Oct 13, 2015

மக்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்!



பெறுநர்

நிலைய அதிகாரி அவர்கள்,
விழுப்புரம் ரயில் நிலையம்,
விழுப்புரம்,

மதிப்பிற்குரிய நிலைய அதிகாரி அவர்களுக்கு,

பொருள் : ரயில்வே பிளாட்பாரத்தில் கெட்டு போன உணவை விற்றது தொடர்பாக
****
வணக்கம். கடந்த 30/09/2015 அன்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் என் குடும்பத்துடன் பயணம் செய்தேன்.  டிக்கெட் (PNR) எண்:  4524876184  - படுக்கை S7 35, 37, 38). 

இரவு உணவிற்காக ரயிலிலேயே உணவை விற்பவர்களை எதிர்பார்த்து காத்திருந்தோம். யாரும் வராத நிலையில், வேறு வழியில்லாமல் இரவு 8.30 மணியளவில் ரயில் விழுப்புரம் நிலையத்தில் நின்றது. அப்பொழுது ரயில்வே பிளாட்பாரத்தில் யூனிபார்ம் அணிந்தவர்கள் உணவு விற்றுக்கொண்டிருந்தனர்.  அதில் ஒருவரிடம் 4 இட்லிகளும் ரூ.30, ஒரு முட்டை பிரியாணியும்   ரூ. 50  மொத்தம் ரூ. 80க்கு வாங்கினேன்.  கடந்த காலங்களில் இப்படி பிளாட்பாரத்தில் வாங்கி மோசமான அனுபவத்தை பெற்றிருந்தேன்.  அதனால், விற்றவரிடம் “குழந்தைக்காக வாங்குகிறேன். நன்றாக இருக்கும்தானே!” என்றேன்.  அவரும் “நன்றாக இருக்கும்” என தெரிவித்தார்.

உடனே ரயில் கிளம்பியதால், ரயிலில் ஏறிவிட்டேன். உள்ளே போய் பிரித்து பார்த்தால், வாங்கிய முட்டை பிரியாணியிலிருந்து ஒரு மோசமான வாடை வந்தது.  வாயில் வைக்கவேமுடியாத அளவுக்கு கெட்டு போயிருந்தது. குழந்தைக்கு என கேட்டும் கூட எவ்வளவு கேவலமானவர்களாக இருந்தால் கெட்டு போன உணவை  விற்பார்கள் என எண்ணம் வந்தது. என் குழந்தைக்கு பசி வேறு. முட்டை  பிரியாணியை சாப்பிட்டே தீருவேன் என அடம்பிடித்த குழந்தையை சமாளிப்பதற்கு நாங்கள் திணறிப்போய்விட்டோம்.  இட்லி வேண்டாம் என அடம்பிடித்து, வெறும் வயிறுடன் தான் தூங்கியது.

பயணம் என்பது மிக முக்கியமானது ரயில்வேக்கு இது தெரியாததா? கெட்டு போன உணவை சாப்பிடுவதன் மூலம் மொத்த பயணத்தையே சீர்குலைத்துவிடும்.  அதுவும்  இரவு நேரத்தில் குழந்தைக்கு சாப்பிட்டு உடல்நலம் கெட்டுப்போனால் என்ன செய்வது?  எதைப்பற்றியும் சிந்திக்காமல், லாபத்தை மட்டுமே மனதில் வைத்து விற்பவர்கள் ஏன் இந்த பசியாற்றும் தொழிலுக்கு வரவேண்டும்?

பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும்  வேறு வேறு பயணிகள் தானே வருகிறார்கள். எவன் எக்கேடு கெட்டு போனால் என்ற சிந்தனை தானே! கெட்டு போன பொருளை விற்க தைரியம் வருகிறது.  இதே உள்ளூராக இருந்தால், இப்படி தைரியமாக விற்கமுடியுமா? மக்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.

உடனே எங்கள் கோச்சில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம், விசயத்தை விளக்கி யாரிடம் புகார் அளிப்பது? என கேட்டேன்.  கடைசியாக எங்கு இறங்குவீர்கள்? என கேட்டார்.  “கன்னியாகுமரி” என்றேன்.   அங்கு இறங்கியதும் நிலைய அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கடிதம் எழுதி கொடுங்கள் என்றார்.

கன்னியாகுமரி சென்றதும் இந்தி மட்டுமே தெரிந்த நிலைய அதிகாரியிடம், விசயத்தை விளக்கி புகார் கொடுக்கவேண்டும் என பேசினால்,  யாரிடமோ போனில் பேசியவர் “விழுப்புரம் சம்பந்தப்பட்ட டிவிஷன் வேறு! இந்த டிவிஷன் திருவனந்தபுரம் டிவிஷன்! நாங்கள் இது தொடர்பாக புகாரை பெற்றும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. அதனால் நீங்கள் விழுப்புரத்தில் தான் புகார் கொடுக்கவேண்டும்” என்றார். ”டிக்கெட் பரிசோதகர் இங்கு புகார் கொடுக்கலாம் என வழிகாட்டினாரே!” என்றதற்கு,  அவர் ”உங்களை தவறுதலாக வழிகாட்டியிருக்கிறார்” என்றார்.

நேற்று தான் சொந்த ஊர் திரும்பினேன்.  என்னை போல யாரும் கெட்டுப்போன பொருளை வாங்கி ஏமாறக்கூடாது.  விற்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.  இனிமேல் இப்படி யாருக்கும் விற்ககூடாது என்ற எண்ணத்தில் இந்த புகார் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். தமிழ் அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் குறைவு என்பதால், இதே புகார் கடிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் உங்கள் தலைமை அலுவலகத்திற்கும் பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன்.

இப்படிக்கு,

அமிர்தா
 

1 comment:

Anonymous said...

Sorry to hear :(

Seruppal adithalum thirundha mattargal. Kalikaalam.

- raja