May 6, 2016

கட்டுப்படியான விலையில் உணவகம் அபூர்வம்!

என் எதிரே அமர்ந்தவரிடம் ’என்ன வேண்டும்?’ என கேட்டான் 18 வயதுள்ள‌ சர்வர் பையன். ’இரண்டு இட்லி’ என்றார். ‘நாலு இட்லி வாங்கிங்க’ என்றான் உரிமையுடன். ’சரி’ என்றார். சில நொடிகளில் ஒரு அக்கா வந்து, மீண்டும் முதலிலிருந்து ‘என்ன வேண்டும்’ என்றார். ஏற்கனவே ஆர்டர் சொல்லிவிட்டேன் என சொல்லாமல், அவரும் முதலிலிருந்து ‘இரண்டு இட்லி’ என்றார். கொஞ்ச நேரத்தில் நாலு இட்லிகளை வந்து தந்தான். (அக்காகிட்ட சொன்னது என்ன ஆச்சு?) இரண்டு வகை சட்னி இருந்தாலும், சாம்பார் தருவது மிக குறைவு. சர்வர் பற்றாக்குறை வேறு. மீண்டும் சாம்பார் என கேட்டால், தருவதற்கு நிறைய நேரம் இழுத்தார்கள். அவர் காத்திருந்து காத்திருந்து 'சர்வீஸ் சரியில்லைங்க' என என்னிடம் நொந்துகொண்டார்.

எதிரே அமர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலையை கண்டு சுதாரித்து, இரண்டு இட்லி, ஒரு தோசை என்றேன். வழக்கமாக உணவகங்களில் இட்லிகளை தான் முதலில் கொண்டு வருவார்கள். அப்படியே எதிர்ப்பார்த்திருந்தால்,  முதலில் தோசையை தந்தான். நன்றாக இருந்தது. இட்லியை சாப்பிடுவதற்கு வடகறியை ஆர்டர் செய்து வாங்கினேன். வடகறியோடு இட்லியை முழுங்க ரெம்பவும் சிரமப்பட்டேன். வடகறியின் சுவை எனக்கு பிடிக்கலை.

ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு வந்தால், கேசியரை சீட்டில் காணோம். ஆள் பற்றாக்குறையால், கேசியர் அக்கா பார்சல் கட்டிக்கொண்டிருந்தார். அக்கா வந்து பணம் வாங்கிக்க! என குரல் கொடுத்தான்.

ஆர்டர் எடுக்கும் பொழுது பொறுப்பாக ஒரு பெரிய நோட்டில் குறித்துக்கொண்டான் பையன். ஆனால், சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்கும் பொழுது ”நான் மறந்துட்டேன். என்ன சாப்பிட்டீங்க?” என்று திரும்பவும் என்னைக் கேட்டான். சிரித்துவிட்டேன்.

கடை துவங்கி சில காலம் ஆகியிருந்தாலும், இன்னும் இவ்வளவு குறைகள் இருப்பது ஆச்சர்யம் தான்! இன்னொருமுறை வெங்காய ரவா தோசை சாப்பிட்டேன். சுவையாக இருந்தது.

இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், கோதுமை, ராகி, ரவா, நெய் தோசை என நிறைய வெரைட்டி வைத்திருக்கிறார்கள். சென்னையில் நமக்கு சுவையும், கட்டுப்படியான விலையும் அமைவது அபூர்வம் தான். இங்கு வடை ரூ.6. தோசை ரூ. 25 என விலையும் இருப்பது மகிழ்ச்சி! :)

No comments: