக்கும் நீதிபதிகளே, நீதிமன்ற அவமதிப்பு என்று நம்மை மிரட்டுகிறார்கள்.
நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பாதுகாப்பு அகற்றப்படாத வரை நீதித்துறை ஊழலை ஒழிக்கவே முடியாது. அரசியல்வாதிகள் சொத்துக் கணக்கை காட்டவேண்டும் என்று ஒப்புக்காவது ஒரு சட்டமிருக்கிறது. ’’நீதிபதிகளோ சொத்துக்கணக்கு காட்ட மாட்டோம். ஏனென்றால் நாங்கள் நீதிபதிகள்’’ என்று கூச்சமே இல்லாமல் அறிவிக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் உயர் நீதிமன்றத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள் நீதியரசர்கள்.

“முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பை மத்தியப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டால் அது கேரள அரசின் உரிமை என்று கூறும் நீதிமன்றம், தமிழகத்தின் உயர் நீதிமன்றத்தை மத்தியப் படையிடம் ஒப்படைக்கக் கோருகிறது. தமிழே தெரியாத தலைமை நீதிபதிகள், தமிழே தெரியாத போலீசு படைகளின் கட்டுப்பாட்டில் தமிழகத்தின் உயர் நீதிமன்றம்! நெய்வேலியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஒரு அப்பாவித் தொழிலாளியைச் சுட்டுக் கொன்று விட்டு, அதனை எதிர்த்த பிற தொழிலாளர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காட்சியைத் தமிழகமே கண்டது. உயர் நீதிமன்றத்திலும் நாளை இது நடக்கும். “நீதிபதிகளின் ஊழலை எதிர்த்தால் என்கவுன்டர்” என்பதுதான் தற்போது பிறப்பிக்கப் பட்டிருக்கும் உத்தரவுக்குப் பொருள்.

இந்த சர்வாதிகாரத்துக்கு பணிய மாட்டோம் என்பதைத் தமிழகத்தின் வழக்குரைஞர்கள் நிரூபித்துக் காட்டுவோம்!
நீதித்துறை ஊழலுக்கு முடிவு கட்டுவோம்.

000
கண்டன ஆர்பாட்டம்!

நாள்:16.09.2015 புதன்

இடம்:ஆவின் முன்பு,

உயர்நீதிமன்றம்,சென்னை.
அனைத்துவழக்கறிஞர்சங்கங்கள் – தமிழ்நாடு

ஊழல்நீதிபதிகள்மீதானபுகார்களைத்தெரிவிக்க-
மதுரைவழக்கறிஞர்சங்கம்தொலைபேசி எண் : 0452- 2537120

No comments: