May 12, 2016

தேர்தல் ஜனநாயகம் நிரம்பி வழியும் ஊரில் சுவரொட்டி ஒட்டினால் சிறை!

'நம் சமுதாய மாற்றம் நம் விரலில்’ என முழங்கும் தேசத்தில்...
போலீசின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சுவரொட்டி ஒட்டினால் கைது, சிறை!
*****

மே 5- டாஸ்மாக் கடைகளை முற்றுகை நடத்திய பொதுமக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசு கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. ஊடகங்கள் வழியே நாடே பார்த்தது. இதனை கண்டித்து போஸ்டர் ஒட்டிய பு.மா.இ.மு தோழர்கள் செல்வா மற்றும் மாரிமுத்து ஆகியோரை ஜெயாவின் காவல்துறை ரிமாண்ட்டில் கைது செய்து கருத்துரிமை ஜனநாயகத்தின் மீது கரி பூசியுள்ளது.

இந்த சட்டவிரோத கைதை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் மூலம் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுகிறோம் எனக்கூறும் தேர்தல் ஆணையம் டாஸ்மாக் மூடும் போராட்டங்களை போலீசின் தடியடி வைத்து நசுக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வக்கிரமானது.
தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடும் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் டாஸ்மாக் கடை அருகில் வசிக்கும் பெண்கள் தினமும் அச்சத்துடன் கைகளில் மிளகாய் பொடி, கற்கள் எடுத்துகொண்டு பயணிப்பது ஜனநாயகத்துக்கு அசிங்கமில்லையா?
லாக் அப்பில் வைத்து நிராயுதபாணியான தோழர்களை கை,கால்களை உடைத்த மதுரவாயல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் துணை ஆய்வாளார் செல்லத்துரை உள்ளிட்ட ரவுடி போலீசை சஸ்பெண்ட் செய்!

தேர்தல் ஆணையமே,

மதுரவாயல் ஆய்வாளர் மீதும்,
துணை ஆய்வாளர் செல்லத்துரை மீதும் நீதி விசாரணைக்கு ஆணையிடு!
கைது செய்தவர்களை விடுதலை செய்!

-மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

No comments: