Oct 6, 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை...



முதல் ஆசிரியன் - நாவல் அறிமுகம்

தலைவாரிப் பூச்சூடி உன்னை...
பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை...
மலைவாழை அல்லவோ கல்வி...
நீ... வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.

- கவிஞர் பாரதிதாசன்

மனிதகுலம் தனது வாழ்க்கைத் தேவைகளுக்காக இயற்கையுடன் நடத்திய போராட்டத்தினூடாக சேகரித்துள்ள அறிவுச் செல்வங்கள் ஏராளம்.
எண்ணும், எழுத்துமாகக் கொட்டிக்கிடக்கும் அந்த அறிவுச் சாகரத்தின் நுழைவாயில் கல்வி.

அகர முதல எழுத்தென்று அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள் தொட்டு, பேரண்டப் பிறப்பின் இரகசியம் தேடிக் கருந்துளையிருட்டில் வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியென... ஆழ்ந்து, அகன்று, விரிந்து, பரந்து, பெருகிக்கொண்டேயிருக்கிறது கல்வியின் விளைபொருள்.
இயற்கையின் புதிர்கண்டஞ்சிக் கிடந்தவர்களை இன்று மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பல்துறை விற்பன்னர்களாகப் பரிணமிக்கச் செய்துள்ளது கல்வி.

அறியாமை இருளகற்றும் கல்விப் பணியின் வாயிலாக, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி, வளமூட்டும் அறிவெனும் அகல்விளக்கேற்றியவர்களில் முதன்மையானவர்கள் நம் ஆசிரியப்பெருமக்கள்.

ஏற்றுக்கொண்ட ஆசிரியப்பணியின் கடமை நிமித்தம் என்றில்லாமல், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டுத் தான் பிறந்து, வளர்ந்த நகர்ப்புறம் விட்டுநீங்கி, நாகரிகத்தின் 'வளர்ச்சி' தீண்டியிராத அன்றைய சிற்றூர்களில் சென்று தங்கி துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வங்களின் மனதில் கல்வியின் விதைகளைப் பதியமிட்டு வளர்த்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மகத்தானது.

உயிர்தந்து, உணவூட்டி, உடல்வளர்க்குந் தாயினும் சாலப்பரிந்து கல்வி அமுதூட்டி நம் அறிவுப் பயிர் வளர்த்து, வாழ்க்கையில் ஒளியேற்றிய இத்தகைய ஆசிரியப் பெருந்தகைகள் குறித்த நீங்கா நினைவுகள் இன்றும் நம்மில் பலரின் மனதிலும் உண்டு.
இடம், பொருள், ஏவல் என்பதாக களத்தையும், காலத்தையும் பற்றி நிற்கின்றன மாமனிதர்களின் தோற்றங்களும், மனித சமூகத்தை மாற்றியமைத்த வரலாற்றுச் சம்பவங்களும்.

********

அது 1924-ஆம் ஆண்டு. சோவியத் மண்ணில் பொதுவுடமைச் சமூகம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த காலம். தனது மக்களின் அனைத்துந் தழுவிய வளர்ச்சிக்கான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டிருந்தது பாட்டாளிகளின் அரசு. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின்கீழ் கொடூரமாக வதைக்கப்பட்டு ஏழ்மையிலும், அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த மக்களை விடுவித்த கையோடு அவர்களது கல்வி வளர்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டது.

அன்றைய சோவியத் நாட்டின் கிர்கீஸியப் பகுதியில் ஒரு மலையடிவாரத்திலிருந்தது குர்கூரெவு எனும் அந்தச் சிற்றூர். ஏழ்மையின் பிடியில் வாடிய பல நாடோடிக் குடும்பங்கள் அங்கே வசித்தனர்.

அங்கிருந்த சிறுவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதற்காக சோவியத் அரசால் அனுப்பிவைக்கப்பட்டு அவ்வூருக்கு வந்து சேர்கிறான் துய்ஷேன் எனும் இளங் கம்யூனிஸ்டுக் கழக இளைஞன். அவனும் அவ்வூரைச் சேர்ந்தவன்தான். ஆனால், முன்பு பஞ்சம் நிலவிய காலத்தில் வேலைதேடி வெளியூர் சென்றவன்; இன்று, பள்ளியாசிரியனாகத் திரும்பி வந்துள்ளான்.
விவசாய வேலைகளைச் செய்வதற்குப் பள்ளிப்படிப்பெதற்கு? என்று அறியாமையில் கேட்கும் அப்பாவி ஏழை மக்களிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறான், துய்ஷேன்; ஏற்க மறுத்து எள்ளி நகையாடுகின்றனர் ஊர்மக்கள். சோர்ந்துவிடவில்லை அவ்விளைஞன்.

அந்தக் கிராமத்தினருகிலிருந்த குன்றின்மீது சிதிலமடைந்த நிலையிருந்த - முன்பொரு காலத்தில் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாயிருந்த - குதிரைக் கொட்டடியைத் தனியொருவனாகச் செப்பனிட்டு பள்ளிக்கூடமாக மாற்றுகிறான். வீடு வீடாகச்சென்று பெற்றோர்களிடம் பேசி, வற்புறுத்தி, சோவியத் அரசின் உத்தரவைக் காண்பித்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வருகிறான். முன்பு பகல்வேளைகளில் வயலுக்குத் தேவையான சாணத்தைப் பொறுக்குவதற்காக ஸ்டெப்பிப் புல்வெளிகளில் அலைந்து திரிந்த அக்குழந்தைகள் துய்ஷேனின் வருகையால் புத்துலகைக் காணும் வாய்ப்பினைப் பெற்றனர்.

துய்ஷேன் ஆரம்பக் கல்வியினைக்கூட முறையாகக் கற்றிருக்கவில்லை. ஓரளவு எழுதவும், எழுத்துக்கூட்டிப் படிக்கவும் மட்டுமே தெரியும். ஆயினும், தனக்குத் தெரிந்தவற்றையேனும் அக்குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட வேண்டுமென்ற ஆர்வமே உந்து சக்தியாக இருந்து அவனை இயக்கியது. முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வந்திருக்கும் அவ்விளம் பிஞ்சுகளுக்குக் கல்வி புகட்டுவதில் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் ஈடுபட்டான். தங்களிடம் அன்பு பாராட்டி, இனிமையாகப் பழகிய அந்த இளம் ஆசிரியரிடம் பிள்ளைகளும் மிகுந்த நேசத்துடன் பழகினர்; ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

அல்தினாய் சுலைமானவ்னா - பெற்றோரை இழந்து உற்றாரின் 'பராமரிப்பில்' வளரும் அவ்வூரின் ஏழைச் சிறுமி. கற்றுக்கொள்வதில் ஆர்வமிக்க, துய்ஷேனின் அன்புக்குரிய மாணவி. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் வயதில் மூத்தவள்.

அனாதைக்குப் படிப்பெதற்கு? என்று அல்தினாயை ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரமாக மணம்செய்துவைக்க முடிவெடுக்கிறாள் அவளது வளர்ப்புத் தாய். இதனால் அதிர்ச்சியுற்ற அல்தினாய்க்கு ஆறுதல் கூறி அவ்வூரிலிருந்த அவளது பாட்டியின் வீட்டில் தங்கவைத்துப் பாதுகாக்கிறார், துய்ஷேன். ஆனால், குண்டர்களுடன் பள்ளிக்கூடத்துக்கே வருகிறாள் அவளது சித்தி. அல்தினாயை அவர்களுடன் அனுப்ப மறுத்துப் போராடும் ஆசிரியரைக் கடுமையாக அடித்து உதைத்து, கைகளை முறித்து, குற்றுயிரும், குலையுயிருமாக்கிவிட்டு அல்தினாயைத் தூக்கிச் செல்கின்றனர் அம்முரடர்கள்.

சோவியத் செம்படை வீரர்களுடன் சென்று அல்தினாயை மீட்டு வருகிறார் அவளது அன்பிற்குரிய ஆசிரியர் துய்ஷேன். அவளது பாதுகாப்புக்கருதியும், மேல்படிப்புக்காகவும் நகரத்துக்கு அனுப்பிவைக்கிறார். பாட்டாளிகளின் அரசு அந்த ஏழைச்சிறுமிக்குக் கல்வியூட்டி வளர்த்தெடுக்கிறது. கற்பது மிகவும் சிரமமாக இருந்தபோதிலும் அல்தினாயின் விடாப்பிடியான போராட்டம் அவளை மிகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது. தற்போது அல்தினாய் சுலைமானவ்னா ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்; தத்துவ விரிவுரையாளர்.

காலத்தின் கரங்கள் அவளது பிறந்த ஊரிலும் மாற்றத்தைக் கொண்டுசேர்த்தது. அவ்வூரின் மக்கள் இப்போது கூட்டுப்பண்ணையின் உறுப்பினர்கள். துய்சேன் ஊன்றிய கல்வியின் விதைகள் நல்ல விளைச்சலை உண்டுபண்ணியிருந்தன. பள்ளிப் படிப்பும், உயர்கல்வியும் கற்றவர்கள் பலர் தற்போது அவ்வூரிலிருந்தனர்.

தனது ஊரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தின் திறப்புவிழாவிற்கு விருந்தினராக வருகிறார் அல்தினாய். அப்போது தபால்காரர் துய்ஷேன் பற்றிய பேச்சும் எழுகிறது, அவ்விருந்தில்.

ஆம். அவ்வூரின் முதல் ஆசிரியரான அதே துய்ஷேன் தற்போது, தனது முதிய வயதிலும் கடமை தவறாத தபால்காரராகப் பணியாற்றி வருகிறார். இதை அறிந்துகொண்ட அல்தினாய் மிகவும் வேதனைப்படுகிறார். கல்வியின் விதைகளை அவ்வூரில் முதன்முதலாகத் தூவிய அந்த அற்புத மனிதனை இந்தப் புதிய கல்விக்கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைத்து உரிய மரியாதை செய்யத் தவறியது குறித்து அவரது மனம் வேதனைப்படுகிறது.

சீரழிவுக்குத் தள்ளப்பட்ட தனது வாழ்வை மீட்டெடுத்துப் புத்துயிரூட்டிய தனது முதல் ஆசிரியன் குறித்த ஒரு பின்தங்கிய கிராமத்தின் ஏழைச் சிறுமியின் நினைவுகளாக விரிகிறது இக்குறுநாவல்.

புறக்கணிப்பால் சோர்ந்துவிடாத செயலார்வம்; இன்னல்களைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் போராடும் வீரம்; குழந்தைகளின் மீதான நேசம்; அவர்களது கல்வி வளர்ச்சியின்பால் கொண்டிருந்த அக்கறை; தனது போதாமை, குறைபாடு குறித்த கழிவிரக்கம் ஏதுமின்றி மக்கள் நலன்பேணும் தனது அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் காட்டிய இலட்சிய உறுதி; பிரதிபலன் பாராமல் பணியாற்றும் கடமையுணர்வு; அனைத்துக்கும் மேலாக தனது வாழ்க்கையில் ஒளியேற்றிய ஆசான்.. என்று மாமனிதராக உயர்ந்து நிற்கிறார் அல்தினாயின், குர்கூரெவு கிராமத்தின் முதல் ஆசிரியன்.

மனிதர்கள் தமது உயரிய சிந்தனைகளால் சிறப்படைகிறார்கள். உயரிய சிந்தனைகள் உயர்வான சமூகத்தில் இயல்பாகவே உதித்தெழுகின்றன. பொதுவுடமையே அந்த உயர்ந்த சமூகம். முதல் ஆசிரியன் எனும் இந்நூல் அதில் விளைந்துள்ள இலக்கிய முத்து.

*****

முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது இன்றைய நம் வாழ்க்கை. சந்தையின் விதிகள் சகலத்தையும் மாற்றியமைக்கின்றன. சரஸ்வதியும்கூட ஒரு சரக்கு மட்டுமே.

முன்னாள் கள்ளச் சாராய ரவுடிகளும், திடீர் பணக்கார, அரசியல் ரவுடிகளுமே கல்விக்கோயிலின் இந்நாள் தெய்வங்கள். காசுள்ளவன் பக்கம் மட்டுமே திரும்புகின்றன கல்விக் கடவுளர்களின் கடைக்கண் பார்வைகள். உண்டியலில் கொட்டப்படும் காணிக்கையின் அளவைப்பொருத்தே அமைகிறது கல்விச் சேவையின் தரம். கல்வி வள்ளல்களின் கருணையில் பொங்கி வழிகிறது கல்வி வியாபாரம்.

மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத் திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே வேலை என்பதாக மாற்றப்பட்டுள்ளது ஆசிரியப்பணியின் வரையறைகள். மெத்தப் படித்திருந்தும் கல்வித்தந்தைகளின் பொறியில் -பொறியியல் கல்வி நிறுவனங்களில்- அகப்பட்ட கூலி அடிமைகளாக உழல்கின்றனர் இன்றைய பேராசிரியர்கள்.

கல்விச்சேவையில் கைகழுவிக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஆண்டுதோறும் வெட்டிக்குறுக்கப்படுகிறது கல்விக்கான மானியம். நாள்தோறும் இழுத்துமூடப்படுகின்றன அரசுப்பள்ளிகள். ஏழைகளின் எட்டாக்கனியாகத் தொலைவில் செல்கின்றன அருகமைப்பள்ளிகள். நல்லாசிரியர் விருதுகளை எள்ளி நகையாடுகின்றன சில அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சீரிய கந்துவட்டிப்பணி.

ஆதிக்கசாதி வெறியும், தனியார்மயக் கொள்ளையும் நிரம்பி வழியும் முதலாளித்துவக் குப்பைக்கிடங்கில் பற்றியெரியும் பார்ப்பனியத்தீ இன்றைய கல்விச்சூழலில் நச்சுக்காற்றைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது நம் குழந்தைகளின் கல்வி. பல அல்டினாய்கள் பிஞ்சு வயதில் கருகிகொண்டிருக்கின்றனர்.

முடைநாற்றமடிக்கும் இந்த விசக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு அப்துல் கலாமின் வல்லரசுக்கனவில் மயங்கிக் கிடப்பதா? அல்லது, அழுகி நாறும் இந்த சமூக அமைப்பைத் தூக்கியெறிந்து, நம் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப் போகிறோமா? என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.

ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367

மருதமுத்து,
பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

No comments: