May 4, 2016

ஏவுகணைகளும் - கவண் கற்களும் !
அடாவடியான வழக்குரைஞர்களை கட்டுப்படுத்தி ஒழுங்கினை நிலைநாட்டவே பார்கவுன்சிலின் வழக்குரைஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை - திரைக்கதையின் பொய்மை அம்பலமாகியுள்ளது.

ஆறு மாதங்களாக வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின் நிற்பவர்கள் யார் என்று கழுதையாக கத்தும்போது கேட்க மறந்த காதுகளுக்காக மாண்புமிகு நீதிப்பிரபு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ”ஆமாம் நாங்கதான் செய்தோமென்று” வழக்கறிஞர்களின் மீதான சஸ்பெண்ட் உத்தரவு மண்டபத்தில் எழுதிக்கொடுத்த ‘தருமி’ யின் கவிதை என்பது எல்லோருக்கும் இலை மறை காயாக தெரிந்தாலும் அந்த “ஈசனே” எழுதியது யாம்தான் என்று சபையில் உரைப்பது தனிச்சிறப்பல்லவா?

" NO MAN SHALL BE JUDGE ON HIS OWN CASE" - இந்த ’மடத்தமான சட்ட மொழியை’ - குப்பையில் போடுங்கள். பதிவாளரை விட்டு புகார் கொடுத்து, பார்கவுன்சிலிடம் சொல்லி சஸ்பெண்ட் செய்து, சரியானதென்று தீர்ப்பும் சொல்லும் ‘சாணக்கிய நீதியை’ சட்டமாக்குங்கள். தசாவதாரம் கமலகாசனுக்கு மட்டும் சொந்தமா என்ன? யார் கேட்பது ‘ராமராஜ்ஜியத்தில்’ இதுபற்றி கம்பரே சொல்லியுள்ளாராம்.

தலைமை நீதிபதி வீட்டில் உச்சா போகும் ‘தொழிலுரிமையைப் பாதுகாப்பதுதான் பார்கவுன்சில் வேலையே தவிர, நீதித்துறை ஊழல் பற்றி பேசினால் எப்படி பொறுத்துக்கொள்வது? குவார்ட்டர் சரக்கும் கோழி பிரியாணியும் தந்து ஜெயித்தது இதற்காகவா?
ஒரு பிரச்சினையை தீர்க்க எளிமையான வழி அதைவிட பெரிய பிரச்சினையை ஏற்படுத்து. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கேட்டு போராடுவார்களா? வாழ்வுரிமையைப் பறித்து தெருவில் விடுங்கள் சரியாகிவிடும். அற்புதமான உங்களின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசெல்லாம் தூசு....

பார்கவுன்சில் செயலாளரை தாக்கிய, பார்கவுன்சில் தலைவர் பதவியை குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து, அதற்காக வழக்கும் போட்டவர் பார்கவுன்சிலின் தலைவர். அதற்காக ’வாதாடிய லூமினரி’ மூத்த வழக்குரைஞர். இன்னும் இன்னும் உங்கள் தகுதிக்கேற்ப கவனிப்பு....ஆமாம் ‘தகுதி’ மிக முக்கியம்.

போராடும் வழக்குரைஞர்களை எதிர்கொள்ள புரோக்கர் சங்கங்கள், பதவி ஆசை, மிரட்டல், நிர்பந்தம், செண்டிமெண்ட் - ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ ’பன்முகத்தன்மை’ கொண்ட நீதிபதி வேலை செய்வது சும்மா இல்லை புரிந்து கொள்ளுங்கள்....

நம்மிடம் முழக்கமிட்டால பதில் முழக்கமிட ‘அணுகுண்டுகள்’ மட்டுமல்ல, அம்பலப்படுத்தினால் ‘போகாதே - போகாதே’ என்று ராகம் போட்டு பாட ’;உண்மையாகவே தொழில் செய்யும் வழக்கறிஞர்களும் (Real Practicing Lawyers) ’ இருக்கின்றனர். தெரிந்து கொள்ளுங்கள்...

வழக்கரிஞர்களின் மீதான குற்றச்சாட்டுகளை பார்கவுன்சில்தான் விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் சொன்னாலும் கேட்க வேண்டுமா? என்ன? திருநாவுக்கரசுை சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கலாம், வழக்கறிஞர்களை ‘வர்ணங்களாக’ வகைப்படுத்தலாம், விசாரணை தொடங்குவதற்கு முன்பே நீ குற்றவாளி என்று முத்திரை குத்தலாம். புரிந்து கொள்ளுங்கள் விவசாயி கோபாலையும் - யோக்கியன் மல்லையாவும் ஒன்றாக பார்க்க முடியுமா? தேசத்துரோகி கண்ணையா குமார் மட்டுமல்ல. சென்னையிலும் இருக்கின்றனர்.

பாட்டியாலாவில் மூத்த வழக்குரைஞர்களை தாக்கிய வழக்குரைஞர்களின் மேல் எவ்வித நடவடிக்கையும் இல்லையென பேசுகிறார் ஒருவர். முட்டாள்தனமாக இல்லை, சென்னை வழக்குரைஞர்கள் பி.ஜே.பி.கட்சியாக அல்லது அவர்கள் பாரத் மாதா கி ஜே சொன்னார்களா? நாளையே கட்சியில் சேருங்கள். அப்புறம் பார்க்கலாம்.

உயர்நீதிமன்றம் அதிகாரப் பூர்வ விடை கொடுக்கும் முன்பே லூமினரி சங்கத்தில் பிரியா விடை பெறுவோம். மரபா? கிலோ என்ன விலை என்று கேட்போம். சென்னை வழக்குரைஞர்களை சமாளிக்க லோக்கல் லூமினரிகள், அகில இந்திய அளவில் லாபி செய்ய ஆல் இண்டியா லூமினெரி. என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமல்லவா? இதற்கு முன்னர் இவர்களை ஒழுங்கீனவர்கள் என்று நீங்களே பேசினீர்களே என்று நீங்கள் நிினைப்பது கேட்கிறது..அது வேற வாய்...

ஆனால் நீதிப்பிரபுவே துரதிருஷ்டம்.என்ன தெரியுமா?....வரலாறு பலம் கொண்டவன் மட்டுமே வெல்வான் என்பதை பொய்யென்றே பதிவு செய்துள்ளது. அதனால்தான் ஹிட்லரும், முசோலினியும் அடையாளமின்றி போனார்கள்.சூரியன் மறையா சாம்ராஜ்யம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசியெறிப்பட்டுள்ளது.

வ.உ.சி-யை தேசத்திரோகியென இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த இதே மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பினை இப்போது கொடுத்துப் பாருங்கள். கழிப்பறையில் எறிவார்கள்..ஆனானப்பட்ட வெள்ளைக்கார துரைக்கே இதுதான் நிலை..செண்பகராமனின் வெத்துகுண்டு சத்தம் கேட்டதும் ஆங்கிலத்தை விட்டு ஜெர்மனுக்கு தாவியவர்கள் எந்த மூலைக்கு.
ஆயுதம் கொண்டவன் சொல்வது நியாயமென்றால் அமெரிக்காதான் உலகிலேயே யோக்கியன்..அதுவா உண்மை..வியட்நாமில் செருப்படி பட்ட அமெரிக்க இன்று கூட ஈராக்கில் தினந்தோரும் கல்லடி பட்டுக்கொண்டிருக்கிறது.

நீங்கள் ஏவுகணைகளை உற்பத்தி செய்வது ஒருபுறம் இருக்கட்டும். துணிவாக வழக்கறிஞர் சங்கத்திற்கு வரத்தயங்கியது ஏனோ? ஒருவேளை உங்கள் நண்பர்கள் பதுங்குங்குழி வெட்டி வைக்கவில்லையோ? இல்லை தரைப்படைகள் வாடகைக்கு அனுப்பப்பட்டிருந்ததோ? அய்யகோ உங்கள் இரட்டை உங்கள் பேச்சுக்கு நான் பொறுப்பில்லை என்று நழுவுகிறார், உங்களுக்கு காவடி எடுத்தவர்கள் கூட தேவையா இவருக்கு என்று மழுப்புக்கின்றனர். 

கவண்கற்களிடம் ஏவுகணைகள் வீழ்ந்தே தீரும் என்பதுதான் வரலாறு..ஏனெனில் கவன் கற்கள் மக்களின் கைகளில், நியாயத்தின் பக்கத்தில் இருப்பதனால்... அதிகார மண்ணுக்குள் தனது தலையை புதைத்துக்கொண்டு நியாய உலகமே இருண்டு விட்டது என்று சொல்லும் நெருப்புக்கோழிகளை என்னவென்று சொல்வது..பெயரில் நெருப்பு இருப்பதனால் நெருப்புக்கோழிகள் பீனிக்ஸ் ஆகிவிட முடியாது என்பது தெரியுமா?

பாதுகாப்பாக இருந்து கொண்டு ஏவுகணைகளைச் செலுத்துங்கள்...நாங்கள் கவண் கற்களோடு காத்திருக்கிறோம்.......

சென்னையிலிருந்து தேசத்துரோகிகளில் ஒருவன்...

No comments: