Sep 9, 2015

முன்பணம் கட்டுவதை தகர்த்தோம்! மக்களும், தோழர்களும் பிணையில் விடுதலை!


டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட“மக்கள் அதிகாரம்” அமைப்பைச் சேர்ந்த தோழர்களுக்கும், மக்களுக்கும் பிணை வழங்குவதற்கு நீதிபதி வைத்தியநாதன் விதித்த நிபந்தனைகள் குற்றவியல் நீதி வழங்கு நெறிகளுக்கே (criminal jurisprudence) எதிரானவை. பிணை தருவதற்கு மேலப்பாளையூர் விவசாயிகள் 10,000 ரூபாய் முன்பணம் (Deposit) கட்ட வேண்டுமென்றும், விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் 50,000 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டுமென்றும், இந்தத் தொகையை புகார்தாரரான டாஸ்மாக் நிர்வாகத்திடம் இப்போதே கொடுத்துவிட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தார் உயர்நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளிதானா என்பதும், இழப்பு என கூறப்படும் தொகை உண்மைதானா என்பதும் விசாரைணக்குப் பின்னர் தீர்ப்பில்தான் தெரியவரும். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டு சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பத்து ரூபாய் கூட டெபாசிட் விதிக்காமல் பிணை தருகிறார் தலைமை நீதிபதி தத்து. 20,000 கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியா நிறுவனம் வெறும் 200 கோடியை டெபாசிட் செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்து ஆலையை மூடுவதற்குத் தோதாக தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.

ஆனால் சாராய பாட்டிலை உடைத்த குற்றம் நிரூபிக்கப் படுவதற்கு முன்னரே, அட்வான்சாக 50,000 ரூபாய் அபராதம் விதித்து ஒரு மாணவனுக்கு நீதி வழங்கப்படுகிறது. இது மனுநீதி அல்லாமல் வேறென்ன?
மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு போலீசு சொன்ன யோசனையை தான் நீதிமன்றமும் அப்படியே ஏற்று முன்பணம் கட்ட உத்தரவிட்டிருக்கிறது. முன்பணம் கட்டி வெளியே வந்தால், ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும், இனி வருங்காலங்களிலும் இதையே அரசும், நீதிமன்றமும் கடைப்பிடிக்கும் என கருதி, சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களிடமும், மக்களிடமும் விவாதித்தோம். சிறையில் இருப்பது எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. தொடர்ந்து போராடுங்கள் என நமக்கு தெரிவித்தார்கள்.

உடனடியாக நமது வழக்குரைஞர்கள் முன்பணத்தை ரத்து செய்ய சொல்லி வழக்கு தாக்கல் செய்தார்கள். மூத்த வழக்குரைஞர்களும் நமது கருத்துக்கு உடன்பட்டார்கள். நாம் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தில் முன்வைத்ததும், சங்கமும் ”டாஸ்மாக் போராட்டம் நியாயமானது. கைதாகி ஒரு மாதம் ஆகியும் சிறையில் உள்ளவர்களை எவ்வித நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், உயர்நீதி மன்ற வளாகத்திலேயே நீதிமன்றத்தின் போக்கை கண்டிக்கும் விதமாக, திரளான வழக்குரைஞர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இப்படி தொடர் போராட்டத்தின் விளைவாக, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, மூத்த வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, விஜயகுமார், செல்வராஜ் அவர்களும், நமது வழக்குரைஞர்களும், ஆதரவான வழக்குரைஞர்களும் ஒன்று சேர்ந்ததில், நீதிமன்றம் வேறுவழியின்றி பணிந்தது. கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டுவதற்கு ஒரு முதல் தகவலறிக்கைக்கு (FIR) ரூ. 1000 பணம் கட்டவேண்டும் என கூறியிருக்கிறது! ஒரு மாதம் காலம் சிறையில் இருந்தாலும், உறுதியோடு இருந்த மக்களும், தோழர்களும், மற்றும் வழக்குரைஞர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும் தான் அரசின், நீதிமன்றன்றத்தின் ஒடுக்குமுறையை தகர்த்திருக்கிறது! இப்பொழுது மேலப்பாளையூர் மக்களோடு கைதான மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜூவும், விருத்தாச்சலம் மக்கள் அதிகாரம் தோழர்களும், கோவை மக்கள் அதிகாரம் தோழர்களும் பிணையில் விடுதலை ஆகிறார்கள்.

சிறையில் இருந்து மக்களையும், தோழர்களையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் பல மூத்த தோழர்களும், ஆதரவான வழக்குரைஞர்களும், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும், நீதிமன்ற ஊழியர்களும் பல உதவிகளை செய்து, நம் தோள் கொடுத்து நின்றிருக்கிறார்கள். அனைவருக்கும் நமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.
வருகிற திங்கட்கிழமையன்று டாஸ்மாக் போராட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் பிணை வழக்கு வருகிறது! அதற்கான வேலைகளில் இப்பொழுது தயாராகி வருகிறோம்.


 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

05/09/2015

No comments: