May 30, 2016

அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்!


காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். நான் ஏன் இந்து அல்ல, பின் இந்து இந்தியா, அய்யங்காளி போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

விஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.

இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன் ஆனால் அதன் கலாச்சாரம் இதுவென்றால் ,நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.

தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ,ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.

நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. கடந்த 2013ல் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு பலியாகி உள்ளனர்.
சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.

நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.

அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.

-மில்ட்டன்,
 செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

No comments: